ஷியாக்களை இலக்கு வைத்த தாக்குதல்: 40 பேர் கொல்லப்பட்டனர்
12-03-2017 11:45 PM
Comments - 0       Views - 29

சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில், ஷியா யாத்திரிகர்களை இலக்கு வைத்த இரட்டைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 40 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும் 120க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.  

குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு அருகிலுள்ள பள்ளிவாசலொன்றில் வழிபாட்டை மேற்கொள்ளவிருந்தவர்களே, தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.  

நேற்று (11) இடம்பெற்ற குறித்த தாக்குதலுக்கு, உடனடியாக எவரும் உரிமை கோரியிருக்கவில்லை.  

குறித்த தாக்குதலானது, தற்கொலைக் குண்டுதாரிகள் இருவரினால் நடாத்தப்பட்டுள்ளதாக, ஹிஸ்புல்லாவினால் நடாத்தப்படும் அல்-மனார் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது.  

இதேவேளை, சிரிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியில், யன்னல்கள் வெடித்திருந்த, மோசமான சிதிலமடைந்த 2 பஸ்கள் காண்பிக்கப்பட்டிருந்தன.  

டமஸ்கஸ்ஸின் பழைய நகரத்திலுள்ள ஏழு வாயில்களிலொன்றாகப் பெயரிடப்பட்டுள்ள பாப் அல்-ஸாஹிர் கல்லறைக்கு விஜயம் செய்வதற்காக, பஸ் நிலையமொன்றுக்கு யாத்திரிகர்கள் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே, தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  

முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற 10 நிமிடங்களில் இரண்டாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், முதலாவது தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வந்த சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.  

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிபகம், 44 பேர் இறந்ததாகத் தெரிவித்துள்ளதுடன், ஆபத்தான பல காயங்கள் காணப்படுவதன் காரணமாக, இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளது.  

சிரிய ஜனாதிபது பஷார் அல்-அசாட்டுக்கு, ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஷியா ஆயுததாரிகள் ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

"ஷியாக்களை இலக்கு வைத்த தாக்குதல்: 40 பேர் கொல்லப்பட்டனர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty