பா.ஜ.கவுக்கு தனியாளாக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மோடி
13-03-2017 01:21 AM
Comments - 0       Views - 40

இந்தியாவின் சனத்தொகை மிகவும் அதிகமான மாநிலமான உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும், முக்கியமான பலப்பரீட்சையாகக் கருதப்பட்டது. 

2014ஆம் ஆண்டில், தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பா.ஜ.க மீது, கடுமையான அழுத்தங்கள் காணப்பட்டன. குறிப்பாக, கடந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பணப்பெறுமதியழிப்புக் காரணமாக, மக்களது கோபத்தை, அக்கட்சி சந்தித்திருந்ததாகக் கருதப்பட்டது. 

இந்நிலையிலேயே, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடுமையான பிரசாரங்களில் ஈடுபட, நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் அதிகப்படியான பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் அதிக நேரத்தை அவர் செலவளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுமளவுக்கு, அங்கு அவரது பிரசாரம் காணப்பட்டது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான முடிவுகளின்படி, ஆட்சியமைப்பதற்குத் தேவையான 202 ஆசனங்களுக்குப் பதிலாக, அக்கட்சிக்கு 325 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இது, கடந்த தேர்தலில் கிடைத்த 48 ஆசனங்களோடு ஒப்பிடும்போது, 277 ஆசனங்கள் அதிகரிப்பாகும். 

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, கடந்த தேர்தலில் 224 ஆசனங்களைப் பெற்ற நிலையில், இம்முறை 47 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி, கடந்த முறை 80 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை 19 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. 

பணப்பெறுமதியழிப்புக் காரணமாக, மக்கள் மத்தியில் கோபத்தைச் சம்பாதித்திருந்த பா.ஜ.கவுக்கு, மக்கள் மீண்டும் வாக்களித்திருப்பது, பிரதமர் மோடி மீதான நம்பிக்கையின் காரணமாக மாத்திரமே என்று கருதப்படுகிறது. 

உத்தரப் பிரதேசம் தவிர, உத்தரகான்ட்டில், கடந்த முறை 32 ஆசனங்களைக் கொண்டிருந்த ஆளும் கட்சியான காங்கிரஸ், இம்முறை 11 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. 31 ஆசனங்களைக் கொண்டிருந்த பா.ஜ.க, ஆட்சியமைக்கத் தேவையான 36 ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களான 57 ஆசனங்களைப் பெற்று, பெரு வெற்றியீட்டியுள்ளது. 

எனினும் கோவாவில், பா.ஜ.கவுக்குப் பின்னடைவு காணப்பட்டது. கடந்த முறை 21 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்திருந்த அக்கட்சி, இம்முறை 13 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. காங்கிரஸுக்கு 17 ஆசனங்கள் கிடைத்தன. ஆட்சியமைப்பதற்கு, 21 ஆசனங்கள் தேவையாகும். 

பஞ்சாப்பிலும், அக்கட்சிக்கு இழப்பு ஏற்பட்டது. கடந்த முறை 68 ஆசனங்களைக் கொண்டிருந்த அக்கட்சி, இம்முறை 18 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. காங்கிரஸுக்கு 77 ஆசனங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 ஆசனங்களும் கிடைத்தன. 

மணிப்பூரில், பா.ஜ.கவுக்கு 19 ஆசனங்கள் அதிகரித்து, 21 ஆசனங்கள் கிடைத்தன. காங்கிரஸுக்கு 28 ஆசனங்கள் கிடைத்தன. ஆட்சியமைப்பதற்கு, 31 ஆசனங்கள் தேவையாகும்.

"பா.ஜ.கவுக்கு தனியாளாக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மோடி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty