2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடைத் தேர்தல் நடக்குமா? இரட்டை இலை தப்புமா?

Administrator   / 2017 மார்ச் 13 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்தாண்டு காலச் சட்டமன்ற ஆயுளுக்குள் மூன்றாவது சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்யும் தொகுதியாக இந்தச் சட்டமன்றத் தொகுதி மாறியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் “Anti- Sentiment” ஆக உருவாகியிருக்கிறது. 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமான தொகுதி என்றாலும், இப்போது அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள மூன்று அணிகள் அக்கட்சியை வலுவிழக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. 

இத்தொகுதியில் தி.மு.க நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், அ.திமு.க ஆறு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அ.தி.மு.க பலவீனப்பட்ட நேரங்களில் எல்லாம் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. 

உதாரணத்துக்கு 1989 அ.தி.மு.க “ஜானகி- ஜெயலலிதா” அணியாகப் பிளவு பட்டபோதும், 1996 இல் ஊழல் குற்றச்சாட்டுகளின் முகட்டில் இருந்ததாலும் அ.தி.மு.கவை இந்த தொகுதியில் தி.மு.க தோற்கடித்துள்ளது.  

அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் பிரபல நடிகர் ஐசரிவேலன் வெற்றி பெற்ற தொகுதி. அதன் பிறகு பெங்களூர் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா பதவி விலகி, மீண்டும் போட்டியிட்ட போது, வெற்றி பெற்ற தொகுதி இந்த ஆர்.கே. நகர் தொகுதி. 

இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிட்டு 9,710 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. என்றாலும், “நேர்மையான தேர்தல் முறையைக் கையாண்ட” மகேந்திரனுக்குக் கிடைத்த வாக்குகளே பொற்காசுகள் போல் அப்போது கருதப்பட்டன.

ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள் அனைத்து வகை தேர்தல் முறைகேடுகளையும் அதிகாரபலத்துடன் நடத்தி ஓர் இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்தார்கள். இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவில் மட்டுமல்ல- எந்தக் கட்சி வேட்பாளரும் பெறாத வாக்கு வித்தியாசத்தை ஜெயலலிதா பெற்றார்.  

அப்படிப் பலமிகுந்த ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் இப்போது “இரட்டை சிலை” சின்னம் யாருக்கும் போகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 

அ.தி.மு.கவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்படுகிறார். டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.தி.மு.க தான் ஒரிஜினல் அ.தி.மு.க என்று அவர்கள் தரப்பில் வாதிடப்படுகிறது. 

இன்றைய திகதியில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அது உண்மையும் கூட. 

ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க சட்ட விதிகளின்படி சசிகலா முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்றும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நியமித்த நிர்வாகிகள் மறுபடி பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் இருப்பார்கள் என்றும் வாதிட்டு வருகிறது. 

இதன்படி பார்த்தால் இரு அணிகளுமே “இரட்டை இலை” சின்னத்துக்குப் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதில் டி.டி.வி. தினகரன் சின்னம் கேட்டுக் கொடுக்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறதா அல்லது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உள்ள அவைத் தலைவர் “எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுங்கள்” என்று கேட்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறதா என்று தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு 12.4.2017 அன்று நடக்கப் போகிறது. ஆனால், வேட்பு மனுவை வாபஸ் வாங்க மார்ச் 27 ஆம் திகதி  கடைசித் திகதி. ஆகவே, இன்னும் 17 நாட்களுக்குள் “சின்னம் கேட்டுக் கொடுக்கும்” இரு அணிகளின் கடிதத்தின் மீது முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் காலஅவகாசம் போதுமா? அல்லது “முதலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவோம்.

பிறகு அது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, இரு அணிகளுக்குமே போட்டியிடுவதற்குத் தனித் தனி சின்னங்களைக் கொடுக்குமா என்பது எல்லாம் வரப்போகும் நாட்களில் தமிழக பத்திரிக்கைகளுக்குத் தலைப்புச் செய்திகளாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.  

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் “சின்னம்” தொடர்புடைய பனிப்போர் ஒரு புறமிருக்க, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா களத்தில் இறங்கினால் “ஓ.பி.எஸ்” மற்றும் “தினகரன் அணி” எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுகிறது. 

ஓ.பி.எஸ்ஸுக்குத் தீபா அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது ஆசை. ஆனால், தீபா ஓ.பி.எஸ்ஸின் தலைமையை ஏற்று, இந்த அணியில் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

இதை அந்த அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெளிவாகவே ஒரு பேட்டியில் கூறி விட்டார். 
அதேநேரத்தில் தீபாவைப் பொறுத்தமட்டில், சசிகலா மற்றும் தி.மு.க தவிர யார் ஆதரவு தந்தாலும் ஏற்றுக் கொள்வேன். 

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். அதன் சுருக்கம் என்னவென்றால் 

ஓ. பன்னீர்செல்வம் அணி தனக்கு இடைத் தேர்தலில் ஆதரவு தர வேண்டும் என்று தீபா எதிர்பார்க்கிறார். ஆகவே, தினகரன் அணியை எதிர்த்துப் போட்டியிடும் முடிவை தீபாவிடம் விடுவதா அல்லது தாமே முன்னின்று எதிர்த்துப் போட்டியிடுவதா என்பதை ஓ. பன்னீர்செல்வம் முடிவு செய்ய வேண்டும்.

அனேகமாக ஓ.பன்னீர்செல்வம் தன் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவார் என்றே இதுவரை எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு, தீபா அணிக்கும், ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் திசைமாறி விட்ட நிலையில், ஆளுங்கட்சி, அதிகாரம் ஆகிய இரண்டை மட்டுமே நம்பி ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது தினகரன் அணி. 

ஆனால், பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், அதிகார துஷ்பிரயோகத்தை அனுமதிக்குமா, அதிகாரிகளும் முன்புபோல் துணிச்சலுடன் தினகரன் அணிக்குத் தேர்தல் உதவிகளைச் செய்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

ஆகவே, அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் இன்றைக்கு எல்லா வகையிலும் பலவீனப்பட்டு நிற்கிறது. ஆனாலும் இடைத் தேர்தல் வெற்றியோ, தோல்வியோ அ.தி.மு.கவுக்குள் தோன்றியுள்ள “தீபா அணி”, “தினகரன் அணி”, “ஒ.பி.எஸ் அணி” ஆகிய மூன்று அணிகளுக்குள் எது செல்வாக்கு பெற்ற அணி என்பது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு ஆகிவிடும்.  

இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ம.தி.மு.கவிற்கோ, பாட்டாளி மக்கள் கட்சிக்கோ பலம் இல்லை. அந்தப் பலம் உள்ள கட்சியாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே இருக்கிறது. 

அதனால்தான், வேட்பாளர்களிடம் முதலில் விருப்பு மனு வாங்கும் கட்சியாக இன்றைக்கு தி.மு.க திகழ்கிறது. தி.மு.கவின் சார்பில் நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்து சோழன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியுற்றார். 

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெயலலிதா ஓர் இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். 

ஜெயலலிதாவுக்கே ஆர்.கே.நகர் இவ்வளவுதான் வாக்குகளை கொடுத்தது என்பதால் இந்தமுறை சரியான வேட்பாளரை களத்தில் நிறுத்தி, வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க தீவிரமாக இருக்கிறது. அதுபோன்றதொரு வெற்றி கிடைத்தால் அடுத்து, வெற்றி பெறப்போகும் கட்சி தி.மு.க என்ற இமேஜ் அக்கட்சிக்கு இலாபமாக இருக்கும்.  

ஆனால், தேசியக் கட்சிகளின் நிலை எப்படியிருக்கப் போகிறது? காங்கிரஸைப் பொறுத்தமட்டில் தி.மு.கவுடன் கூட்டணியாக இருக்கிறது. ஆகவே, அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். 

ஆனால், பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுத்த மட்டில், அ.தி.மு.க அழிந்து விட்டது. தி.மு.க அழிந்து கொண்டிருக்கிறது என்று, பா.ஜ.க மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து, இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று பா.ஜ.கதான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். 

ஆகவே, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மாற்று என்ற ஆயுதத்தை கையிலெடுத்து, 1989 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வாங்கிய வாக்குகள் போல், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் 20 சதவீத வாக்குகளை வாங்குமா என்ற கேள்வி பிறந்திருக்கிறது. 

கடந்த கால தேர்தல் முடிவுகள் திராவிட கட்சிகளில் ஒன்று பலவீனமாகும் போது இன்னொரு திராவிட கட்சி ஜெயிக்கும். ஆனால், தேசியக் கட்சிக்கு எப்போதும் இருப்பதை விட, கொஞ்சம் அதிக வாக்குகள் கிடைக்கும். 

அது மாதிரிச் சூழ்நிலை பா.ஜ.கவுக்கு, ஆர்.கே. நகர் தொகுதியில் கிடைத்தால்தான் “அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் மாற்று” என்று அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க முடியும்.  

ஆகவே, வருகின்ற வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமையிலான 
அ.தி.மு.க அரசாங்கத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடவில்லையென்றால், ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் தமிழக அரசியலில் பல சுவாரஸ்யமான முடிவுகளை அள்ளித்தரும் தேர்தலாக அமையும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு!

“இடைத் தேர்தல் நடக்குமா” “இரட்டை இலை” முடங்குமா என்பதெல்லாம் அடுத்து அரங்கேறப் போகும் காட்சிகளாக அமையும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .