செங்கலடி, வவுணதீவுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை
16-03-2017 10:24 AM
Comments - 0       Views - 46

-பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்

செங்கலடி மற்றும் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் ஆகியோர் அப்பிரிவுகளுக்கு புதன்கிழமை (15) சென்று பார்வையிட்டனர்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கொடுவாமடு, இலுப்பட்டிச்சேனை, கரடியனாறு போன்ற பகுதிகளுக்கும் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் ஆயித்தியமலை, நெல்லூர், மகிழவட்டவான், நரிப்புல்தோட்டம், மணிபுரம்
போன்ற பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொம்மாதுறைத்தீவுப் பகுதிக்கு நீர் விநியோகிக்கும்  பிரதான நீர்க்குழாயை கொடுவாமடுப் பகுதி ஊடாக  நீடிப்பதன் மூலம் நரிப்புல்தோட்டப் பகுதிக்கு நீர் விநியோகிக்க முடியும். இதன் ஊடாகப் பங்குடாவெளி, இலுப்படிச்சேனை மற்றும் அண்மித்த  பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மேலும், கரடியனாறு மற்றும்  இலுப்படிச்சேனைப் பகுதிகளில்; செயலிழந்து காணப்படும் கிராமிய நீர்வழங்கல் திட்டங்களை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
 

 

" செங்கலடி, வவுணதீவுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty