வீடு பெற்றுத்தருவதாக மோசடி; 2ஆவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்
18-03-2017 09:30 AM
Comments - 0       Views - 63

எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு, வீடு பெற்றுத் தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (17) உத்தரவிட்டார்.

சவளக்கடை 15ஆம் கொலனி பிரதேசத்தில் வசித்து வரும் குறித்த பெண்ணுக்கு,  வீடமைப்பு அதிகார சபையினால் தங்களுக்கு வீடு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென, தொலைபேசி ஊடாகத் தெரிவித்து உங்களுக்குரிய வீட்டினை முன்னுரிமைப்படுத்துவதற்கு ஒரு தொகைப் பணம் தேவைப் படுகின்றது.

முற்கொடுப்பனவாக 15,000 ரூபாய் பணத்தை, காசுக் கட்டளையாக அஞ்சல் அலுவலகத்தினூடாக, கிண்ணியா அஞ்சல் அலுவவலகத்துக்கு அனுப்ப வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குறித்த பெண், அவர்கள் வழங்கிய பெயர் விலாசத்துக்கு 15,000 ரூபாயைக் காசுக்கட்டளையை அனுப்பி வைத்தார். மீண்டும் அதே தொலைபேசி ஊடாக அப் பணம் போதாது மீண்டும் 15,000 ரூபாய் உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

அப்பெண் மீண்டும், குறித்த பணத்தையும் அஞ்சல் அலுவலகத்தினூடாக அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் எவ்விதத் தகவலும் கிடைக்காததையிட்டு, குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட போது, அவ் இலக்கம் துண்டிக்கப்பட்டதை அறிந்த பெண், சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் கிண்ணியா குறிஞ்சாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் முன்னர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அழைப்பினை மேற்கொண்ட தொலைபேசி உரிமையாளரான பொத்துவிலைச் சேர்ந்த இரண்டாவது சந்தேகநபரும், கைதுசெய்யப்பட்டு, கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக் முன்னிலையில் நேற்று (17) ஆஜர்செய்யப்பட்ட போது, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக, சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

"வீடு பெற்றுத்தருவதாக மோசடி; 2ஆவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty