டெங்கு தீவிரம்: கிண்ணியா பாடசாலைகளுக்கு நிதியொதுக்கீடு
18-03-2017 11:15 AM
Comments - 0       Views - 41

அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப்  பாடசாலைகளையும் சுத்தம் செய்து, மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக மாகாண கல்வித் திணைக்களத்தினால் விசேட நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

கிண்ணியாவில், டெங்குத்தாக்கம் அதிகரித்திருந்ததனால் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக எமது கல்வி வலயத்தின் பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வரவு வெகுவாகக் குறைவடைந்ததினால், பாடசாலையினை 3 தினங்களுக்கு மூட தீர்மானித்தோம் என அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் மூடப்பட்ட இந்த மூன்று தினங்களுக்கும் பொருத்தமான சனிக்கிழமைகளில் பதில் பாடசாலையினை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பாடசாலைகளினைச் சுத்தம் செய்து, மாணவர்கள் மத்தியிலுள்ள பீதியினை அகற்றி, கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக, பாடசாலைகளைச் சுத்தம் செய்துகொள்வதற்காக, மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 111 பாடசாலைகளுக்கு 6,000 ரூபாயும் 1C பாடசாலைகளுக்கு 7,000 ரூபாயும் 1AB பாடசாலைகளுக்கு 8,000 ரூபாயும்  என்ற அடிப்படையில் நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உடனடியாக இந்நிதிகளைக் கொண்டு, பாடசாலையின் சுற்றுச் சூழலலைச் சுத்தம் செய்து, திங்கட்கிழமை முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக நடத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, 66 பாடசாலைகளின் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

"டெங்கு தீவிரம்: கிண்ணியா பாடசாலைகளுக்கு நிதியொதுக்கீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty