‘கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடு’
20-03-2017 10:05 AM
Comments - 0       Views - 118

எஸ்.நிதர்ஸன்

“பிரச்சினைகளை நாட்டுக்குள் தீர்க்காது, வெளிநாடுகளிடம் சென்று கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடானது. வெளிநாடுகளால், உள்நாட்டுப் பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் தீர்வை ஏற்படுத்த முடியாது” எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி., “இன்றைய ஆட்சியாளர்கள் வெளிநாடுகளின் தாளத்துக்கு ஆட்டம் போடுகின்றனர்” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன், “கால அவகாசம் கேட்பது கூட, இலங்கையின் சொந்தக் கருத்தல்ல. அது அமெரிக்காவின் கருத்தாகும். அமெரிக்காவின் குரலாகத்தான் வெளிவிவகார அமைச்சரின் கருத்து ஜெனீவாவில் ஒலித்தது” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.   

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இதனைக் கூறினார்.   

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டில் பொருளாதாரம் மற்றும் ​இனப்பிரச்சினை என்பன பிரதான பிரச்சினைகளாக உள்ளன. அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் காரணமாக நாட்டுப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாமல் இருப்பதால், நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.   

கடன் சுமைக்கு முன்னைய ஆட்சியாளர்களே காரணமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். ஆனால், வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவே ஆட்சியில் இருந்து வருகின்றன.   

கடன்களைப் பெற்றது ஆட்சியாளர்களே. ஆனால், அதனை மக்கள் மீது சுமத்துவதற்கே முயல்கின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.   

ஆட்சியாளர்கள் மேலும் மேலும் கடன்களையே பெற்று வருகின்றனர். இதற்காக, எமது நாட்டை இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கின்றனர்.   

நான் கோப் குழுவின் தலைவராகச் செயற்பட்டபோது, பாரியளவிலான ஊழல் மோசடிகள் நடைபெறுவதனைக் கண்டுபிடித்திருந்தேன். அத்தகைய ஊழல் மோசடிகளில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளே ஈடுபட்டு வருகின்றனர்.   

இதிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். நாட்டில் முதலில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தாலே, நாட்டில் இருக்கின்ற கடன்களில் 30 சதவீதத்தைச் செலுத்த முடிமென என்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.   

எனவே, இந்த நாட்டைக் கொள்ளையடித்துச் சூறையாடும் அரசாங்கத்திடமிருந்து மக்கள் விடுபட வேண்டியது அவசியமாகும்.   

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் நிறைவடைந்திருக்கின்ற போதும், வட -கிழக்கிலுள்ள மக்களுடைய பிரச்சினைகள் இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை. இதனால், மக்கள் தாமாகவே தமது உரிமையைக் கேட்டுப் போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக, காணி விடுவிப்புக்கள் இல்லை. காணாமற்போனோருக்கான பதில் இல்லை. அரசியல் கைதிகள் விடுதலை இல்லை, யுத்தத்தால் விதவையாக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத் திட்டங்கள் எவையும் இல்லை.   இதனாலேயே மக்கள் வட -கிழக்கில் பரவலாகப் போராட்டத்தை ஆரம்பித்து வருகின்றனர். ஆனால், மக்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அவற்றைச் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.   

ஆனால், அவர்கள் அதனைச் செய்யத் தவறி வருகின்றனர். அதிலும், மக்களது காணிகளை விடுவிக்காது படையினர் நிலை கொண்டிருப்பதென்பது அக்காணிகளில் தொடர்ந்தும் படையினர் அங்கு குடும்பங்களாக நிலை கொள்ளப் போகின்றனரா, அங்கு குடும்பம் நடத்தப் போகின்றனரா என்ற கேள்விகள் எழுகின்றன” என அவர் மேலும் கூறினார்.  

"‘கால அவகாசம் கேட்பது வெட்கக்கேடு’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty