2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை  அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று (20) நடைபெற்றபோதே, அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக தலா 10 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்படுகின்றது. இதேவேளை, ஏனைய  மாவட்டங்களில்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகமாக வழங்கப்படுகின்றது.

எனவே, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மாவட்டத்தின்  நிலமையைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இது இவ்வாறிருக்க, எமது நாட்டின் அரசியலமைப்பின்படி இந்த நாட்டில் தமிழ் மற்றும் சிங்களமொழிப்  பிரயோகம் சம்பந்தமாக அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும்

தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கடிதங்கள் சிங்களமொழியில் அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்படுவதாக எமக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் பேசும் மக்கள் வாழும் மாகாணங்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்போது, தமிழ்மொழியிலும் அவசியம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் அரசாங்க அதிபர் கவனத்திற்கொள்ள வேண்டும்' என்றார்.  

'திருகோணமலையில் வன இலாகாவால் எல்லை இடப்பட்ட காணிகளுக்கான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் தங்களின்  காணிகளுக்குச் செல்லமுடியாது, தொழில் செய்யமுடியாது சிரமப்படுகின்றனர். எனவே,  அம்மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

'ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் திருகோணமலைக்கு 1,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம்  பல்வேறு வேலைத்திட்டங்கள்; மேற்கொள்ளப்படவுள்ளன.

கடலரிப்பு மற்றும் கடல்நீர் ஊருக்குள் புகுவது தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கும் திருகோணமலை நகரம் முதல் பத்தாம் குறிச்சி, வீரநகர், திருக்கடலூர், ஜமாலிய சல்லி ஆகிய பகுதிகள்வரை கல்வேலி அமைக்கப்படவுள்ளது.
திருகோணமலையின் வடக்கிலும் கிழக்கிலும் வந்தடைந்து கடலுடன் கலக்கின்ற மாகவலி கங்கைநீரை திசை திருப்பி விவசாயம் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தவும்; ஏனைய திட்டங்களைச் செயற்படுத்தவும்  இந்த நிதி பயன்படுத்தப்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .