1982 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 84)

- என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 

 

வெற்றியை நோக்கி ஜே.ஆர்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே அவசரப்பட்டு, அரசியல் யாப்புக்குத் திருத்தத்தைக் கொண்டுவந்து, ஜனாதிபதித் தேர்தலை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்கூட்டி நடத்த விளைந்ததே, அதில் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கருதியதனால் ஆகும். 

 ஜே.ஆருக்குப் போட்டிதரக் கூடிய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் ஜே.ஆர் அரசாங்கத்தினால் தள்ளப்பட்டிருந்தார்.  

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவோ, ஜே.வி.பி சார்பில் போட்டியிட்ட ரோஹண விஜேவீரவோ, ஏனைய வேட்பாளர்களான கலாநிதி. கொல்வின் ஆர்.டீ.சில்வாவோ, குமார் பொன்னம்பலமோ, வாசுதேவ நாணயக்காரவோ தனக்குப் போட்டியில்லை என்பதை ஜே.ஆர் நன்கறிவார்.   

உண்மையில் தன்னை எதிர்த்து அறுவர் போட்டியிடுவது, அதிலும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிடுவது தனக்குச் சாதகமானது என்பதையும் ஜே.ஆர் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்.   

எதிர்த்தரப்பு வாக்குகள் சிதறுவது தனக்குப் பலம் என்று அவர் அறிவார். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முறையைப் பொறுத்தவரை, அதில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெறவேண்டியது அவசியமாக இருந்தது.   

ஆகவே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வகையிலேயே அவர் தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தார். நிச்சயமான ஐக்கிய தேசியக் கட்சி வாக்குவங்கிகளில் அதிக கவனம் செலுத்தினார்.   

பொருளாதார அபிவிருத்தி, அபிவிருத்தியை நோக்கிய எதிர்காலம் என்ற தொனிப்பொருட்களை மக்கள் முன் கொண்டு சென்றார். கனகச்சிதமான முறையில் தன்னுடைய தேர்தல்ப் பிரசாரத்தை முன்னெடுத்தார்.   

இனப்பிரச்சினை, அதன் தீர்வு இது பற்றியெல்லாம் அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. தன்னுடைய நிச்சயமான வாக்கு வங்கியை பாதிக்கும் எந்த விசயத்தையும் அவர் செய்ய விரும்பவில்லை.  

காலம் ஒத்துழைக்கவில்லை

ஏறத்தாழ ஒரு வருட காலமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குமிடையே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றாலும் அவற்றால் எந்தச் சாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை.   

இதைப் பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடும் இலங்கையின் குறிப்பிடத்தக்க முக்கிய பத்திரிகை ஆசிரியர்களுள் ஒருவரான மேவின் டீ சில்வா, ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மிகத் திறமையான அரசியல்வாதிகள். ஆனால், நேரம் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டது என்றே சொல்லவேண்டும்.   

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தேர்தலைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கோ, தமிழர்களுக்கோ தீர்வு வழங்குவது என்பதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாத விடயமாகிப் போய்விட்டது.   

எந்த (சிங்கள) ஜனாதிபதியோ, பிரதமரோ, தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்த் தரப்புக்கு சலுகைகளை வழங்க முன்வரமாட்டார்கள்.   

அதுவும் குறிப்பாக வரலாற்று ரீதியில் சிக்கல்கள் நிறைந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பிலான சலுகைகளை வழங்குவது என்பது, அதுவும் பகிரங்கமாக வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது’ என்று இலங்கையின் இன- மைய வாக்கு வங்கி அரசியலின் அசிங்கமான யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  

இதன் விளைவாகத்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் இது, குமார் பொன்னம்பலத்துக்கும் செல்வநாயகம், சந்திரஹாசனுக்கும் ஓர் இடைவெளியை உருவாக்கித் தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.   

ஜே.ஆரின் பிரசார வியூகம்

ஜே.ஆரின் வெற்றிபற்றி எவருமே சந்தேகம் கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது உண்மை, ஆனால், அந்த அதிருப்தி ஜே.ஆரைத் தோற்கடிக்கப் போதுமானதாக இருக்கவில்லை அல்லது, அந்த அதிருப்தியை ஜே.ஆரைத் தோற்கடிக்கும் சக்தியாக மாற்றும் இயலுமை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இருக்கவில்லை.   

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இந்தத் தேர்தலானது ஜே.ஆருக்கு எதிராகத் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்தல் என்ற ஒரு கோணத்திலும் குமார் பொன்னம்பலம் வேண்டியது போல, தனிநாட்டுக்கான மக்களாணை என்ற இன்னொரு கோணத்திலும் அணுகப்படவேண்டியதாகவே இருந்தது.   

ஆனால், தமிழர் பிரதேசங்களிலும், ஜே.ஆரின் வாக்குவங்கி அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை. அதுபோல, ஹெக்டர் கொப்பேகடுவவுக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவு தமிழர் பிரதேசங்களில் இருந்தது.   

அரசமயமாக்கல், விவசாய மானியங்கள், அரிசி மானியங்கள் உள்ளிட்ட சிறிமாவின் சோசலிஸக் கொள்கைகள் மீது நாட்டம் கொண்ட மக்கள், ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்தார்கள்.   

இதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய கருவியாகக் கையாண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர், தமது ஆட்சியில் அரிசி பகிர்ந்தளிப்புக்கான பங்கீட்டு அட்டையை ஒத்த மாதிரி அட்டைகளை அச்சிட்டு அதை மக்களுக்கு வழங்கி, தமது வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ வெற்றி பெற்றால் மீண்டும் மானியங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரசாரம் செய்தார்கள்.   

மறுபுறத்தில் தனிநாட்டுக்கான மக்களாணை என்ற குமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கும் தமிழர் பிரதேசங்களில் ஆதரவு அலை இருந்தது. ஆனால், தமிழரிடையேயான கட்சிப் பாசறைப் பிளவுகள் குமார் பொன்னம்பலத்துக்கு எதிராக இருந்தமையையும் மறுக்க முடியாது.   

குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்கள் குமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தாலும், குமார் பொன்னம்பலத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை.   

இதுதான் கள யதார்த்தம்; ஆனால் தமிழ் மக்களிடையே குமார் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தார் என்பதை மறுக்க முடியாது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தேர்தலைப் புறக்கணித்தல் என்ற முடிவில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தது.  

தேர்தல் முடிவுகள்

இந்தச் சூழலில் 1982 ஒப்டோபர் 16 ஆம் திகதி தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்தன. 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 6,985 வாக்களிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட வாக்களிப்பில், 81,45,015 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 66,02,617 பேர் வாக்களித்திருந்தனர்,   
அதாவது வாக்களிப்பு வீதம் ஏறத்தாழ 81 சதவீதமாக இருந்தது.

1982 ஒக்டோபர் 22 ஆம் திகதி கொழும்பு நகர மண்டபத்திலிருந்து தேர்தல் ஆணையாளரினால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   

தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன செல்லுபடியான மொத்த வாக்குகளான 65,22,147 வாக்குகளில் 52.91 சதவீதமான 34,50,811 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ 39.07 சதவீதமான 25,48,438 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஜே.வி.பி வேட்பாளரான ரோஹண விஜேவீர 2,73,428 வாக்குகளையும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வேட்பாளரும் ஒரேயொரு தமிழ் வேட்பாளருமான குமார் பொன்னம்பலம் 1,73,934 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா 58,531 வாக்குகளையும் வாசுதேவ நாணயக்கார 17,005 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.   

தேர்தல் மாவட்ட முடிவுகளைப் பார்க்கும் போது, ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு அதிகூடிய பெரும்பான்மையாக 63.10 சதவீத வாக்குகள் நுவரெலிய மாவட்டத்தில் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  சௌமியமூர்த்தி தொண்டமானின் ஆதரவுக்கு இது நடந்திருக்காது என்பதை ஜே.ஆர் நன்கறிவார்.   

இதேவேளை ஜே.ஆர் ஒரு தேர்தல் மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட அதி குறைந்த வாக்குவீதமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20.54 சதவீத வாக்குகள் மட்டு​மே பதிவானது. ஏனைய எல்லா மாவட்டங்களிலும் ஜே.ஆர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமையுடன், மொத்தம் 22 தேர்தல் மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தை ஜே.ஆர் பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 ஹெக்டர் கொப்பேகடுவவைப் பொறுத்தவரையில் அவர் எந்தமாவட்டத்திலும் பெரும்பான்மையைப் பெறவில்லை. அத்துடன் களுத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெற்ற 44 சதவீத வாக்குகளே ஒரு மாவட்டத்தில் அவர் பெற்றுக்கொண்ட அதிக வாக்குவீதமாகும்.   

வேறெந்த மாவட்டத்திலும் ஜே.ஆரை விட அதிக வாக்குகள் பெறமுடியாத ஹெக்டர் கொப்பேகடுவ, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 35.46 சதவீத வாக்குகள் பெற்று, ஜே.ஆரை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.   

ரோஹண விஜேவீர, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை விட ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் எட்டு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வீதத்தையே பெற்றுக்கொண்டார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டும் 14.6 சதவீத வாக்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டார்.   

மறுபுறத்தில், குமார் பொன்னம்பலத்தைப் பொறுத்தவரை, அவர் மொத்தமாக நாடுமுழுவதும் 1,73,934 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட மொத்தச் செல்லுபடியான வாக்குகளான 2,18,003 வாக்குகளில் 40.03 சதவீதமான 87,263 வாக்குகளைப் பெற்று குமார் பொன்னம்பலம் யாழ். மாவட்டத்தில் முதன்மை இடத்தைப் பெற்றிருந்தார்.   

இரண்டாவது இடத்தை 77,300 வாக்குகளைப் பெற்று ஹெக்டர் கொப்பேகடுவவும், மூன்றாவது இடத்தை 44,780 வாக்குகளைப் பெற்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் பெற்றுக்கொண்டனர். 

மேலும் வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை குமார் பொன்னம்பலம் 16.29 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40.05 சதவீத வாக்குகளைப் பெற்று ஜே.ஆர் முதலிடத்தையும், 39.22 சதவீத வாக்குகளைப் பெற்று குமார் பொன்னம்பலம் இரண்டாவது இடத்த பெற்றிருந்தனர்.  

தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய குமார்

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை மீறித் தமிழ் மக்கள் கணிசமானளவில் தேர்தலில் வாக்களித்ததுடன், குமார் பொன்னம்பலத்துக்கும் கணிசமானளவில் தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகிறது.   

மொத்தம் 4,93,705 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைப் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,28,613 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.  

அதாவது ஏறத்தாழ 46.31 சதவீதமானோர் தேசிய ரீதியிலான 81 சதவீத வாக்களிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது பெருமளவு குறைவாயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்றளவிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் புறக்கணிப்புக்கோரிக்கையை மீறி 46.31சதவீதக வாக்காளர்கள் வாக்களித்திருந்தமையானது, தமிழ் மக்கள் கட்சி விசுவாசத்துக்கு அப்பால் அரசியலில் செயற்பட வல்லவர்கள் என்பதையும் பறைசாற்றி நின்றது.   

குமார் பொன்னம்பலம் என்ற ஆளுமை தமிழ் மக்களிடையே இந்தத் தேர்தல் மூலம் வலுவூன்றியதுடன், இலங்கைத் தமிழ் அரசியலில் தவிர்க்க முடியாததொரு ஆளுமையாக உருவெடுத்தார்.  

சில விமர்சகர்கள், இது தமிழ் அரசியலில் புதிதாக எழுந்திருந்த ‘ஏகத்துவத்தை’ அல்லது ‘ஒற்றுமை’யை சிதைத்து மீண்டும், இருபாசறை நிலையைத் தோற்றுவிக்கும் என்று தமது விமர்சனத்தை முன்வைத்தார்கள்.   

ஆனால், எந்தக் கடைக்கும், எதிர்க்கடை தேவை என்பது மறுக்கமுடியாத தேவையாகும். அரசியல் ரீதியான ‘தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கும்’ (checks and balances), மீளாய்வுக்கும் (scrutiny) இது அவசியமாகிறது.   

ஏகத்துவம் என்ற பதாகையின் கீழ், தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஏகபோக தனியுரிமையை ஒரு தரப்பு வைத்திருப்பதை விட, அத்தரப்பை தடைகளுக்கும் சமன்பாடுகளுக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தத்தக்க மறுதரப்பு ஒன்று இருப்பதே ஜனநாயக அரசியல் சூழலுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கும்.  

இத்தகைய வளர்ச்சியாகவே நாம் குமார் பொன்னம்பலத்தின் எழுச்சியைப் பார்க்க வேண்டும். குமார் பொன்னம்பலம் பெற்றுக் கொண்ட தேர்தல் முடிவுகள் பற்றி அமரசிங்கம் தன்னுடைய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பெற்றுக்கொண்ட வாக்குகளின்படி, அவர் தமிழ் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்து விட்டார். இந்தச் சக்தியை படுகொலையன்றி வேறெவ்வகையிலும் இல்லாதொழிக்க முடியாது’.  

 1982 ஒக்டோபர் 23 ஆம் திகதி ‘ட்ரிப்யூன்’ இதழில் அமரசிங்கம் இதனை எழுதியிருந்தார். இன்றிருந்து பார்க்கும் பொழுது, இவை எத்தகைய தீர்க்கதரிசன வார்த்தைகள் என்பது புரிகிறது.   

குமார் பொன்னம்பலம் தனது அரசியல் வாழ்வில் ஒரு பொழுதும் நாடாளுமன்றத்துக்கோ, எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்துக்கோ தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை.

ஆனால், தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவும் குறிப்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் பேரினவாத அரசியல் தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்திருக்கிறார்.   

அந்தச் சக்தியை, அன்று அமரசிங்கம் குறிப்பிட்டது போல, படுகொலையால் அன்றி வேறெவ்வகையிலும் யாராலும் அடக்க முடியவில்லை.  

(அடுத்த வாரம் தொடரும்)  


1982 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.