2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திரள முடியாத அடம்பன்

Administrator   / 2017 மார்ச் 21 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - முகம்மது தம்பி மரைக்கார் 

மதம் என்பது பொது மக்களுக்கான அபின் போன்றது’ என்றார் கார்ல் மார்க்ஸ்.   

இதில் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. ஆனால், அரசியல் என்பது கணிசமானோருக்கு மதம் போல் ஆகிவிட்டது.   
இதனால், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் விமர்சிக்கப்படுவதை, மத நிந்தனைபோல் தொண்டர்கள் பார்க்கின்றார்கள். 

தங்களின் அரசியல் கட்சியினுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, தெய்வ குற்றமாகி விடும் என்பது போன்ற மனநிலையில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.   

இந்த நிலைவரமானது, அறிவுசார் ரீதியில் அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமொன்றினைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்குப் பெரும் சவாலாக உள்ளது. மேலும், முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியொன்றினுடைய சாத்தியத்தினையும் இந்த நிலைப்பாடு தூரமாக்கிக் கொண்டிருக்கின்றது.  

கூட்டணியின் தேவை  

முஸ்லிம் கட்சிகளினுடைய கூட்டணியின் தேவை பற்றி, அந்தச் சமூகத்துக்குள் உரத்துப் பேசப்படுகிறது. தமிழர் கட்சிகளில் அதிகமானவை ஒன்றிணைந்து அரசியல் அரங்கில் செயற்படும்போது, முஸ்லிம் கட்சிகளுக்கு ஏன் முடியாது என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.   

முஸ்லிம் அரசியல் கட்சிகள் பற்றிய குறைந்தளவு புரிதலும், முஸ்லிம் சமூகம் பற்றிய அதீத ஆர்வமும் இந்தக் கேள்வியின் பின்புலத்தில் தொக்கி நிற்கின்றமையினை அவதானிக்க முடியும்.  

 தமிழர் கட்சிகளில் அதிகமானவை அமைச்சுப் பதவிகளுக்கும், அரசியல் சுகபோகங்களுக்கும் சோரம் போகாதவையாகும். ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகள் இதற்கு மறுதலையானவை. பிரிந்து நின்றால்தான் அரசியலில் அனுபவிக்கலாம் என்பதை, முஸ்லிம் கட்சிகள் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளன.  

ஆனாலும், இப்போதுள்ள நிலைவரம் முஸ்லிம் அரசியல் கூட்டணியொன்றுக்கான தேவையினை வலுவாகத் தோற்றுவித்திருக்கிறது. சமூக நலன் மற்றும் அரசியலில் திரட்சியான பலத்தினைப் பெற்றுக்கொள்தல் உள்ளிட்ட பல விடயங்களைச் சாதித்துக் கொள்வதற்காக, முஸ்லிம் கூட்டணியொன்றின் தேவை பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.   

அரசியலமைப்புத் திருத்தம், புதிய தேர்தல் முறைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும் ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அரசியல் தலைவர்களிடத்தில் இதற்கு ஈடான ஆர்வம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியதாகும்.  

அசாத்தியமாக்கிய அதாவுல்லா  

முஸ்லிம் அரசியல் கூட்டணியொன்றினை உருவாக்குவதற்கான முயற்சியொன்று 2008 இல் நடைபெற்றது. ‘உம்மா’ கட்சி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டது.   

அதனைத் தொடர்ந்து ‘கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம்’ அந்த முயற்சியினைத் தொடர்ந்தது. கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்கள் இருந்த நிலையில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடம் கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.   

அப்போது நடைபெறவிருந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் உட்பட, தொடர்ந்து வரும் அனைத்துத் தேர்தல்களிலும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் பிரமுகர்கள் ஒன்றிணைந்து, ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையினை கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் முன்வைத்தது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து செயற்படுகின்றமை ஆரோக்கியமானதல்ல என்று, கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்ததோடு, முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை அரசியலில் ஒன்றுபடுத்துவதற்கான பேச்சுகளையும் நடத்தியது. 

இதற்கிணங்க, முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுகள் நடத்தப்பட்டன. அந்தக் கட்சி சார்பாக தலைவர் ரவூப் ஹக்கீம், அப்போதைய தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் அன்றைய செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.   

கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனத்தினுடைய அப்போதைய தலைவராகப் பதவி வகித்த எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தினார்.   

மறுபுறமாக அப்போது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த பேரியல் அஷ்ரப், ரிஷாட் பதியுதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா, எம்.எஸ்.எஸ். அமீரலி, நஜீப் ஏ. மஜீத், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மயோன் முஸ்தபா உள்ளிட்டோருடனும் பேச்சுகள் இடம்பெற்றன.   

இந்தநிலையில், முஸ்லிம் கட்சிகள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்படுவதாயின், தேர்தல்களின்போது, என்ன சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்கிற கேள்வி எழுந்தது.   

அப்போது முஸ்லிம் காங்கிரஸின் சின்னமான மரம், நுஆ கட்சியின் புறா சின்னம் ஆகியவை தொடர்பில் பேசப்பட்டன. இந்த நிலையில், மக்களிடம் அப்போது வெகுவாக அறியப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என்று, கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் கருத்துத் தெரிவித்தது.  

முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிடலாம் என, பள்ளிவாசல்கள் சம்மேளம் தெரிவித்த கருத்து, அந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய அப்போதைய அமைச்சர் அதாவுல்லாவுக்குப் பிடிக்கவில்லை.   

அது குறித்து அவர் கோபம் கொண்டார். கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனமானது, முஸ்லிம் காங்கிரஸினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அதாவுல்லா, அந்தப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டார்.   

அத்துடன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றிய அந்த முயற்சி நின்று போனது. இதனையடுத்து வழமைபோல் முஸ்லிம் கட்சிகளும் பிரமுகர்களும் தங்களுக்கு வாசியான பாதைகளில் பயணிக்கத் தொடங்கினார்கள். 

மாற்றம் இதற்குப் பிறகு, முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவுக்கான முயற்சிகள் பெரிதாக இடம்பெறவில்லை. அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ஏ.எல்.எம். அதாவுல்லா, மிகவும் வெளிப்படையாகவே முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு மாறான கருத்துகளை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.   

“தலைவர்கள் ஒன்றிணையத் தேவையில்லை, மக்கள்தான் ஒன்றிணைய வேண்டும்” என்கிற தத்துவமொன்றினை முன்வைத்து, அதாவுல்லா பேசி வந்தார்.   

மேலும், “அரசியலில் முஸ்லிம்கள் தமது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது” என்று, ரி.பி. ஜாயா கூறியிருந்த கருத்தினை துணைக்கழைத்துக் கொண்ட அதாவுல்லா, “முஸ்லிம்கள் பிரிந்திருப்பதே அரசியலில் நன்மையானது” என்றும் கூறிவரத் தொடங்கினார்.   

இதனால், கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது, சாத்தியமானதொன்றாகத் தெரியவில்லை.   
இப்போது முஸ்லிம் அரசியல் கூட்டணியொன்றின் தேவைப்பாடு குறித்து மீண்டும் உரத்துப் பேசப்படுகிறது. “முஸ்லிம் தலைமைகள் பிரிந்திருக்கின்றமைதான் நல்லது” என்று கூறிவந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இப்போது ஒன்றிணைந்து செயற்படுவது குறித்துப் பகிரங்கமாகப் பேசுகின்றார்.   

கடந்த பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியானது, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு சில தெளிவுகளைக் கொடுத்திருக்க முடியும்.  

 நாம் முன்பொருமுறை எழுதியமை போன்று, அதாவுல்லாவுக்கு ஒரு தோல்வி அவசியத் தேவையாக இருந்தது. அரசியலில் அதாவுல்லாவுக்குக் கிடைத்த தொடர் வெற்றிகளினால் மாற்றுக் கருத்துகளை கவனத்தில் எடுக்கத் தவறியிருந்தார்.   

ஆனால், இப்போது தனது கொள்கைகளில் சிலவற்றினை அவர் திருத்தியமைக்கத் தொடங்கியிருக்கின்றார். அரசியலில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசி வருகின்றார்.  

அதாவுல்லாவின் இந்த மாற்றமானது, அவர் இழந்த அரசியல் அதிகாரங்களை மீளவும் அடைந்து கொள்வதற்கான முயற்சியாகும் என்கிற விமர்சனங்களும் உள்ளன.  

 இந்த விமர்சனங்களை உண்மைப்படுத்துவதும் பொய்யாக்குவதும் அதாவுல்லாவின் அரசியல் நடத்தையிலேயே தங்கியுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் மாற்று அணி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா உள்ளிட்டோர், முஸ்லிம் அரசியல் கூட்டணியொன்று தொடர்பில் சாதமாகச் சிந்திப்பதற்குத் தயாராக உள்ளனர் எனக் கூறப்படுகிறது.   

ஆனால், இவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்வருமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது. அவ்வாறு இணைந்து செயற்படுவதற்கு மு.கா இணங்கினாலும், தேர்தலொன்றின்போது எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்கிற விடயத்தில் இவர்களுக்குள் இணக்கம் ஏற்படுமா என்பது அடுத்த கேள்வியாகும்.  

பொதுச் சின்னம் பற்றிய பிரச்சினை  

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பொதுவான சின்னமொன்றின் கீழ் போட்டியிடும்போது, அந்தச் சின்னத்துக்கு உரித்தான அரசியல் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ், வேட்பாளர்கள் வந்து விடுவார்கள். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட, அவர்கள் மீது, குறித்த சின்னத்தைக் கொண்ட கட்சியின் செயலாளர் ஆதிக்கம் செலுத்த முடியும். இதனால், தமக்கு நம்பிக்கையற்ற கட்சியொன்றின் சின்னத்தின் கீழ், தேர்தலொன்றில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் கூட்டமைப்பாக ஒன்றிணையும் அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை.  

ஆனால், சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளுடன் இணைந்து, மேற்படி முஸ்லிம் கட்சிகளும், பிரமுகர்களும் தேர்தல்களில் களமிறங்கிய சந்தர்ப்பங்களில், சிங்களக் கட்சிகளின் யானை மற்றும் வெற்றிலைச் சின்னங்களில்தான் போட்டியிட்டனர்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் பிரமுகர்களுக்கும் அதுவொரு பிரச்சினையாகத் தெரியவில்லை என்பது முரண்நகையாகும்.   

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தினைத் தீர்த்துக் கொள்வது கடினமானதொரு காரியமல்ல. செயற்பாட்டு அரசியலில் ஈடுபடாத முஸ்லிம் கட்சியொன்றின் சின்னத்தின் கீழ், முஸ்லிம் கூட்டணி ஒன்றிணைந்து போட்டியிட முடியும். 

எதிரணிகளின் பொது வேட்பாளராகக் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டமை நினைவுகொள்ளத்தக்கது.  

இன்னொருபுறம், தேர்தல்களை மட்டும் மையப்படுத்திய முஸ்லிம் அரசியல் கூட்டணியினை ஆதரிக்க முடியாது என்கிற கருத்தும் முஸ்லிம் சமூகத்துக்குள் அதிகமாக உள்ளது.   

முஸ்லிம் சமூகம் தொடர்பான அத்தனை விவகாரங்களிலும் அக்கறையுடன் இணைந்து செயற்படுவதற்கான அரசியல் கூட்டணியொன்றுதான் முஸ்லிம் சமூக ஆர்வலர்களின் அவாவாக உள்ளது.   

போராட்ட காலங்களில் பிரிந்து செயற்பட்ட தமிழர் இயக்கங்களெல்லாம், ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுகின்ற நிலையில், அஷ்ரப் எனும் பெருந்தலைவருடைய முஸ்லிம் காங்கிரஸ் எனும் தாய் கட்சியிலிருந்து பிரிந்த முஸ்லிம் தலைமைகள், ஒரு கூட்டணியாக சேர்ந்தியங்க முடியாமல் திணறுகின்றமையானது வெட்கக்கேடான விடயமாகும்.  

எல்லை மீறும் கட்சி நலன்  

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினூடாக, இனப் பிரச்சினைக்குரிய தீர்வுகள் எட்டப்படவுள்ளன. அதேபோன்று புதிய தேர்தல் முறைமையும் கொண்டுவரப்படவுள்ளது.   

தீர்வுத் திட்டத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன என்பதை, தமிழர்கள் சார்பாக அவர்களின் ஒன்றிணைந்த அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.   

ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குள் ஒத்த கருத்துகள் இல்லை. வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதா இல்லையா என்பதில் கூட, முஸ்லிம் கட்சிகளுக்குள் ஓர் இணக்கப்பாடில்லை. ஒவ்வொருவரும் தமது கட்சி நலனை முன்னிறுத்தியே அதிகம் பேசுகின்றனர்.   

உத்திதேசிக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமையில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும் என்பதை, 04 பக்கங்களுக்குள் தமது பிரேரணையாக வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமது உட்கட்சிப் பிளவினையடுத்து எழுந்துள்ள தாருஸ்ஸலாம் விவகாரத்துக்குப் பதிலளிக்கும் பொருட்டு, 50 பக்கங்களில் புத்தகம் வெளியிட்டிருக்கிறது.   

சமூக விடயங்களுக்கும், தமது கட்சி விவகாரங்களுக்கும் முஸ்லிம் தலைமைகள் எவ்வாறான இடங்களை வழங்குகின்றன என்பதை, இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். அநேகமாக, முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இப்படியான மனநிலையுடன்தான் செயற்படுகின்றன.  

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பார்கள். மிடுக்கு என்றால் வலிமை, கம்பீரம் என்று பொருள்படும்.   
ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்தில் தமிழர் சமூகம் தோல்வியடைந்த பின்னரும், கம்பீரம் குலையாமல் இருப்பதற்கு, அவர்களின் அரசியல் ரீதியான கூட்டிணைவுதான் காரணமாகும். ஆயுதப் போராட்ட காலத்தில் விடுவிக்க முடியாத தமிழர்களின் காணிகளை, தமிழர்களின் ஒன்றிணைந்த அரசியல் மூலம் விடுவிக்க முடிந்திருக்கிறது.  

கிழக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை முஸ்லிம் சமூகம் பறிகொடுத்திருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 32 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.   

தமிழர் தரப்பு நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு சாதித்து வருகின்கின்றமையினைக் கூட, ஆளுந்தரப்பில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளால் செய்ய முடியவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.   

அரசியல் ரீதியாகத் தமிழர் சமூகம் ஒன்று திரண்டதும், முஸ்லிம் சமூகத்தினால் திரள முடியாமல் போனமையுமே இதற்கான காரணங்களாகும்.  

ஏதாவதொரு பொதுப் புள்ளியில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்று திரள வேண்டியமை காலத்தின் தேவையாகும். ஆனால், நாமெல்லாம் ஆசைப்படுகின்றமை போல், அத்தனை இயல்பாக அது நடந்து விடாது. அந்தப் புள்ளியினை நோக்கி, முஸ்லிம் அரசியல் தலைமைகளை மக்கள் நகர்த்த வேண்டும்.   

ஆட்சியுடனும் அதிகாரங்களுடனும் இருக்கும் தலைவர்களைத் தோற்கடித்து, வீதிக்குக் கொண்டு வரும் ஆற்றலுடைய மக்களால், தமது அரசியல் தலைவர்களை, ஒன்று சேர்ப்பதற்கு மட்டும் முடியாமலா போய்விடும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .