2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ட்ரம்ப் குழு - ரஷ்யா தொடர்பை விசாரிக்கிறது FBI

Gavitha   / 2017 மார்ச் 21 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில், ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் (FBI), விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, அப்பணியகத்தின் தலைவர் ஜேம் கோமி உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்தத் தொடர்புகள் தொடர்பாக காங்கிரஸ் விசாரணையில், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழு முன்னால் சாட்சியமளிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

ஜேம்ஸ் கோமி தவிர, தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் தலைவர் மைக் றொஜர்ஸும், சாட்சியமளித்தனர். இருவரும், சுமார் ஐந்தரை மணிநேரங்கள், சாட்சியமளித்தனர். 

இதன்போது ஜேம்ஸ் கோமி, 2016ஆம் ஆண்டுத் தேர்தலில், ஹிலாரி கிளின்டன் தோற்க வேண்டுமென, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நினைத்ததோடு மட்டுமல்லாமல், டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டுமென எண்ணினார் எனவும் குறிப்பிட்டார். 

ஹிலாரி கிளின்டனை, புட்டின் மிகவும் வெறுத்தார் எனக் குறிப்பிட்ட அவர், அதன் மறுபக்கமாக, தான் மிகவும் வெறுத்த நபருக்கெதிராகப் போட்டியிட்ட நபர் (ட்ரம்ப்), வெல்ல வேண்டுமென அவர் எண்ணினார் என்று குறிப்பிட்டார். புலனாய்வுச் சமூகங்களைப் பொறுத்தவரை, அது இலகுவாக முடிவாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஹிலாரியின் பிரசாரம் பாதிப்படைவதை, ரஷ்யா விரும்பியது என்பது ஒருபுறமிருக்க, தேர்தல் முடிவில், ரஷ்யா தாக்கம் செலுத்தியதா என்பது தொடர்பாக, புலனாய்வுக் குழுக்கள், இதுவரை முடிவெதனையும் எடுத்திருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

கடந்தாண்டு ஜூலை மாதத்திலிருந்து, தேர்தலில் தலையீடு செய்வதற்கு ரஷ்யா மேற்கொண்டுவரும் முயற்சிகள் சம்பந்தமாக, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம், விசாரணை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைக்குள், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இணைந்த செயற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். 

விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்பது தொடர்பாக, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம், வழக்கமாக வெளியில் கூறுவதில்லை என்ற போதிலும், இவ்விடயத்தை வெளிப்படுத்த, நீதித் திணைக்களத்தால் தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.   

‘ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை’

கடந்தாண்டு தேர்தல் காலத்தின்போது, ட்ரம்ப் கோபுரத்தை ஒட்டுக் கேட்பதற்கு, அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பணித்தார் என்ற, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எவையும் கிடையாது என, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் தலைவர் ஜேம்ஸ் கோமி ஏற்றுக் கொண்டார்.

ரஷ்யத் தலையீடுகள் தொடர்பாக காங்கிரஸ் விசாரணையில், அது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, “முன்னாள் நிர்வாகத்தால், ஜனாதிபதியை இலக்குவைத்து ஒட்டுக் கேட்டல் இடம்பெற்றது என்ற ஜனாதிபதியின் டுவீட்கள் தொடர்பில்: அந்த டுவீட்களுக்கு ஆதாரம் வழங்கும் தகவல்கள் எவையும் என்னிடம் இல்லை. மத்திய கூட்டாட்சிப் பணியகத்தில் நாங்கள், கவனமாக ஆராய்ந்துள்ளோம். நீதித் திணைக்களத்திலும் அதன் ஏனைய பிரிவுகளிலும், அதே பதில் தான் உள்ளது என, உங்களிடம் பகிருமாறு, அத்திணைக்களம் என்னிடம் கேட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்பான “அரசாங்கத் தொடர்பாடல்கள் தலைமையகம்”, இவ்வாறான ஒட்டுக்கேட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது எனவும் முன்னாள் நிர்வாகத்தால் அது கோரப்பட்டது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாகவும் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த, தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் தலைவர் மைக்கல் றொஜர்ஸ், ஐந்து கண்கள் என அழைக்கப்படும் புலனாய்வுகளைப் பரிமாறும் ஒப்பந்தங்களை, அவ்வாறான கோரிக்கையொன்று மீறும் எனத் தெரிவித்ததோடு, அவ்வாறான நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்பு முகவராண்மை ஈடுபட்டது என்பதற்கான ஆதாரம் கிடையாது எனத் தெரிவித்ததோடு, நாட்டின் நெருக்கமான தோழமை நாடொன்றை (பிரித்தானியா), இந்தக் கருத்து எரிச்சல்கொள்ள வைக்கிறது என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .