2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹைட்ரோ கார்பன் திட்டம்: 2ஆவது நாளாக தொடர்கிறது உண்ணாவிரதம்

Gavitha   / 2017 மார்ச் 25 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகாட்டில் 2ஆவது நாளாகவும்,  பொது மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து அப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும், வடகாட்டிலும் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி, வடகாட்டில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அப்பகுதி மக்களும் சுற்று வட்டார கிராம மக்களும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை எனக்கூறி, நேற்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்கள பந்தலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வடகாட்டைச் சேர்ந்த ஐந்​து பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், வடகாடு, வாணக்கான்காடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றிவிடுவோம் என்று, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், எழுத்து பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று (25) 2ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .