2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

12 மீனவர்கள் கைதாகினர்

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர் என்று, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவுக் கடற்பரப்புக்கு அண்மையாக இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்த அவ்வூடகங்கள், அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவித்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும், காங்கேசன்துறைத் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவித்த அதிகாரிகள், சனிக்கிழமை, பின்னிரவு நேரத்தில் இவர்கள் கைதாகினர் எனத் தெரிவித்தனர்.

அதற்கு முன்னைய இரவில், இராமேஸ்வரத்திலிருந்து 500 படகுகளில் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 2,000 மீனவர்கள், கடற்படையினரால் விரட்டப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்திய இந்திய ஊடகங்கள், 400 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 2,000 தமிழ் மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால், பியர் போத்தல்கள், கற்கள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர் என்று தெரிவித்தன. அவர்கள், தனுஷ்கோடிப் பிராந்தியத்துக்கு அருகில் வைத்துத் தாக்கப்பட்டனர் என்றும் அவை தெரிவித்தன.

இந்தியாவைச் சேர்ந்த மீனவரொருவர், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில்  சிக்கிப் பலியாகினார் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான மீனவர் பிரச்சினை, அண்மைய நாட்களில், முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது.

இம்மாதம் 14ஆம் திகதி, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 மீனவர்களை, இலங்கை அரசாங்கம் விடுவித்திருந்தது. ஆனால், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள 12 மீனவர்கள் உள்ளடங்கலாக, 38 தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .