2026 ஜனவரி 07, புதன்கிழமை

‘தண்ணீர்மட்டும் குடித்தால் விமலுக்கு பெரும் ஆபத்து’

Gavitha   / 2017 மார்ச் 28 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதியான விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

உண்ணாவிரதப் போராட்டத்தில் குத்தித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (27) சென்று பார்வையிட்டனர். இதன்போதே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவர் முயற்சித்தால், அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியன, குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்துவிடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.  

தண்ணீரை மட்டும் பருகிக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை நான்கு நாட்களுக்கு மட்டுமே பேணமுடியும். அதன் பின்னர், அவதானமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் விமல் வீரவன்ச, மெதுவாகப் பேசுகின்றார் என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்ற விமல் வீரவன்ச எம்.பியின் இரத்த மாதிரி, வெளிநபரின் கைகளுக்கு சென்றமை எவ்வாறு என்பது தொடர்பில், சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவு விசேட விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.  

எம்.பியின் இரத்த மாதிரியை, வெளியில் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, சிறைச்சாலை வைத்தியசர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும் இவ்வாறான நிலையில், எவ்வாறு வெளியில் பரிசோதனை நடத்தப்பட்டது என்பது தொடர்பிலும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.  

சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கைதிகள், தங்களுடைய இரத்த மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்துவதாயின் அதனை அரசாங்க வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளவேண்டும். அதேபோல, சிறைச்சாலை அதிகாரிகளினால்தான் கட்டாயமாக அந்த இரத்த மாதிரியும் எடுத்துச்செல்லப்படவேண்டும். 

எனினும், விமல் வீரவன்சவின் இரத்தமாதிரியானது வெளிநபரொருவரினால் வெளியில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அவர், விமல் வீரவன்சவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது என்றும் சிறைச்சாலைகள் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.  

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில், உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்கவினால், சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த விவகாரம் தொடர்பில், சுகாதார அமைச்சின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .