2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் உலக நாடக தின விழா 2017

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்  

உலக நாடக தின விழா 2017இன் ஆரம்ப விழா, மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், அதன் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில், நேற்று ஆரம்பமானது.

உலக நாடக தினத்தைச்  சிறப்பிக்கும் முகமாக, இவ்விழாவை,  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளை புதன்கிழமை வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், கலந்துரையாடலும் நாடகங்களும் இடம்பெறவுள்ளன.

ஆரம்ப தின நிகழ்வு,  நேற்றுக் காலை, நிறுவகத்தின் இராசதுரை அரங்கில், பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரி.ஜெயசிங்கம் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக, மூத்த நாடகக்கலைஞர்களான க.பாலேந்திரா, திருமதி ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வுகளையடுத்து,  நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் ஞா.ஜெயரஞ்சனியின் நெறியாள்கையில் “ஆரோடு நோகேன்”  மற்றும் விரிவுரையாளர் தி.தர்மலிங்கத்தின் நெறியாள்கையில் “கட்டவிழ்ப்பு” ஆகிய நெடு நாடகங்கள், எஸ்.பொ.அரங்கில்  அரங்கேற்றப்பட்டன.

போருக்கு முந்திய, போருக்குப்பிந்திய நாடகச் செயற்பாடுகளை, எதிர்கால சந்தத்தியினருக்கு அறிமுகப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டு நாடக விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், வட்டமேசை மாநாட்டுக் கலந்தரையாடலும், மாலை நேரங்களில் நாடகங்களும் இடம்பெறவுள்ளன.

இறுதி நாளில், பிரபல நாடக இசையமைப்பாளர் கண்ணன் மாஸ்டரின் அரங்கப்பாடல்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த 3 நாட்களிலும் நிறுவகத்தின் விரிவுரையாளர்களின் நெறியாள்கையில் உருவான 8 நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இன்று (28) போர்க்காலத்து, போருக்குப்பிந்திய ஈழத்தமிழர் அரங்கு எனும் தலைப்பில் வட்ட மேசை மாநாடு காலை 9.30 முதல் 12 மணிவரை நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிமுதல் 8 மணிவரை விரிவுரையாளர் க.மோகனதாசனின் நெறியாள்கையில் “வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள்” சிறுவர் நாடகம், உமா சிறிசங்கரின் நெறியாள்கையில் 'அடையாளம்' குறுநாடகம், சி.துஜான், பெ.கோகிலவாணி ஆகியோரின் நெறியாள்கையில் 'கூர்' குறுநாடகம் என்பன அரங்கேற்றப்படவுள்ளன.

இறுதிநாளான நாளை புதன்கிழமை, அரசரெட்ணம் அண்ணாவியார் அரங்கில், “ஈழத்து நவீன அரங்கு இன்னும் இனியும்” என்ற தலைப்பில் வட்ட மேசை மாநாடு நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிமுதல் 8 மணிவரை, விரிவுரையாளர் பா.கிருஸ்ணவேணியின் நெறியாள்கையில் 'வெள்ளை மனம்' குறுநாடகம், கா.அற்புதனின் நெறியாள்கையில் 'எச்சங்கள்' நெடு நாடகம் ஆகியன அரங்கேற்றப்படவுள்ளதுடன், பிரபல நாடக இசையமைப்பாளர் கண்ணன் மாஸ்டரின் அரங்கப்பாடல்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி முதல் ஏப்ரல் 2ஆம் திகதி வரை, உலக அரங்க விழா நிகழ்வுகள், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் மற்றும் கொழும்பு அரங்க விழாக்குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ளன.

இதில், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்களின் நெறியாள்கையில் உருவான 'வீரத்தாயும் அவளது பிள்ளைகளும்', 'சவால்', 'பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி' ஆகிய 3 நாடகங்களும், இந்தியாவின் 'இமான் இமான் பாணி', 'இன் ரான்சிஸ்ட்' ஆகிய நாடகங்களும், ஜேர்மனியின் 'ஒப்பிக்காசு' எனும் நாடகமும் அரங்கேறவுள்ளன.

இந்த உலக அரங்க விழாவானது, கொழும்பில் நடைபெறவுள்ள கொழும்பு அரங்க விழாவின் ஆரம்ப நிகழ்வாகவும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .