2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சமூக நல்லிணக்கச் செயற்பாடுகளை ஏற்படுத்த மட்டு. சர்வமதப் பேரவை தீர்மானம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 28 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்காக மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை சில விடயங்களில் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது எனத் அப்பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன், இன்று (28)  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, மட்டக்களப்பில்; சமய, சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக மாவட்ட சர்வமதப் பேரவை மூன்று பிரதான விடயங்களில் கவனம் செலுத்தத்  தீர்மானித்துள்ளது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தூண்டப்படுவதால், அவர்கள் ஓய்வின்றியும்; தேக ஆரோக்கியமின்றியும் பாதிப்பை எதிர்கொள்வது ஒரு புறமிருக்க, ஆன்மிக நெறிப்படுத்தல், தியானம் போன்றவை அவர்களுக்கு இல்லாமை  காரணமாக நெறிபிறழும் நிலையும் வன்முறைகளும் ஏற்பட வழி ஏற்பட்டுள்ளது.

எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புகளையும் சட்டபூர்வமாகத் தடைசெய்வதோடு, அன்றையதினம்; மாணவர்களுக்கு மன அமைதி தரக்கூடிய ஓய்வு,  தத்தம் மத வழிபாட்டு அனுஷ்டாங்கள், தியானம், பிரார்த்தனை  ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும். இது சட்டம் ஆக்கப்படவும் வேண்டும்.

மேலும், மட்டக்களப்பில் மதுபானசாலைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக, கலாசார விழுமியப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இது பற்றிய  எதிர்ப்புகளை அதிகாரத் தரப்பினர் உதாசீனம் செய்யாது அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பில் சில மதப் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெறும் முரண்பாடுகள் காரணமாக சடலங்களை அடக்கம் செய்வதிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. சிலவேளைகளில் இப்பிரச்சினை வன்முறையாக மாறி மக்கள் மத்தியில் அச்சத்தையும் அமைதி இன்மையையும் தோற்றுவிக்கின்றன.
இவ்வேளையில், மட்டக்களப்பில் எங்காவது ஓரிடத்தில் எந்த மதத்தினராலும் உரிமை கோர முடியாத பொதுமயானம்  இருப்பின், மரணித்தவர்களை  அங்கு அடக்கம் செய்யலாம். இதற்குரிய ஏற்பாட்டை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
வாகரை, வாழைச்சேனை, சந்திவெளி உள்ளிட்ட பல இடங்களில் சடலங்களை மயானங்களில் அடக்கம் செய்வதில் சர்ச்சைகள் காணப்படுகின்றன. இது சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கின்றது.
எனவே, இது தொடர்பில் சகலரும் அக்கறை எடுக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .