2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடுப்பு, கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகொலை

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், காமினி பண்டார

சவூதி அரேபியா, ரியாத் நகரிலுள்ள வீடொன்றில்,  பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணத்தில், சந்தேகம் நிலவுவதாகவும் இதுத் தொடர்பில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அப்பெண்ணின் உறவினர்கள் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இடுப்பு, கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதனாலேயே, தனது சகோதரி உயிரிழந்துள்ளதாக மேற்படி பெண்ணின் சகோதர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை, பெரிய சூரியக்கந்தையைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவல்லி (வயது 41) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம், கடந்த 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு பிள்கைளின் தாயான மேற்படிப் பெண், குடும்ப வறுமைக் காரணமாக,  கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம், சவூதி அரேபியாவுக்கு,  பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இவரது கணவர் 9 வருடங்களுக்கு முன்பே கைவிட்டுச் சென்றநிலையில்,  தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே இவர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இவ்வாறு சவூதி அரேபியாவுக்குச் சென்ற இவர், ஆறு மாதங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதன்போது அவர், தான் பணியாற்றும் வீட்டில், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக,   குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவரிடமிருந்து எவ்விதத் தொடர்புகளும் இல்லை என அப்பெண்ணின் இளைய சகோதரனான பழனியாண்டி பரமசிவம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2016.11.01 ஆம் திகதி, சவூதி நகரிலுள்ள “ஒலேயா பாபா” தடுப்பு மையத்திலிருந்து, மேற்படி நபரின் வாட்சப் இலக்கத்துக்கு தகவலொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அத்தகவலில் “உங்களது சகோதரி உயிரிழந்துவிட்டார்” என்றும் “இத்தடுப்பு மையத்தில் இலங்கையைச் சேர்ந்த பல பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்” என்றும்  குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

இதற்கமைய, மேற்படி பெண் உயிரிழந்தததை, சவூதியிலுள்ள இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  2016.11.08 ஆம் திகதி, உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் சடலம் நான்கரை மாதங்களுக்குப் பின்னர்,  இலங்கைக்கு கடந்த 25 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்ததாக, சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இடுப்பு மற்றும் கழுத்து ஆகியப் பகுதிகளில், கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே, இவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது சகோதரியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பெண்ணின் சகோதரன்   முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .