2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கும்புறுமூலை விவகாரம்: குடியை கெடுக்குமா நல்லாட்சி

Administrator   / 2017 மார்ச் 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்  

முரண்நகை’ என்று தமிழில் ஒரு சொல் உள்ளது. முரண்பாண்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை என்பது இதன் அர்த்தமாகும். ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது சிவன் கோயில்’ என்பதில் முரண்நகை உள்ளது.   

அரசியலில் முரண்நகைக்கு பஞ்சமேயில்லை. போதையற்ற நாட்டினை உருவாக்குவது, தனது இலட்சியங்களில் ஒன்றெனக் கூறும் நல்லாட்சி அரசாங்கம், மட்டக்களப்பு, கும்புறுமூலை பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைப்பதற்கு வரிச் சலுகையுடன் அனுமதியளித்துள்ளமையானது, சமகால அரசியல் முரண்நகையாகும்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் உள்ளது கும்புறுமூலை. தமிழர்கள் வாழும் இந்தப் பகுதியிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.   

கும்புறுமூலையில் மதுபான உற்பத்திசாலை ஒன்றினை அமைக்கும் பொருட்டு, கட்டட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி மதுபான உற்பத்திச்சாலையை கொழும்பிலுள்ள பிரபல மதுபான உற்பத்தி நிறுவனம் அமைக்கவுள்ளது. நாட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ள மதுபான உற்பத்திசாலைகள் 24 இல் இந்தக் கம்பனியும் ஒன்றாகும்.  

நல்லாட்சி அரசாங்கத்தின் 2017 ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்டத்தில், முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் வரிச் சலுகைத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டது.

ஆகக்குறைந்தது 450 கோடி ரூபாய் பெறுமதியுடைய நிலையான முதலீட்டில், 250 பேருக்குக் குறையாதவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் தொழில் முயற்சிகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.  

 குறித்த தொழில் முயற்சிகள் ஊவா மற்றும் கிழக்கு மாகாண எல்லைகளுக்குள் அமைய வேண்டுமென்பது மற்றுமொரு நிபந்தனையாகும்.

இந்த வரிச்சலுகைத் திட்டத்தினைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, இந்த மதுபானக் கம்பனி, மட்டக்களப்பு, கல்குடாப் பகுதியிலுள்ள கும்புறுமூலையில், சுமார் 19 ஏக்கர் நிலப்பரப்பில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.   

இலங்கையை போதையற்ற நாடாக மாற்றப் போவதாக, நல்லாட்சி அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்கிணங்க, புகைத்தல் பழக்கத்தை மக்களிடமிருந்து ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஒரு பக்கமாகப் புகைத்தல் எனும் போதைப் பழக்கத்தினை இல்லாமலாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவரும் ஆட்சியாளர்கள், 450 கோடி ரூபாய் முதலீட்டில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைப்பதற்கு, வரிச் சலுகையுடன் அனுமதியளித்துள்ளமையானது ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டமை போல், முரண்நகையான செயற்பாடாகும்.   

அதேவேளை, போதையற்ற நாட்டினை உருவாக்கப் போவதாக நல்லாட்சியாளர்கள் செய்து வரும் பிரசாரம் தொடர்பிலும் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.  

நாட்டில் அதிகமான மதுப்பாவனையினைக் கொண்ட மாவட்டங்களில் மட்டக்களப்பு பிரதானமானதாகும். அந்த மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் நுகர்கின்றவர்களில் அதிகமானோர், குறைந்த வருமானத்தினைக் கொண்டவர்களாவர்.

யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் அதிகமாகும். இவ்வாறானதொரு மாவட்டத்தில்தான் பாரிய மதுபான உற்பத்திச்சாலையொன்றினை அமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதியளித்திருக்கிறது.  

ஒரு நிறுவனத்தினை ஆரம்பிப்பதாயின் அதற்கு ஏராளமான சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். வீதியோரக் கடையொன்றினைக் கூட, நினைத்த மாத்திரத்தில் அமைக்க முடியாது.

இவ்வாறானதொரு நிலையில், கும்புறுமூலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபான உற்பத்திசாலைக்கான கட்டட நிர்மாண வேலைகள், ஏராளமான சட்ட விதிமுறைகளை மீறிய நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  
கும்புறுமூலை மதுபான உற்பத்திசாலைக்கான கட்டடத்தினை நிர்மாணிப்பதற்காக, கிழக்கு மாகாணசபையில் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை. 

அதேவேளை, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் அமர்வில், குறித்த மதுபான உற்பத்திச்சாலையின் கட்டட நிர்மாண நடவடிக்கைகளைத் தடைசெய்து ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் பிரதி, கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.  
கிழக்கு மாகாண சபையின் மேற்படி தடைத் தீர்மானம் மற்றும் கோரளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் ஆகியவற்றுக்கு இணங்க, குறித்த மதுபான உற்பத்திச்சாலையின் கட்டட நிர்மாண வேலைகளைத் தடைசெய்து, கோரளைப்பற்று பிரதேச சபையினால், குறித்த மதுபானக் கம்பனிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.   

இதனையடுத்து, பிரதேச சபையின் மேற்படி தடைத் தீர்மானத்துக்கு எதிராக, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து, அந்த மதுபான உற்பத்தி நிறுவனம், தனது சட்டத்தரணியூடாகக் கோரளைப்பற்று பிரதேச சபையின் செயலாளருக்குக் கடிதமொன்றினை அனுப்பி வைத்தது.  

இதன் பின்னர், கோரளைப்பற்று பிரதேச சபை, தனது சட்டத்தரணியூடாக கடிதமொன்றினை குறித்த மதுபானக் கம்பனிக்கு அனுப்பி வைத்தது. அதில், குறித்த கட்டட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியதோடு, பிரதேச சபையின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியாதெனவும் தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில், குறித்த மதுபான உற்பத்திச்சாலையின் கட்டட நிர்மாண வேலைகள், எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் சூழ்நிலையிலும் இடம்பெறா வண்ணம் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்றுக்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு பணிப்புரை விடுத்ததாக, கோரளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சஹாப்தீன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, குறித்த கட்டட நிர்மாணத்தினைத் தடைசெய்வதற்கு, நீதிமன்ற அனுமதி பெறப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

இதேவேளை, குறித்த கட்டட நிர்மாணத்துக்கு எதிராக, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளர் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.  

குறித்த மதுபான உற்பத்திசாலையின் கட்டட நிர்மாணத்தினைத் தடைசெய்வதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மானித்த பிறகும், அந்தக் கட்டடம் அமையும் பகுதியினை நிருவகிக்கும் அதிகாரத்தினைக் கொண்டுள்ள பிரதேச சபையின் தடையுத்தரவை மீறிய நிலையிலும், சம்பந்தப்பட்ட கட்டட நிர்மாணம் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, இதற்குப் பின்னாலுள்ள கரங்களின் மிகப் பலம் பொருந்திய அரசியல் அதிகாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அத்தனை கடினமான காரியமல்ல.  

மதுபானம் என்பது எந்தவிதத்திலும் நன்மை தருகின்றதொன்றல்ல. மதுபானத்தை நுகரும் சமூகங்கள் கலாசார விழுமியங்களிலும், நற்பண்புகளிலும் தரம் தாழ்ந்து போய்விடும்.   

போதை தலைக்கேறிய சமூகத்தினால், ஏனைய நல்ல விடயங்கள் குறித்து சிந்திக்க முடியாது. அனைத்துச் சமூகங்களுக்குள்ளும் போதைப் பழக்கம் உள்ளது. சில சமூகத்தவர்கள் வெளிப்படையாகவும் அதிகமாகவும் குடிக்கின்றனர். 

வேறு சில சமூகத்தவர்கள் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவும் களவிலும் குடிக்கின்றனர்; வித்தியாசம் அவ்வளவுதான்.   

எனவே, கும்புறுமூலையில் அமையவுள்ள மதுபான உற்பத்திச்சாலைக்கு எதிராக அனைத்து சமூகத்தவர்களும் கிளர்ந்து எழுதல் வேண்டும்.   
கும்புறுமூலை மதுபான உற்பத்திசாலை இயங்கத் தொடங்குமாயின், நாட்டில் மதுபான உற்பத்தியின் அளவு இன்னும் உயரும். இதனால், குடிப்பழக்கம் நாட்டில் மேலும் அதிகரிக்கும்.  

மேலும் இதனால், இயற்கை ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. மதுபான உற்பத்திக்கு மிக அதிகமான நீர் தேவைப்படும். மதுபானத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான எதனோலுடன், அதன் அளவிலும் மூன்று மடங்கு அதிகமான நீர் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  

இதனால், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீர் பெருமளவில் உறுஞ்சியெடுக்கப்படும். அடிக்கடி வறட்சியினையும், நீர் தட்டுப்பாட்டினையும் எதிர்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்டமானது, மேலும் கடுமையான நீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இது மட்டுமன்றி, வளி மாசடையும் நிலைவரமும் உருவாகும்.  

இவற்றினையெல்லாம் மனதில் கொண்டுதான், மேற்படி மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன், கும்புறுமூலை மதுபான உற்பத்திசாலை நிர்மாணத்தினை எதிர்த்து, பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இந்த விடயத்தில், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டும்.  
ஆனால், ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் வாய் திறப்பார்களா என்கிற சந்தேகமும் உள்ளது. 

கடந்த ஆட்சியில், சூதாட்டத்தினை ஆதரிக்கும் வகையிலான கசினோ சட்டமூலம் நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்க்க முடியாத முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.   

அதுபோல், கும்புறுமூலை மதுபான உற்பத்திச்சாலை நிர்மாணத்தின் பின்னணியிலுள்ள அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களைப் பகைக்கக் கூடாது என்பதற்காக, சில அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் வாய்மூடிகளாக இருப்பதற்கும் முயற்சிக்கக் கூடும். அப்படி நடந்து கொள்வார்களாயின், அது பாரிய சமூகத் துரோகமாகும்.  

கும்புறுமூலை மதுபான உற்பத்திசாலை தொடர்பில், அரசாங்கத்தின் மிக முக்கிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

மதுபானங்களை விடவும், அரசியல் சில வேளைகளில் போதை மிகுந்ததாகும். அதனால், கும்புறுமூலை மதுபான உற்பத்திசாலையினை எதிர்ப்பதன் மூலம், தங்கள் அரசியல் சௌபாக்கியங்களை இழப்பதற்கு சிலர் துணிய மாட்டார்கள. எனவே, கும்புறுமூலை விவகாரத்தில் மக்கள்தான் எச்சரிக்ககையாக இருக்க வேண்டும்.   

ஏற்கெனவே மதுபானத்தில் மிதந்து கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை மீட்டெடுக்க முடியாமல் சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், அந்த மாவட்டத்துக்குள் ஒரு சாராய சமுத்திரத்தைத் திறந்து விடுவதற்கு தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .