2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'முஸ்லிம் பெண்கள் முன்னுதாரணமாக செயற்படுகின்றனர்'

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

முஸ்லிம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமாக முறையில் செயற்பட்டுவருவதாக, மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று காலை மட்டக்களப்பு -தேவைநாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்த, “மாற்றத்திற்காய் துணிந்திரு” எனும் தலைப்பிலான மகளிர் விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் திருமணச்சட்டத்தில் முன்மாதிரியான விடயங்களில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், சில இஸ்லாமிய தலைவர்கள் ஆண்-பெண் சமத்துவத்துக்கு மறுப்பு தெரிவித்தவேளையில் அதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கியதுடன், அக்கூற்றினை நிராகரித்து ஊடகங்களில் அறிக்கையினையும் வெளியிட்டதுடன், அவ்வாறான இஸ்லாமிய தலைவர் தேவையில்லையென்றும் துணிச்சலுடன் வெளிப்படையாக தெரிவித்தது.

முஸ்லிம் சமுதாயத்தில் துணிச்சல்மிக்க ஒரு பெண் சமூதாயம் உருவாகியுள்ளதையிட்டு நாங்கள் பெருமைப்படுகின்றோம். முஸ்லிம் சமூகம் அனைத்து விடயங்களிலும் முன்னோக்கிச்சென்றுகொண்டுள்ளது.

மனித உரிமை விடயங்களில் கூட முஸ்லிம் சமூகம் துணிச்சலுடன் குரல்கொடுத்துவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் முஸ்லிம் பெண்களாகும். வெளியிடங்களில் இருந்துவந்து பல செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர். என்னையும் அக்காலத்தில் அழைத்து சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று கல்வியில் கூட முஸ்லிம் பெண்கள் முன்னேறிக்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கு கல்வி கற்றதன் பின்னர் இங்கு வந்து மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதனை ஏனைய சமுதாயத்தில் உள்ளவர்களும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

“பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டது. பெண் மீது ஆண் தாக்குதல் நடத்தலாம் என்ற பாரம்பரிய ரீதியான நடைமுறையிருந்து வருகின்றது. இந்த நிலைமாற்றப்பட வேண்டும். பெண்கள் பல விடயங்களில் ஆண்களுக்கு துணையாக செயற்படும்போது அவர்களுக்கான மதிப்பினை வழங்கவேண்டும்.

குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டது தண்டனை வழங்குவதற்கு அல்ல. குடும்பங்களில் ஏற்படும் பிணக்குளை தீர்ப்பதற்கான இடவெளியை வழங்கி அவர்களுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்காகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடைவெளியை வழங்கும்போது ஒருவர் ஒருவரைப் பற்றிய மதிப்பினை வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அவ்வாறான இடைவெளிகள் வழங்கப்படும்போது இணைந்து வாழவிரும்பிய பல நிகழ்வுகள் எங்கள் நீதிமன்றில் நடந்துள்ளது.

அந்த இடைவெளியை ஏற்படுத்தும் நோக்கிலேயே குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டதே தவிர கணவனுக்கோ, மனைவிக்கோ தண்டனை வழங்கவோ பிரித்துவைப்பதற்கோ அல்ல. இதனை ஒரு குற்றவியல் சட்டமாக அல்லாமல், வன்முறையை இடைநிறுத்திவைப்பதற்கான பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கான சட்டமாக இந்த குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .