2026 மார்ச் 07, சனிக்கிழமை

ரிஷாட் இராஜினாமா?

Gavitha   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.  

வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

  இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டிருந்த போதிலும், அவர், நேற்றுவரையிலும் நேரம் ஒதுக்கிகொடுக்கவில்லை.

லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் 328ஆவது கிளையைத் திறந்துவைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 28ஆம் திகதியன்று கொஹுவலைக்குச் சென்றிருந்த போது, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அமைச்சர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை விட்டிருந்தார் என அறியமுடிகிறது.  

எனினும், ஜனாதிபதி நேரம் ஒதுக்கிதரவில்லை. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த அமைச்சர் ரிஷாட், இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு தன்னுடைய கடும் எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளார் என்றும் தெரியவருகிறது.  

சர்ச்சைகுரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, அந்த பிரதேச மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி, இடம்பெயர்ந்து வருடக்கணக்கில், அகதி முகாம்களில் இருக்கின்ற முஸ்லிம் மக்களை, நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் அகதி முகாம்களுக்குள் தள்ளிவிட்டுள்ளது என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இவ்வாறான நிலைமைகளில், அரசாங்கத்தில் தன்னால் தொடர்ந்து இருக்கமுடியாது என்றும், அமைச்சு பதவியை இராஜினாமா செய்யபோவதாகவும் அவர் அறிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.  

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  

40,030.525 ஹெக்டேயர் விஸ்தீரணத்தைக் கொண்ட மாவில்லு, வெப்பல், கரடிக்குழி அல்லது மறிச்சுக்கட்டி, விலத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய ஒதுக்குக் காடுகளுக்கு உரியதான காட்டுப் பிரதேசத்தை, ஒன்றாக இணைத்து மாவில்லு பேணற் காடு என 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.  

நாளை கேளுங்கள்

ப.பிறின்சியா டிக்சி

 கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றபோதிலும் அம்முயற்சி பயனளிக்கவில்லை. 

அவருடைய அலைபேசிக்கு நேற்று (03) தொடர்பினை ஏற்படுத்தியபோது, மறுமுனையில் பதிலளித்த, அமைச்சரின் ​ஒருங்கிணைப்புச் செயலாளர் என தன்னை அறிமுகப்படுத்திகொண்ட நபர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வெளிநாடொன்றுக்கு விஜயம் செய்துள்ளார். தன்னுடைய விஜயத்தை முடித்துகொண்டு, இன்று அல்லது நாளை திரும்புவார். 

அப்போது, தொடர்பு கொண்டு கேட்டால் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பில் தன்னால் ஒன்றுமே கூறமுடியாது என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .