Princiya Dixci / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
சமகால நிலமைகள் தொடர்பில் மாவை சேனாதிராசா எம்.பியிடம் நேற்றுச் சனிக்கிழமை (15) வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில், நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லோரும் பதவி விலக்கியிருந்தோம். ஆகவே, பதவி விலகுவதென்பது எமக்குப் புதிய விடயமல்ல என்று, எமது கட்சித் தலைவர் சம்பந்தனும் கூறியிருக்கிறார்.
ஆகவே, பதவி விலகுவதன் மூலம் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வைக் காணலாம் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றலாம் அல்லது எங்கள் இலக்குகளை நாங்கள் அடையலாம் என்றதொரு தேவை ஏற்படுமிடத்து நாங்கள் அதைச் செய்வதற்குத் தயங்கமாட்டோம்.
அதனைச் சர்வதேச சமூகத்தோடு இணைந்து தான் அது தொடர்பான தீர்மானங்களை எடுப்போம். அப்படிப் பதவி விலகுவதென்பது தான் எங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்குமென்றால், நாங்கள் அதனைச் செய்யத் தவறமாட்டோம். ஏற்கெனவே நாங்கள் அந்த விடயங்களில் அப்படிச் செய்து காட்டியிருக்கிறோம். ஆகையினால், பதவி விலகல் என்பது எங்களுக்கொன்றும் புதிய விடயமல்ல.
இதேவேளை, தற்போது எமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையுடனே மக்கள் விரும்பி வாக்களித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெரும் ஏமாற்றத்தையே மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த தாமாகவே போராட்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டங்களிலும் தீர்வு கிடைக்காது தொடர்வதால் மக்கள் தங்களுடைய விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
குறிப்பாக மாதக் கணக்காக போராடி வருகின்ற மக்களுக்கு அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினால் அம்மக்கள் பிரதிநிதிகளை பதவி விலகச்சொல்லியிருப்பார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
இருந்தும் நாங்கள் போராட்டங்களின் மத்தியில் அவர்களுடன் பேசுகின்ற பொழுது பல விடயங்களை விளங்கிக் கொண்டனர். நாங்கள் தொடர்ந்தும் அவர்களுக்காக எடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் தற்போதும் எடுத்தே வருகிறோம். அதாவது, எமது மக்களது போராட்டங்கள் தொடராது அவர்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .