2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கின் கணக்கு

Administrator   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்  

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும்.   

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு - செலவுத் திட்டத்துக்குள் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். 

மேற்படி மாகாண சபைகளில் தமிழ் பேசும் மக்களின் ஆளுகைக்குட்பட்டது கிழக்கு மாகாண சபையாகும். அதனால், கிழக்கு குறித்த அதீத கவனம் எப்போதும் தமிழ் பேசும் மக்களிடத்தில் இருப்பதுண்டு. இன்னொருபுறம், கிழக்கின் ஆட்சியினை முஸ்லிம்களா அல்லது தமிழர்களா கைப்பற்றிக் கொள்வது என்கிற அரசியல் போட்டியொன்றும் சிறுபான்மையினருக்குள் இருந்து வருகிறது. இவ்வாறானதொரு நிலையில் நடைபெறும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் கவனிப்புக்குரியதாகும்.  

முதல் தேர்தல்  

கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பிரதான முஸ்லிம் கட்சிகள் எவையும் தமது சொந்தச் சின்னத்தில் போட்டியிடவில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஐ.ம.சு முன்னணியுடன் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. தமிழரசுக் கட்சி அந்தத் தேர்தலை பகிஸ்கரித்திருந்தது.  

முதலாவது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஐ.ம.சு முன்னணி கைப்பற்றிக் கொண்டது. அதன் முதலமைச்சராக, பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவு செய்யப்பட்டார். 

அதாவுல்லா மற்றும் ரிஷாட் பதியுதீனின் கட்சிகளுக்கு அந்த சபையில் அமைச்சுப் பதவிகள் கிடைத்தன. முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியில் அமர நேர்ந்தது.  

இரண்டாவது தேர்தல்  

கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தல் 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முன்னைய தேர்தலில் கூட்டணியமைத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ், அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. 

ஆயினும், அதாவுல்லா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கட்சிகள் ஐ.ம.சு முன்னணியுடன் தமது கூட்டணியைத் தொடர்ந்தன. இந்தத் தேர்தலிலும் ஐ.ம.சு முன்னணிதான் ஆட்சியினைக் கைப்பற்றியது. 

இரண்டாவது சபையின் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டார். அதாவுல்லா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தன.  

இவ்வாறானதொரு சூழ்நிலையில், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றுப் போனார். இதனால், கிழக்கு மாகாண சபையின் ஆட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 

அதாவுல்லா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கட்சிகளுக்கு கிழக்கில் வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. 

இரண்டாவது கிழக்கு மாகாண சபையில், அதுவரையும் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தமிழரசுக் கட்சியானது, இந்த மாற்றத்தின் போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது.  

தற்போது, கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நெருங்கி வருகிறது. செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைகிறது. அதனால், இன்னும் நான்கு மாதங்களில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. 

இதன் பின்னர் தேர்தல் எப்போதும் அறிவிக்கப்படலாம். மேற்படி மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின்னர், அவற்றுக்கான தேர்தல்களைப் பிற்போடுவதற்கான எவ்வித எண்ணங்களும் தனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றார்.  

பழைய முறைமையும் - புதிய அறிவிப்பும்  

அதேவேளை, இனிவரும் தேர்தல்கள் புதிய தேர்தல் சட்டத்தின் பிரகாரமே நடத்தப்படும் என்று பரவலாகக் கூறப்பட்டும், நம்பப்பட்டும் வந்தது. 

அதாவது தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமைக்குப் பதிலாக, தொகுதிவாரியும், விகிதாசாரசமும் ஒன்று சேர்ந்த கலப்புத் தேர்தல் முறைமைதான் அமுலுக்கு வரும் என்று கூறப்பட்டது. 

அதனால், இனிவரும் தேர்தல்கள் புதிய முறைமையின் அடிப்படையிலேயே நடைபெறும் என்கிற பேச்சு அரசியல் அரங்கில் எழுந்தது. எனவே, “புதிய தேர்தல் முறைமை அமுலுக்கு வரும் வரையில், கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று கூறித்தான், கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களும் இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்டன.  

இவ்வாறானதொரு நிலையில், கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள், பழைய தேர்தல் முறைமையிலேயே நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்திருக்கின்றார். 

அமைச்சரின் இந்த அறிவிப்பு சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாக அமைந்துள்ளது.  

அதாவுல்லாவின் நிலை  

இருந்தபோதும், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது, எந்தக் கூட்டணியுடன் இணைவது என்பதில் முஸ்லிம் கட்சிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். 

கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசியாக இருந்தார். அதனால், ஐ.ம.சு முன்னணியில் பங்காளியாக இணைந்திருந்த அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸுக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 

உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவின் கட்சிக்கு மூன்று வேட்பாளர் ஆசனங்களை ஐ.ம.சு முன்னணி வழங்கியது. அந்த வேட்பாளர்களை அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள மூன்று தொகுதிகளுக்கும் தலா ஒருவர் என அதாவுல்லா நியமித்தார். சொல்லி வைத்தாற்போல் மூவரையும் வென்றெடுத்தார்.  

ஆனால், இம்முறை அவ்வாறான வாய்ப்புகள் அதாவுல்லாவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பிறகு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு முன்னணியுடன் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், தனது கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டது. 

ஆனாலும், மைத்திரியின் ஆசீர்வாதம் அதாவுல்லாவுக்குக் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை அதாவுல்லாவுக்கு மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு முன்னணி வழங்கும் என்கிற எதிர்பார்ப்பொன்று அரசியல் அரங்கில் இருந்தது. 

ஆனால், இதுவரையும் அது நிறைவேறவில்லை. இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அதாஉல்லாவின் கட்சிக்கு கடந்த காலத்தைப் போன்று, வேட்பாளர் ஆசனங்களை ஐ.ம.சு முன்னணி ஒதுக்கீடு செய்யுமா என்பது சந்தேகம்தான். 

அதாவுல்லாவின் எதிர்பார்ப்புக்கேற்ப வேட்பாளர் ஆசனங்களை ஐ.ம.சு முன்னணி வழங்காமல் போனாலும், ஐ.தே.கட்சியுடன் அதாவுல்லா இணைந்து கொள்ளமாட்டார். “ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை, அந்தக் கட்சியுடன் நான் ஒருபோதும் இணைய மாட்டேன்” என்று அடிக்கடி அதாவுல்லா கூறி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில், தனது தேசிய காங்கிரஸ் கட்சியின் குதிரைச் சின்னத்தில் தனித்து வேட்பாளர்களை இறக்கும் நிலையிலும் அதாவுல்லா இல்லை.  

ரிஷாட் பதியுதீனும் எதிர்பார்க்கும் கூட்டணியும்   

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அ.இ.ம காங்கிரஸுக்கும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்கள் உள்ளன. மக்கள் காங்கிரஸின் செயலாளராகச் இருந்தவர், அந்தக் கட்சிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இதனால், அந்த வழக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பினருக்குச் சாதகமாக, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தீர்ப்பாகாமல் போகுமாயின், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ரிஷாட் தரப்பினர் மயில் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உருவாகும். 

எனவே, வேறொரு தேசிய கட்சியுடன் இணைந்துதான் ரிஷாட் பதியுதீன் போட்டியிட வேண்டியேற்படும். இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்துதான் ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டது. எனவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடரலாம்.   

ஆனாலும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 
ஐ.தே.கட்சியுடன் அமைச்சர்  ரிஷாட் பதியுதீனின் அ.இ.ம காங்கிரஸ் கூட்டணி வைக்கும் அதேநேரம், முஸ்லிம் காங்கிரஸும் கூட்டணி ஏற்படுத்துமாயின், அங்கு பல்வேறு பிரச்சினைகள் எழும். 

உதாரணமாக, வேட்பாளர் ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் போது, ஐ.தே.கட்சியானது, அ.இ.ம காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் வகையில் முஸ்லிம் காங்கிரஸை முன்னிலைப்படுத்துமாயின் அதனை ரிஷாட் பதியுதீன் ஏற்றுக் கொள்ள மாட்டார். 

இந்த நிலைவரமானது ஐ.தே.கட்சிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் இணக்கப்பாடின்மைகளைத் தோற்றுவிக்கக் கூடும். அவ்வாறானதொரு நிலையில், மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு முன்னணியுடன் அமைச்சர் ரிஷாட் தரப்பினர் இணையும் நிலை ஏற்படும்.  

ஆனால், மைத்திரிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் தற்போது வில்பத்து விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் தீராத நிலையில், மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு முன்னணியுடன் கூட்டணியமைப்பதற்கு ரிஷாட் முன்வருவாரா என்பதும் சந்தேகம்தான்.   

மு.கா மாற்று அணி  

இவை அனைத்துக்கும் அப்பால், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அதிருப்தியாளர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹசன் அலி தலைமையிலான அணியினர் உள்ளிட்டோரைக் கொண்டதொரு கூட்டணியொன்று, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் உருவாகும் என்றும், ஒரு பொதுவான சின்னத்தில் அந்தக் கூட்டணி கிழக்குத் தேர்தலில் போட்டியிடும் என்றும், இப்போதே பரவாகப் பேசப்படுகிறது. அவ்வாறு ஒரு கூட்டணி உருவாகுமாயின், அது முஸ்லிம் காங்கிரசஸுக்கு பாரிய சவாலாக அமையும்.  

ஓர் அமைப்பிலிருந்து அதன் சக்தி வாய்ந்த பிரமுகர்கள் பிரிந்து செல்லும்போது, குறித்த அமைப்பு வீழ்ச்சியடைவது இயல்பானதாகும். ஆனாலும், சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் தமது வீழ்ச்சியினை அநேகமாக ஏற்றுக் கொள்வதில்லை. 

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அதன் கிழக்குத் தளபதி கருணா அம்மான் விலகிச் சென்றபோது, அதனைத் தனி நபரொருவரின் பிரிவாக மட்டுமே தாம் பார்ப்பதாகவும் கருணாவின் பிரிவினால் தாங்கள் எவ்வகையிலும் பலவீனப்படவில்லை எனவும், புலிகள் அமைப்பு அறிவித்தது. ஆனால், அது நேர்மையான கூற்றல்ல என்பதை 2009ஆம் ஆண்டு புலிகளின் அழிவு நிரூபித்தது. 

அதுபோலவே, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோரின் விலகல்களை, முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மிகவும் மலினமாகவே எடைபோட்டுப் பேசி வருகிறது. ஆனால், அது அவ்வாறில்லை என்பதை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நிரூபிக்கும் நிலை ஏற்படலாம்.  

மு.காவும் யானைச் சவாரியும்  

இன்னொருபுறம் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில், எவ்வாறு போட்டியிடுவது என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு குழப்பங்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படக் கூடும்.

கடந்த கிழக்குத் தேர்தலில் ஐ.ம.சு முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதில் மு.கா தலைவர் உறுதியாக இருந்தார் என்பதை, அந்தக் கட்சியின் உயர் மட்டத்தினர் அறிவர்.

மு.கா உயர்பீட உறுப்பினர்களில் கணிசமானோரும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியுடன் மு.கா இணைந்து போட்டியிட வேண்டும் என்பதற்கு ஆதரவாகப் பேசினார்கள்.

ஆனால், கட்சியின் அப்போதைய செயலாளர் எம்.ரி. ஹசன் அலி, அதற்கு மாற்றமான எண்ணத்துடன் இருந்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார்.

மட்டுமன்றி, தனது முடிவின் பக்கம் கட்சித் தலைவர் உள்ளிட்டோரை இழுத்து வரும் பொருட்டு, கட்சிக்காரர்கள் யாரும் தன்னைத் தொடர்பு கொள்ள முடியாத வகையில், ஹசன் அலி சில நாட்கள் ‘காணாமல் போனார்’.

இதன் காரணமாக, கடந்த கிழக்குத் தேர்தலில் மு.கா தனித்துப் போட்டியிடும் முடிவினை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்தக் கட்சியின் தலைவர் தள்ளப்பட்டார். மு.கா மரச் சின்னத்தில் போட்டியிட்டது. ஏழு ஆசனங்களைப் பெற்று, பாரிய வெற்றியைக் கண்டது.   

ஆனால், எதிர்வரும் கிழக்குத் தேர்தலில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, கடந்த முறை பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையினைப் வெல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களை (04 ஆசனங்கள்) வென்றது.

ஆனால், இம்முறை அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குரியதாகும். மு.கா மாற்று அணியைச் சேர்ந்த, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி, மு.காங்கிரஸ் சார்பில் நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களாகப் பதவி வகித்த தாஹிர் மற்றும் சட்டத்தரணி அன்சில் ஆகியோருடன் மு.கா சார்பில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளராகப் பதவி வகித்த தாஜுதீன் உள்ளிட்ட பலர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள்தான் தற்போது, மு.கா தலைவருக்கு எதிரான பிரசாரங்களை படு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.   
இந்த நிலையில், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மேற்படி மாற்று அணியினர், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகச் செயற்படுவார்கள் அல்லது முஸ்லிம்  காங்கிரஸுக்கு எதிராகப் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறானதொரு சூழ்நிலையில், மு.கா தனித்துப் போட்டியிடுவது அந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியில் ஆபத்தாக அமைந்து விடும். இந்த நிலைவரம் குறித்து, மு.கா தலைவரும் மிக நன்றாக அறிவார்.

எனவே, எதிர்வரும் கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தேவையற்ற சிரமங்களை தலையில் சுமப்பதை மு.கா தலைவர் விரும்ப மாட்டார். எனவே, மு.கா தலைவர் எப்போதும் நெருக்கமாக இருக்கும் ஐ.தே.கட்சியுடன் இணைந்துதான், எதிர்வரும் கிழக்குத் தேர்தலை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யானையின் முதுகில் (ஐ.தே.கட்சியில்) சவாரி செய்வதுதான் அரசியல் ரீதியாக மு.காவுக்கு இலாபகரமானதாகும் என்பதற்கு கடந்த கால அரசியல் கணக்குகளும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.   

இன்னொரு புறம், கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்பட்டு விட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் வாக்காளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

தாங்கள் வழங்கிய வாக்குகளைப் பெற்று, மாகாண சபைக்குச் சென்றவுடன், தம்மை மறந்து போன மாகாண சபை உறுப்பினர்களுக்கு, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலினூடாக, சில கணக்குகளைத் தீர்க்கக் காத்திருக்கும் மக்களுக்கு, தேர்தல் நாளை நடந்தாலும் மகிழ்ச்சிதான்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .