2024 மே 08, புதன்கிழமை

பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு

Administrator   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - காரை துர்க்கா 

பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். 

 பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட அசுர பலம் கொண்டும் பல நாடுகளது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்தழைப்புடனும் தமிழ் மக்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு 18.05.2009 இல் முடிவுரையும் எழுதினர் கடந்த ஆட்சியாளர்கள்.   

ஆனால், அவ்வாறு நடைபெற்ற இறுதிப் போரில் மனித குலத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய பல போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் நிறையவே உள்ளன. இதனைக் கண் கண்ட காட்சிகளாக இறுதிப் போரில் தீக்குளித்து வெளியேறிய தமிழ் மக்கள் உள்ளனர்.   

காலங்காலமாக வாழ்ந்த மண்னை விட்டு, இராணுவத்தின் எறிகணைகளும் வான் படையின் குண்டுகளும் கடற்படையின் பீரங்கி வேட்டுகளும் என ஒன்றை மாறி இன்னொன்று தொடர்ந்து துரத்தி துரத்தி தாக்கிக் கொண்டிருந்தன.   

இறந்தவருக்காக அழ நேரமில்லை. இறந்தவரது உடலைக் கூட தகனம் செய்ய அவகாசமில்லை. அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க ஓடியோர் ஏராளம். ஏனெனில், இறந்தவருக்காக அழுதால் அழுதவருக்காக அழ எவரும் இருக்கமாட்டார்கள்.   

இரண்டு, மூன்று உழவு இயந்திரங்களிலும் பாரஊர்திகளிலும் வீட்டுப் பொருட்களை ஏற்றி இடம்பெயர்ந்தவர்கள், இறுதியில் முள்ளிவாய்க்காலில் வெற்றுக் கையுடனும் கையே இல்லாமலும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தவிர்த்தனர். இவ்வாறு நடைபெற்ற யுத்தத்துக்குப் பெயர் மனிதாபிமானத்துக்கான போர்.  

பொதுவாகத் தமிழ் மக்கள் ஒருவர் இறந்தால், இறந்த நாளை அடுத்து எட்டுச்செலவு என்ற சமயக் கிரியையை உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் சமைத்துக் கூடி உண்பர். அடுத்துவரும் 31 ஆம் நாளில் அந்தியெட்டி எனப் பிறிதொரு சமய நிகழ்வை இறந்த நாள் அன்று வருகை தந்த மற்றும் வருகை தர முடியா விட்டாலும் உறவினர்கள், நண்பர்கள் என்ற கோதாவில் முறையாக அழைப்புக் கொடுத்து, இறந்த ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தனை செய்து, படைத்து உண்பர்.

அதனைத் தொடர்ந்து ஆறாவது மாதம், ஒரு வருட நிறைவு மற்றும் புரட்டாதி மாதத்தில் மாளயம் என அவரின் சந்ததி தொடர்ந்து இறந்தவரை நினைத்துப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளும்.  

இவை வெறுமனே பிரார்த்தனை அல்ல; மாறாக ஆழமாகப் பதிந்த உள்ளத்து உணர்வுகள். அவற்றால் ஒரு விதமான உள ஆற்றுப்படுத்தல் நடைபெறுகின்றது. உள்ளம் சாந்தி, சமாதானம் அடைகின்றது. ஆகவே, இவற்றைச் சுமாராக எடை போட முடியாது. அத்துடன் இவைகள் ஓர் இனத்தின் நீண்ட பாரம்பரியப் பண்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் ஆகும்.

ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், கணவன், தம்பி மீள திரும்பி வருவான் என்ற முழு நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்களுக்கு இவ்வாறான சமய சம்பிரதாயங்களை ஆற்ற எப்படி மனம் விளையும்?   

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிக்கா குமாரதுங்க, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அவரது அமைப்பால் பல திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்தும் பல திட்டங்களது முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.   

அவ்வேளையில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய படைவீரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ள முடியாது என அங்கு அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.   

முள்ளிவாய்க்காலிலும் ஓமந்தையிலும் தாங்கள் பார்த்திருக்க படையினரால் பேரூந்து வண்டிகளில் ஏற்றப்பட்ட தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் அவர்களில் தம் குடும்பங்களில் பலரைப் பறிகொடுத்து பரிதவிக்கின்றனர்.  

 அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா எனத் தெரியாமல் ஏங்குகின்றனர். ஒரு தாய் தன் பிள்ளையை ஆயிரம் கனவுகளுடன் வளர்ப்பாள்; பல்லாயிரம் மனக் கோட்டை கட்டுவாள். அப்படி வளர்த்து தன் கண் முன்னே ‘புலி’ என்று தனது அப்பாவிச் செல்வத்தை கைது செய்து விட்டு, இப்போது கைது செய்யவில்லை; காணவில்லை; சாட்சி உண்டா? ஆதாரங்கள் உண்டா? என்றால் என்ன செய்வது?   

ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே? அவர்கள் குற்றம் இழைத்துள்ளார்கள் எனில் நீதிமன்றம் முன் நிறுத்துவது தானே நீதி? எனவே, அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டது அநீதி இல்லையா? எனக் கேள்விகள் நீண்டு செல்கின்றன.   

நம் ஊரில் உள்ள சிறு விளையாட்டுக் கழகங்கள் சனசமூக நிலையங்களில் கூட ஒரு நிதியாண்டின் வருமானங்கள், செலவினங்கள் தொடர்பில் கணக்கு சமர்ப்பித்தல், பின் அவற்றைக் கணக்காய்வுக்கு உட்படுத்துதல், அடுத்து சகலருக்கும் தெரியப்படுத்தல் போன்ற வகைகூறல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

இவை கூட ஒரு விதமான பொறுப்பு கூறலே. ஆகவே, அவற்றைப் பொறுப்பு உள்ள நிர்வாக சபை தட்டிக் கழிக்க முடியாது; தனக்கு அதில் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது.   

இந்நிலையில், “ஜக்கிய நாடுகள் சபை சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட முடியாது; எம் நாட்டு இறையாண்மையில் மாற்றார் தலையிட முடியாது; எமது நாட்டு நீதித்துறை தனித்துவமாகவும் நடுநிலையாகவும் இயங்குகின்றது” என்றவாறான அமைச்சர்களில் சிலர் மற்றும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளது சொல்லாடல்கள் மட்டுமல்லாது, காலையில் ஜெனீவாவில் ஒரு மாதிரியும் மாலையில் கொழும்பில் வேறு மாதிரியும் கருத்து உரைத்து வருகின்றனர் நாட்டில் பொறுப்புக்கூற வேண்டிய அரசியல்வாதிகள்.  

இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கான தீர்வு உள்நாட்டில் இல்லை என்பதாலேயே எல்லை தாண்டியது. தமிழ் மக்களுக்குத் தொடர் தொல்லை கொடுத்து பொறுமையின் எல்லை மீற வைத்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே என்பதை இவர்கள் இன்னும் உணராமை வேதனையிலும் வேதனை.  

கடந்த மூன்றாம் திகதி யாழ். வந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன போர்க்குற்றம் என்ற ஒன்று இறுதி யுத்தத்தில் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார். நடு நிலையான போக்கு உள்ளவர் எனத் தமிழ் மக்கள் கருதிய அமைச்சர் தனது போக்கை மாற்றி விட்டார்.   

லக்ஸ்மன் கிரியெல்ல என்ற அமைச்சர் “வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமாக தமிழ் மக்கள் மறந்து விட்டனர். ஆனால் அரசியல்வாதிகளே அவற்றை தூக்குகின்றனர்” எனக் கூறுகின்றார். 

தமிழ் மக்கள் இணைப்பை மறக்க அது என்ன சில்லறை விடயமா? தமிழ் மக்களது ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் பெரும் ஆல விருட்சம். சில வேளைகளில் அதனை எம் அரசியல்வாதிகள் மறந்தாலும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.   

ஜனாதிபதி ஒருபடி மேலே சென்று, “முன்னைய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட முடியாது. தற்போது அவ்வாறான நிலையில்லை; நாட்டில் முழுமையான சுதந்திரம் உள்ளது” என்று தெரிவிக்கின்றார்.   

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, முன்னர் தம் உறவுகளைக் காணவில்லை என வீடுகளுக்குள் இருந்து, பயத்தில் யாருக்கும் தெரியாது தனிமையில் அழுதவர்கள், தற்போது வீதியில் பந்தல் போட்டு, ஏனையவர்களுடன் சேர்ந்து கட்டிப் பிடித்து கதறி அழுகின்றார்கள்.   

ஆகவே வீட்டுக்குள் அழுதவனை தெருவுக்குக் கூட்டி வந்து அழுமாறு செய்தது தான் நல்லாட்சியின் சாதனை ஆகும். 

ஆனால் மறுவளமாக நல்லாட்சி அரசாங்கத்தின் 2015 ஜனவரி தேர்தல் காலத்தில், அன்னம் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க தவறியிருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள பலருக்கு உணவாக அன்னம் கூட இருந்திருக்காது.   

இந்நிலையில் ஏப்ரல் முதலாம் திகதி திருமலை மெக்கெய்ஸர் விளையாட்டுத் திடலில் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

அதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க் கட்சி தலைவர் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வின் பெயர் ‘யொவுன்புர’. எல்லோரும் ‘யொவுன்புர’, ‘யொவுன்புர’ என அழைக்கின்றனர். 

பாவம் தமிழ் பேசும் மக்களும் அர்த்தம் புரியாமல் ‘யொவுன்புர’ என உச்சரிக்க வேண்டிய நிலை. இந்த சிறு நிகழ்வில் கூட தமிழ் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாடு என்ற ஒற்றைப் புள்ளியை தமிழ் மனம் நாடும்? 
ஆகவே, அந்த எம் நாடு என்ற உயர் நிலைக்கு நாடு நீண்ட தூரம் நடக்க வேண்டி உள்ளது. அதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கால் தடம் மாறக் கூடாது. தடம் மாறின் ஊர் கூடி வடம் இழுக்கும் நிலை மாறும்; மிகக் கவனம்.  

மே மாதம் 2009 ஆம் ஆண்டு வரை சிங்களம் நடாத்திய அனைத்து யுத்தங்களும் உண்மையிலேயே சமாதானத்துக்கான போர் அல்ல. துப்பாக்கி ரவையில் மட்டுமே தங்கியிருந்த முழுமையான வெற்றிக்கான யுத்தம். 
மாறாகத் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் முழு வெற்றியுமே உண்மையான சமாதானத்துக்கான யுத்தத்தில் தங்கியுள்ளது; மனங்களை வெற்றி கொள்வதில் தங்கியுள்ளது.   

உண்மையான நீதியான போர்க் குற்ற விசாரனை கூட சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தமாட்டார்கள். அதற்கான மன வலு, மன விருப்பம், ஈடுபாடு இவர்களிடம் இல்லை; வரப்போவதும் இல்லை என்பதாலேயே தமிழ் சமூகம் சர்வதேசத்திடம் நீதி வேண்டி நிற்கின்றது.   

ஓர் அரசியல்வாதி அடுத்த தேர்தலை எண்ணியே காய்களை நகர்த்துவார். ஆனால் ஓர் இராஜதந்திரி அடுத்த தலைமுறையை எண்ணியே சிந்தனையை வளர்ப்பார்.

இங்கு தமிழ்ப் பிரதேசங்களில் ஒரு தலைமுறை தனது அடுத்த வருங்கால சந்ததி தொடர்பில் பெரிய அச்சத்துடனும் ஜயப்பாட்டுடனும் அல்லல்பட்டு வாழ்கின்றது. 

ஆகவே இவ்விடத்தில் பல தடைகளைத் தாண்டி தீர்வு வேண்டி நிற்கும் ஒரு சமூகத்தின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றுமா ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான நல்லாட்சி அரசு?   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X