"ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருந்த போது, தனியார்க் காணிகள் அனைத்தும் ...

"> Tamilmirror Online || 'காணிகள் விடுவிக்கப்படுமென மைத்திரி வாக்குறுதியளித்திருந்தார்'
'காணிகள் விடுவிக்கப்படுமென மைத்திரி வாக்குறுதியளித்திருந்தார்'

எஸ்.ஜெகநாதன்

"ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருந்த போது, தனியார்க் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதியளித்திருந்தார். இதனாலேயே நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டோம்" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில், முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில், இன்று (21) இடம்பெற்றது.

கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "இராணுவத்தினரிடம் இருக்கின்ற பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சில இடங்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். தனியார்க் காணி என்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முடிவடையவில்லை.

அது குறித்து இராணுவத்தினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து, அரச காணிகளின் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

காணிகள் குறித்த விவரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்பின்னர் பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஏனைய விடயங்களை கையாள முடியும்.

2009 போர் முடிவடைந்த பின்னர் 27 ஆயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வலி. வடக்கு பிரதேசத்தினைச் சூழ்ந்த பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் ஆரம்பத்தில் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய 2 பேர் இணைந்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த போது, ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றயவரின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜாவின் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகின்றது.

அதில் படிப்படியாக சில இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு இவை அனைத்து காணிகளும் மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்ற இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது.

அதற்கான படிமுறைகளை வகுத்திருந்தும் கூட 10 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகக்குறைவானவை. மீள்குடியேற்றம், அல்லது சுமூக நிலை வருகின்ற போது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ வேண்டுமென்பது எமது அடிப்படை கோரிக்கை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பால சிறிசேன இருந்த போது தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதிருந்தார். ஆகவே ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

தனியார் காணிகளை விடுவித்து, தமது இடங்களை மாற்றி அமைத்தும் உண்மையிலே பாதுகாப்புக்கு தேவையான இடங்களுக்கு சென்ற பின்னரும், அதிகளவான காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் இருக்குமாக இருந்தால், அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சிந்திக்க முடியும்.

மாவட்ட ரீதியாக நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர், அரசியல் தலைவர்களுடன், அமைச்சர்களுடனும் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடல் தான், மிக முக்கியமாக இருக்கும். அவை தான் காணி விடுவிப்பு குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலாக இருக்கும்" என்றார்.

 


'காணிகள் விடுவிக்கப்படுமென மைத்திரி வாக்குறுதியளித்திருந்தார்'

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.