2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'மு.கா தனித்துவத்தை இழந்து வருகின்றது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

முஸ்லிம்களின் உரிமைக்காகவும் அரசியல் சுயநிர்ணயத்துக்காகவும் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதன் தனித்துவத்தை தற்போது இழந்து, தனிமனித ஆதிக்கத்தின் கீழ் செயற்பட்டு வருவதாக மு.கா.வின்  முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்தார்.

'மரத்தின் வேர்களுக்கு விளம்பல்' எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பதற்கான பொதுக்கூட்டம்,  பாலமுனையில் சனிக்கிழமை (22) இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு நான் ஒருபோதும் கேட்டதில்லை. செயலாளர் நாயகம் பதவியை மாத்திரமே நான் கேட்டிருந்தேன்.

தற்போது அவரின் தனித்துணிவால், கட்சியின் செயலாளர் நாயகம் என்ற பதவி இல்லாமல் செய்யப்பட்டு, செயலாளர் என்று பதவி  மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்துக்கு பாரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, மாவட்டத்துக்காக அரசியல் அதிகாரத்தையும் இல்லாமல் செய்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற அம்பாறை மாவட்டத்துக்கு அண்மைக்காலமாக அநீதி; இழைக்கப்பட்டு வருகின்றது. இதனால், வாக்காளர்கள் கட்சி மீது  அதிருப்தி அடைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்' என்றார்.

'எந்த நோக்கங்களுக்காக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அவைகளை விட்டிட்டு தற்போது இந்தக் கட்சி வழிதவறி குண்டர்களின் கையில் அகப்பட்டுள்ளது. இதனை மீட்பதற்கே நாம்  போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.

இன்று நாடாளுமன்றத்தை ஓர் அரசியல் நிர்ணய சபையாக மாற்றுவதற்கான ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக மக்களின் ஆலோசனைகளைப் பெற்று எந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய சுமார் 32 ஆயிரம் ஏக்கர் காணிகளில் பிரச்சினை காணப்படுகின்றது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .