2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும்

Administrator   / 2017 ஏப்ரல் 21 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன.  

இன்னொரு பக்கத்தில், சின்னஅடம்பனில் ஒரு வீட்டுத் திட்ட கையளிப்பு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் தவறினால் அதனையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார்.  

சம்பந்தனின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் சம்பந்தனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது பற்றிப் பேசுவதற்கு சம்பந்தனுக்கு தகுதி இல்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.  

இங்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையை மாற்றும் விவகாரமும் சரி, நாட்டின் அரசாங்கத்தை மாற்றுகின்ற விவகாரமும் சரி அவ்வளவு சுலபமான விடயங்களல்ல.   

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை, மாற்றியமைப்பது என்பது முதலாவது சவால் என்றால், இரண்டாவது மிகப் பெரியதுமான சவால், அதற்கு மாற்றான இன்னொரு தலைமையை உருவாக்குவதுதான்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்துடன் அளவுக்கதிகமாக ஒத்துப் போகிறது; சகிப்புத்தன்மையுடன் இருக்கிறது; தமிழ் மக்களின் கோபங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் இருக்கின்றன.   

இது தமிழ் மக்களின் உரிமைகளை அடைவதற்காகத் தாம் கடைப்பிடிக்கின்ற உச்சமான பொறுமை என்று கூட்டமைப்புத் தலைமை கூறிக் கொள்கிறது. அதனை, தமிழர் தரப்பில் உள்ள கடும் போக்கு சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.  

தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை மாற்றியமைத்தால், எல்லாப் பிரச்சினைகளுமே தீர்க்கப்பட்டு விடும் என்பது போன்ற மாயையை உருவாக்கச் சிலர் முனைகின்றனர்.  

தமிழ் மக்களுக்கு இப்போது உள்ள பிரச்சினை, யார் தலைமை வகிப்பது என்பதல்ல; தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே உடனடிப் பிரச்சினை.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவத்துக்கு மாற்றான ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவது என்றால், அதனை ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.  

அவ்வாறான ஒரு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் அதனைச் செயற்படுத்த முடியும். ஏனென்றால், மக்களின் ஆதரவு அந்தப் புதிய தலைமைக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.  
தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமிழ் மக்களின் தலைவர்களாக அங்கிகரிக்கப்பட்டது ஜனநாயக தேர்தல்கள் மூலம்தான்.  

அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் ஆயுத பலம், வீரம், சாதனைகள், நேர்மையான அணுகுமுறை மற்றும் அரசியல் நகர்வுகள் என்பன தமிழ் மக்களின் தலைமையாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது.  

போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் தலைமைத்துவத்துக்கு வெற்றிடம் ஏற்பட்ட போது, அதனை நிரப்புவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக ரீதியான தேர்தல் களத்தில் இறங்கின. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் மக்களின் ஆணை கிடைத்தது.  

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அதிருப்தி அணியினரும் கூட்டமைப்புக்கு வெளியே உள்ள, அதற்கு எதிரான தரப்பினரும் இணைந்து கொண்டு, தமிழ்த் தேசியத் தலைமை நீக்கம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  

தற்போதுள்ள தலைமையை மாற்றுவதானால் அதற்குத் தகுதியான மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. யார் அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை.   

அதைவிட, தமிழ்த் தேசியத் தலைமை மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியுமா? அதற்கான உத்தரவாதத்தை யார் வழங்கப் போகிறார்கள்? அத்தகையதொரு மாற்றுத் தலைமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யாருடன் இணைந்து தீர்வைப் பெற்றுத் தரப் போகிறது?  

நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைமைத்துவ காலத்தில் இருந்ததைப் போன்று இன்னொரு மாற்றுத் தலைமையால் அர்ப்பணிப்புடன் செயற்பட முடியாது. புலிகளாலேயே முடியாது போன இலக்கை, இப்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகளால் ஒருபோதும் அடைய முடியாது.  

அடுத்து, மாற்றுத் தலைமை உருவாக்கப்பட்டால் கூட அது இலங்கை அரசாங்கத்துடன் தான் பேச வேண்டும்; பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு இணங்க மறுக்கும் புதிய தலைமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு விரைவில் தீர்வு காண முடியும்? நிச்சயமாக அது பிரச்சினைகள் நீண்டு செல்வதற்குத் தான் வழியேற்படுத்தும்.   

அடுத்து அரசாங்கம் பற்றிய விமர்சனங்களுக்கு வருவோம். தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையற்றிருக்கிறது; இழுத்தடித்து வருகிறது. இதனால் மீண்டும் தாம் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. இவையெல்லாம் உண்மை தான்.  

இந்த நிலை நீடித்தால், இந்த அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று எச்சரித்திருக்கிறார் இரா.சம்பந்தன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் சம்பந்தன் கணிசமான பங்கை வகித்தவர்.

தமிழ் மக்களின் வாக்குகள், மஹிந்தவின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தன.  

அதனை மனதில் வைத்தே, இரா.சம்பந்தன் அவ்வாறு கூறியிருக்கிறார். ஆனால், இப்போதுள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விடுவதால் மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா என்பதைக் கவனத்தில் கொண்டு சம்பந்தன் தனது கருத்தை வெளியிட்டிருக்கவில்லை.  

“இரா.சம்பந்தன், தானும் தமிழ் மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் தான் அவ்வாறு கூறியிருக்கிறார்” என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டிருக்கிறார். சம்பந்தன் மாத்திரமன்றி, கஜேந்திரகுமாரும் கூட, தமிழ் மக்கள் தனது பக்கம் நிற்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதன் மூலம், அவரைப் பழிதீர்த்து விட்டதான ஓர் ஆறுதலைத் தமிழ் மக்கள் அடைந்தார்கள். தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதன் மூலம், அதுபோன்று ஓர் ஆறுதலை தமிழ் மக்கள் அடைய முடியுமா? அதற்கான மாற்று வாய்ப்புகள் இருக்கின்றவா? என்பது முக்கியமான விடயம்.  

இந்த அரசாங்கத்தை வெளியேற்றுவது என்பதை விட, அடுத்து அமைக்கப்படும் அரசாங்கம் எது? அது தமிழ் மக்களை எப்படி நடத்தும்? அந்த அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளனவா? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.  

இப்போதைய அரசாங்கத்துக்கு மாற்றாக ஆட்சியமைக்கக் கூடிய வலுவான தரப்பாக மஹிந்த ராஜபக்ஷ அணியே இருக்கிறது. மஹிந்தவைத் தண்டித்து வீட்டுக்கு அனுப்பிய தமிழ் மக்கள் அவரை மீண்டும் அதிகாரத்துக்கு வரத் துணைபோக முடியுமா? அவ்வாறு துணைபோனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன? என்பது பற்றி யாரும் சிந்திப்பதாகவே தெரியவில்லை.  

முன்னைய அரசாங்கத்தின் காலத்தை விட, தற்போதைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, எல்லா இன மக்களும் ஆறுதலடையக் கூடிய நிலைதான் இருக்கிறது. இந்த நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எத்தகைய நகர்வையும் மேற்கொள்ள முடியும்.  

தற்போதுள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமாகத் தீர்க்கின்ற வல்லமைமிக்க தலைமைத்துவம் சிங்கள மக்கள் மத்தியில் இல்லை. இதுதான் முக்கியமான பிரச்சினை.  

இந்தநிலையில், ஆட்சி மாற்றம் பற்றிப் பேசுவதற்கு முன்னர் தமிழர் தரப்பு, அதன் விளைவுகள் குறித்துக் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.  

அதுபோலவே, தமிழ்மக்களுக்கான மாற்றுத் தலைமைத்துவ விடயத்திலும் அதேநிலைதான் இருக்கிறது. மாற்றுத் தலைமை ஒன்றுக்குப் பொருத்தமானவர்கள் இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத நிலையில், இருக்கின்ற தலைமைத்துவத்தையும் அழித்து விடுவது புத்திசாலித்தனமான நகர்வாக இருக்காது.  

ஆட்சி மாற்றமும் சரி, தமிழ்த் தேசிய தலைமை மாற்றமும் சரி, தமிழ் மக்களை மேலும் புதைகுழிக்குள் தள்ளி விடாததாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்துவது முக்கியம்.  


You May Also Like

  Comments - 0

  • Nakkeeran Monday, 24 April 2017 03:49 AM

    கஜேந்திரகுமாருக்கு நாவடக்கம் தேவை. அவரது பாட்டனார் போல கஜேந்திரகுமாருக்கும் தலைக் கனம் கூட.. இரண்டு தேர்தலில் கட்டுக்காசை இழந்த கஜேந்திரகுமாரின் கட்சிகள் பற்றி மக்களுக்கு விளங்கும். மாதம் இரண்டு முறை செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி சம்பந்தனையும் சுமந்திரனையும் திட்டுவது அரசியல் அல்ல. கஜேந்திரகுமார் நோய்க்கு மருந்து என்ன என்பதைச் சொல்ல வேண்டும். இந்தியாவையும் அமெரிக்காவையும் காய்ந்து கொண்டு அரசியல் செய்ய கஜேந்திரகுமார் சொல்கிறார். அதே நேரம் தமிழர் சிக்கலை ஐநா பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு போக வேண்டுமாம். எந்த நாடு கொண்டு போகும்? ஒரு நாட்டை கஜேந்திரகுமார் சொல்ல முடியுமா? அவர் பாட்டி வடை சுட்ட கதை சொல்கிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .