2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

‘போராட்டங்களைப் பலவீனப்படுத்தாதீர்’

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் தலையீடுகள் இல்லாமல் தமிழ்மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் நிலையில், அப் போராட்டங்களைப் பலப்படுத்தவும் மக்களின் கோரிக்கைகளுக்கு வலிமை சேர்க்கவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பலவீனப்படுத்துவதாக, எந்தவொரு செயலும் இருந்துவிடக்கூடாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

இன்றைய ஹர்தால் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு நியாயம் கோரி முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஹர்த்தால் போராட்டம் நடைபெறுவதற்கு, ஈ.பி.டி.பி தனது முழுமையான ஆதரவை வழங்கும்.

எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் கடையடைப்பு போராட்டமானது, பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையிலும், பொதுச் சொத்துக்குப் பங்கம் ஏற்படுத்தப்படாத வகையிலும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான பங்களிப்பை அனைவரும் வழங்க வேண்டும்.

இந்த ஹர்த்தால் போராட்டமானது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நியாயத்தைப் பெற்றுத் தருவோம் என்றும், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஊடாக போர்க்குற்றங்களை விசாரணை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தையும், பரிகாரத்தையும் பெற்றுத் தருவோம் என்றும், படையினர் வசமுள்ள எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீண்டும் பெற்றுத் தருவோம் என்றும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைப் பெற்றுத் தருவோம் என்றும், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவோம் என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து தேர்தலுக்குப் பின்னர் நம்பிக்கைக்கு துரோகம் செய்த அனைத்துத் தரப்புக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படுவதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்குறுதிகளை வழங்கி மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள். அரசாங்கத்தை தாமும் நம்புகின்றோம், தமிழ்மக்களும் நம்பவேண்டும் என்றும் கூறியவர்களே இன்று ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவதும் எமது மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

அது திருடனே கூட்டத்துக்குள் இருந்து கொண்டு, திருடனைப் பிடிக்குமாறு கூறுவதற்கு ஒப்பானதாகும். இவ்வாறானவர்களின் ஏமாற்றுத்தனத்தை தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .