2026 மார்ச் 07, சனிக்கிழமை

வடக்கு, கிழக்கில் துக்க தினம்

Gavitha   / 2017 மே 01 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், வா.கிருஸ்ணா

சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களால், துக்க தினமாகவே அனுஷ்டிக்கப்பட்டது.  

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நேற்றைய மே தினத்தைப் புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டித்தது மாத்திரமன்றி, கறுப்பு நிறப் பட்டிகளை அணிந்து, தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.  

இதேவேளை, தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த நாளில், தாங்கள் தொழில் உரிமைக்காக வீதியில் போராடி வருவதனால், மே தினமான நேற்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்ததாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.  

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று தங்களது 55ஆவது நாள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

“தொழிலாளர்களின் உரிமைகளைக் கோரி இடம்பெறுகின்ற மே தினத்தில், தொழில் புரிந்த உறவுகளையே தொலைத்துள்ள நாம், என்ன உரிமைகளைக் கோருவது? வாழ்வாதார ரீதியாகப் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கின்றோம். உழைக்கும் எமது உறவுகளற்ற நிலையில், எமக்கு எதுக்கு தொழிலாளர் தினம்? யாருக்கு உரிமைகோரி இந்த தினம்?” என, அம்மக்கள் தெரிவித்தனர்.  

இதேவேளை, காந்தி பூங்காவுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம், நேற்றுடன் 70ஆவது நாளை எட்டியுள்ளது. எதிர்பார்ப்புடன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த தாங்கள், இன்று வீதியில் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கின்ற போதிலும், உறுதியான பதில் இதுவரையில் வழங்கப்படவில்லை” என்று, பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .