Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நரியொன்று, புலிக்கதையை கூறி, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைத்து ஆயிரம் பொய்களைக் கூறினாலும், உண்மைகள் ஒருபோதும் வரலாற்றை மாற்றி எழுதப்போவதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அக்கட்சி, ஊடகங்களுக்கு நேற்று (04) விடுத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புலிகள் தமது பயிற்சி முகாமாகப் பாவித்தார்கள் என்பதால் தாமும் அதை இராணுவ முகாமாகப் பாவிக்கின்றோம் எனக்கூறி, படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அறிவியல் நகர்ப் பகுதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாமே அறிவியல் நகரை மீண்டும் பல்கலைக்கழக வளாகமாக மாற்றினோம்.
புலிகளின் பயிற்சி முகாமும், படையினரின் முகாமும் இருந்த இடத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், பொறியில் பீடமும் இன்று மீண்டும் அமையப் பெற்றிருப்பதற்கு, நாம் நடத்திய இணக்க அரசியல் வழிமுறையூடாக மத்திய அரசாங்கத்துடன் கடுமையாகப் போராடி இருக்கின்றோம்.
அப்போது உயர்க்கல்வி அமைச்சராக இருந்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, கேட்டும் படையினர் அறிவியல் நகரை மீள ஒப்படைக்க மறுத்திருந்தார்கள்.
கிளிநொச்சியில் மீண்டும் விவசாய பீடமும், பொறியியல் பீடமும், தகவல் தொழில்நுட்ப பீடமும் அமையவேண்டும் என்பது பேராசிரியர் துரைராஜாவின் காலத்திலிருந்து யாழ். பல்கலைக்கழகத்தின் நீண்டகால கோரிக்கையாகவும் கனவாகவுமே இருந்தது. அந்தக் கனவையும் அதிலிருந்த நியாயத்தையுமே நாம் நிறைவேற்றி வைத்தோம்.
எனினும், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கூறுவதுபோல் பல் மருத்துவ பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு புலிகள் அத்திபாரம் அமைத்திருந்தால் புலிகளின் அந்தக் கனவை சிதைத்து, புலிகள் அமைத்த பல் மருத்துவ பயிற்சி நிலையத்துக்கான அத்திபாரத்தின் மேல், மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் இப்போது கால் நடை பயிற்சி நிலையத்தை அமைத்திருக்கின்றார். புலிகளின் கனவை ஐக்கரநேசன் சிதைத்துவிட்டு, புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கின்றது என்று கூறுவது வேடிக்கையாகும்.
எனவே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் மீட்டெடுத்த அறிவியல் நகரில், மாகாணசபையில் அமைச்சராகி மூன்று வருடங்களுக்குப் பிறகு காலடி வைத்துவிட்டு, நரி ஒன்று புலிக்கதை கூறி ஆதாயம் தேட முயற்சித்திருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .