Princiya Dixci / 2017 மே 06 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜயசேகரவின் பணிப்புரைக்கமைய பொத்துவில், திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் வலயத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஜீ.ஜீ.என்.ஜெயசிறிவின் ஆலோசனையுடன் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாரவின் தலைமையில் பெரும் குற்றப்பிரிவு அதிகாரி மொஹமட் சதாத்தின் குழுவினரான பொலிஸ் சாஜன்களான கே.பி.ஏ.சுமதிரெத்தின, எம்.டி.எம்.இஷாத், பொலிஸ் கொஸ்தாபர் எம்.டி.தாஹீர், டபிள்யூ.ஏ.மஜீத் மற்றும் சேனாரத்தின அகியோர் அடங்கிய குழு, மோப்ப நாய் மற்றும் தடய ஆய்வு பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்தன.
இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தொலைபேசி தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள், நான்கு தினங்களுக்குள் செய்யப்பட்டனர்.
அதனடிப்படையில், கோமாரி கிராமத்தை சேர்ந்தவரும் விநாயகபரம், கண்ணகிபுரம் கிராமங்களில் வசிப்பவருமான பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று அதிகாலை விநாயகபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து அட்டப்பளத்தில் வைத்து இரண்டாவது சந்தேகநபர், நேற் மாலை கைது செய்து செய்யப்பட்டதுடன், மூன்றாவது சந்தேகநபரான நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த நபரொருவர் தலைமறவாகியுள்ளார்.
மேற்படி விநாயகபுரம் காளி கோயிலில் திருடப்பட்ட நகைகள் அனைத்து பிரதான சந்தேகநபரால், களுவாஞ்சிகுடி மகிலுர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் கொடுத்து களுதாவளைப் பகுதியில் உள்ள நகைக் கடையில் அடகு வைக்கப்பட்டு, ஒரு இலட்சத்தி மூவாயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது.
இப்பணத்தில், நகை அடகு வைக்க உதவிய பெண் 25,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை அட்டப்பளத்தைச் சேர்ந்த இரண்டாது சந்தேகநபரிடம் கொடுத்துள்ளார்.
இரண்டாவது சந்தேகநபர் இப்பணத்தில் 25,000 கோயில் இருந்து நகை திருடியதாக நம்பப்படும் முதலாவது சந்தேகநபருக்குப் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நகை அடகு வைக்க உதவிய பெண், அக்கரைப்பற்று பிரதேசத்தில் வயல் காட்டில் வைத்துக் கைதுசெய்துள்ளதுடன், இவரிடம் இருந்து 25,000 பணமூம் பெறப்பட்டது.
இவரின் தகவலின் ஊடாக களுவாஞ்சிக்குடியில் உள்ள நகை அடகு பிடிக்கும் நிலையத்துக்குச் சென்று சுமார் 10 பவுனும் 3 கிராம நகையும் மீட்கப்பட்டதுடன், அவரையும் விசாரணைகளுக்காகப் பொலிஸார் அழைத்து வந்திருந்தனர்.
இவரிடம் இருந்து மூன்று மாலைகள், தாலிக் கொடி, அட்டியல் மற்றும் பதக்கம் என்பன பொலிஸாரினால் மீட்டுள்ளதுடன், திருக்கோவில் மங்கமாரி அம்மன் கோயில் மற்றும் தம்பிலுவில் முனையூர் கிராமத்தில் அமைந்துள்ள காளிகோயில் என்பனவற்றிலும் அண்மையில் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் இக்கொள்ளைச் சம்பவத்துக்கும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .