Niroshini / 2017 மே 09 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கவிதா சுப்ரமணியம்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு தேவையோ அந்த அளவுக்கான பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அவருடைய பாதுகாப்பைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது குறித்து, பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரே தீர்மானிப்பர். இதில், அரசாங்கத்தின் தலையீடு என்று எதுவும் கிடையாது.
“மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றால், பாதுகாப்புத் துறைக்குக் கோரிக்கை விடுத்து, தனக்கு எந்த அளவுக்கு பாதுகாப்புத் தேவை என்பதை பெற்றுக்கொள்ள முடியும்.
“இது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கென்று எடுக்கப்பட்ட தீர்மானமல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் குறைக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறையினர் தீர்மானித்தால், அந்தப் பாதுகாப்பும் குறைக்கப்படும்” என்று, இதன்போது அவர் மேலும் கூறினார்.
மே தினத்தன்று, காலி முகத்திடலில் குழுமிய கூட்டத்தைக் கண்டு பயந்தே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று, சில எம்.பிக்கள் கூறுகின்றர் என்று, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, “கூட்டத்தைக் கண்டு பயந்து இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. இதற்காக வருந்த வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது” என்றும் பொதுச் செயலாளர் பதிலளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .