Princiya Dixci / 2017 மே 10 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும் என்பது, படித்தவர்களும் பரம்பரைச் சரித்திரம் தெரிந்தவர்களும் அறிந்த உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ள சௌமிய இளைஞர் நிதியம், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடியைப் பறக்கவிடுமாறு, ஒப்பாரி ஓலமிடுவது நகைப்புக்குரியதாகும்” என்றும் தெரிவித்துள்ளது.
“1988 மற்றும் 1989 களில் இந்தியப் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கூச்சலும் கோசமும் போடுகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி, பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, நோர்வூட் செல்ல உள்ள யட்டியாந்தோட்டை, தெஹியோவிற்ற, டென்ஸ்வத்த தோட்ட மக்கள் மத்தியில் பேசுகையில் அந்த நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு, யட்டியாந்தோட்டை மரிய பவனில் நேற்று (10) இடம்பெற்றுது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்தியப் பொருட்களை இலங்கையில் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தவர்களே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, கறுப்புக் கொடிகளை பறக்கவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“இந்தியப் பொருட்களை தடைச்செய்யுமாறும் விடுத்த கோரிக்கையை அடுத்து, கண்டி-பல்லேகல கம்உதாவையில் 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தியப் பொருட்களை இங்கு தடை செய்வதற்கு முன்னர், அரச மரத்தையும் பௌத்த மதத்தையும் முதலில் தடை செய்து காட்டட்டும் என்றதுடன், சேலை அணிவதையும் இடியப்பம் உண்பதையும் நிறுத்தி காட்டட்டும் என்றும் சவுக்கடியாகப் பதில் கொடுத்தார்.
“இந்நிகழ்வில், மறைந்த ஜனாதிபதியான ஆர். பிரேமதாஸ, அன்றைய பிரதமராக இருந்தார்.
“இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்கு காய்ச்சல் அடிக்கும் என்பது, படித்தவர்களும் பரம்பரை சரித்திரம் தெரிந்தவர்களும் அறிந்த உண்மையாகும். இந்தியாவிடமிருந்து இலங்கையை காலச்சக்கரமே இடையில் பிரித்துவிட்டது. இல்லையேல் இந்தியாவின் ஒரு மாநிலமாகத்தான் இலங்கையும் இன்று திகழ்ந்திருக்கும்.
“சரித்திரம் இவ்வாறிருக்க நம்நாட்டில் உள்ள சீகிரியக் குன்றின் சரித்திரம் தெரியாத, அக்குன்றில் கூட ஏறாதவரான, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுத்து, ஒப்பாரியும் ஓலமும் இடுவது நகைப்புக்குரியது” என்றார்.
“எமது நாட்டுக்காக, இந்தியா பல தியாகங்களை மட்டுமன்றி தேவையான அனைத்து உதவிகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியாக வழங்கப்பட்ட உதவிகளில் ஒன்றுதான் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையாகும்” என்றார்.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை வெற்றி பெறுவதற்கு, இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாகிய நாம், இறை ஆசி வேண்டி பிரார்த்திக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .