Kogilavani / 2017 மே 12 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெறும் பிரதான வைபவத்தில் பங்கேற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையை ஆங்கில மொழியிலேயே நிகழ்த்தவுள்ளார்.
அவருடைய உரையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், பின்னர் உரைபெயர்க்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட வைபவத்தின் வரவேற்புரையை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவேற்புரையை தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆகியோரின் உரைகள் இடம்பெறும். இறுதியாகவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
கோரிக்கைகளை முன்வைக்க எதிர்ப்பார்ப்பு இந்திய அரசாங்கத்தின் உதவியில், மலையகத்துக்கு மேலும் 25,000 வீடுகள் கட்டித்தரப்படவேண்டும் உள்ளிட்ட இன்னும் பல கோரிக்கைகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு வழக்கப்பட்டுள்ளது. இதன்போதே, மேற்படி கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
“மலையகத்தின், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாக, வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையகத்தின் கல்வி அபிவிருத்திக்காக, தமிழகத்திலிருந்து ஆசிரியர்களையும் அதே நேரத்தில் மலையகத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை அமைப்பதற்கும், கணினித் தொழில்நுட்பப் பயிற்சிகளை எமது இளைஞர் யுவதிகளுக்கு மலையக பகுதிகளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்போம்.
இதேவேளை, வடக்கு,கிழக்குக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுகின்ற போது, மலையக மக்களின் அரசியல் தீர்வுக்கும் அவர்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் அதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன்வைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையும் மலையக தலைவர்கள் மலையகத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்வதை, பார்ப்பதற்கான வாய்ப்பு, மலையக மக்களுக்கு, இன்று (12) கிட்டவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் நகரில் பங்கேற்கும் விசேட நிகழ்வின் போதே, மலையக தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.
அந்த வகையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் எம்.பி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் ஆகியோர், ஒரே மேடையில் அமரவுள்ளனர். அவர்களுடன், அந்த கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமரவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .