2026 மார்ச் 07, சனிக்கிழமை

“மலையக மக்கள் அயராது உழைக்கும் உழைப்பாளிகள்”

Yuganthini   / 2017 மே 12 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உலகத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த  'சிலோன் டீ' தேயிலைக்குப் பின்னால், ம​லையக மக்களின் வியர்வையும் உழைப்பும் இருப்பது பலரும் அறிந்திடாத உண்மை" என, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இன்று (12) தெரிவித்தார்.

நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெற்ற பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த அழகிய மலையகப் பிரதேசத்துக்கு வருகைத் தரும் முதலாவது இந்தியப் பிரதமர் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவமாகும். மலைநாட்டில் தான் தேயிலை உற்பத்தி இடம்பெறுகின்றது என்பது உலகமக்கள் அனைவரும் அறிந்த
ஒன்​றாகும்.

உலகில்   தேயிலை ஏற்றுமதியில் இலங்கை 3ஆவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் தேயிலை தேவைப்பாட்டின் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்து, அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் ​அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு உந்து சக்தியாக திகழ்வது மலையக மக்களின் அயராத உழைப்பாகும். இவர்களின் உழைப்பை உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் மதிக்கின்றனர்.

இந்தத் தேயிலைக்கும் எனக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது. அதனைப் பெரும்பாலானோர்கள் கேள்விபட்டிருப்பீர்கள். தேநீருடன் கலந்த உரையாடல் உன்னதமான உழைப்பின் மரியாதையை குறிக்கிறது.

உங்களுடைய முன்னோர், வலுவான மன தைரியத்துடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து பல இன்னல்களை எதிர்நோக்கிய போதும் மனம் தளராது தமது பணியை விடாது தொடர்ந்தனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபோதும் மலைநாட்டு மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக, அமைதியான முறையில் ​போராடினர். அதனை நாங்கள் மறக்கமாட்டோம். உங்களின் உரிமைகள், பொருளாதார மேன்மை ஆகியவற்றுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கருத்துக்கு அமைய எமது செயல்களை முன்கொண்டு செல்வோம்.

நீங்கள் அனைவரும் முதன்மையான பழமையான பாரம்பரிய செம்மொழியான தமிழ்மொழியை பேசுவதுடன் சிங்கள மொழியையும் பேசுகின்றமையானது பெருமைக்குரிய விடயமாகும்.

மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்ல சிறந்த ஐக்கியத்தினை வலுப்படுத்துவதற்கும் உகந்ததாகும்.

நாம் சமூகத்தில் மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கு வழிவகுக்க வேண்டுமே ஒழிய, பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம் என்பற்றை எந்ததொரு ​தடையும் இல்லாமல் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

நான், மகாத்மா காந்தி பிறந்த குஜாரத் மாநிலத்தில் பிறந்தேன். 90 ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா காந்திகூட  நுவரெலியா, கண்டி, ஹட்டன், பண்டாரவளை ஆகிய மலைநாட்டு்  பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். அவரின்  நோக்கம் தோட்ட தொழிலாளர்களின் சமூகம், பொருளாதாரத்தினை மேன்மைப்படுத்துவதாகும்.

அந்தவகையில் நாங்களும் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் மலையக மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

வருடந்தோரும் 700க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மாணவர்கள், கல்விக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இனிவரும் காலங்களிலும் மலைநாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பொருளாதாரம் போன்றவற்றுக்கு எங்களது பங்களிப்பினை வழங்குவோம்" என, அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .