2024 மே 03, வெள்ளிக்கிழமை

'பதவி விலகுவதாக மிரட்டிச் சாதிக்குக'

Niroshini   / 2017 மே 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோர் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றோ மிரட்டி, இவ்விடயத்தைச் சாதிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், எத்தனையோ புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களைத் தம்வசம் வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் அவ்வாதாரங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அருகில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை செய்தால், அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்.

"எல்லாவற்றுக்கும் மேலாக, யுத்தத்தை தான்தான் முன்னின்று நடத்தி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்தேன் என்று கூறுகின்ற சரத் பொன்சேகா, தற்போது அமைச்சராக நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். அவரிடமே இந்த  ஆதாரங்களைக் காட்டினால், அவர் இலகுவாக இராணுவ அதிகாரிகள் அநேகரை அடையாளம் காண உதவுவார். அதனடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்து, அவர்களின் உறவுகளுக்கு ஒரு முடிவை அறிவிக்கலாம்.

"இந்தப் பொறுப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையில் எடுத்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமல் 100ஆவது நாளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில், அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பாராமுகமாகவே நடந்து கொள்கின்றன.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பதவிகளைத் தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் எனக்கூறியோ, மிரட்டிச் சாதிக்கமுடியும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .