2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு

Administrator   / 2017 மே 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கருணாகரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே - யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை.

மோடியின் முதலாவது இலங்கை விஜயத்தின்போது, தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர் வட்டாரங்களிலும், மெல்லிய சலசலப்பு இருந்தது. குறிப்பாக ஈழ ஆதரவுத் தலைவர்களான தொல். திருமாவளவன், திருமுருகன் காந்தி, சீமான், பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, வைகோ உள்ளிட்ட பலர், மோடியைப் பல வகையிலும் அறிவுறுத்தியிருந்தனர். 

சிலர் அந்தப் பயணத்துக்கு, எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்கள். இந்திய மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளும் முறைமை, ஈழத்தமிழர் அரசியல் உரிமைப் பிரச்சினையில், இலங்கை அரசாங்கத்தின் நீதியற்ற தன்மை எனப் பல விடயங்களைக் குறிப்பிட்டு, அவர்கள் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டிருந்தனர். 

புலம்பெயர் தமிழர்களும், மோடியின் விஜயத்தைக் குறித்து, தங்களுடைய எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இருந்தபோதும் மோடி, தன்னுடைய தீர்மானத்தின்படி இலங்கைக்கு விஜயம் செய்து, அநுராதபுரத்துக்கும் வடக்கே யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் தமிழ்த் தலைவர்களையும் சந்தித்திருந்தார். இதன்மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு, மோடியினால் ஒரு செய்தி உணர்த்தப்பட்டது. “இந்தியா, தமிழ் மக்களுடைய அரசியல் விவகாரங்களில் அக்கறையோடிருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களை அது கைவிடவில்லை. அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்குத் தயாராக உள்ளது” என்பது தான் அச்செய்தி.

இந்தியாவின் உதவிகளின் அடிப்படையில், விக்னேஸ்வரனிடம் புதிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகளையும் அவர் கேட்டிருந்தார். முதலீடுகளை வடக்கில் ஆரம்பிப்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளது எனவும் இதன் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கு உதவமுடியும் என்றும், விக்னேஸ்வரனிடம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கும்படி, மோடி கூறியிருந்தார். கூடவே, வடக்கில் கல்வி, கலாசார மேம்பாட்டை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் திட்டங்களையும் அறிவித்திருந்தார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய உதவி வீட்டுத்திட்டத்தைப் பற்றியும் பேசப்பட்டது.

அப்போது அவர், மலையகத்துக்குச் செல்லவில்லை. ஆனால், மலையகவாழ் இந்திய வம்சாவளி மக்கள் குறித்து, மோடியின் விஜயத்தில் கவனமெடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து,  மலையகத்தலைவர்கள் எதிர்வுகளைக் கூறியிருந்தனர். இருந்தும் மோடி அதுகுறித்து, அப்போது எதையும் கூறவில்லை.

மலையகத்துக்கான பயணத்தையும் செய்யவில்லை. இது, மலையக மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. “எதற்காக நாம், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறோம்? கைவிடப்பட்டவர்களாக இருக்கிறோம்?” என்றவிதமாக, அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தக் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் விதமாக, இப்போது நடந்திருக்கின்ற இரண்டாவது விஜயத்தில் மோடி, மலையகத்துக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டிருக்கிறார். இரண்டுநாள் பயணமாக இலங்கை வந்திருந்த மோடி, முதல்நிகழ்வாக, கொழும்பில் சர்வதேச பௌத்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து மலையகத்துக்குச் சென்றார். அங்கே இந்திய உதவித்திட்டத்தின் கீழ், மிகப் பிரமாண்டமான அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையைத் திறந்து வைத்தார். மேலும் பல உதவித்திட்டங்களைப் பற்றி, அங்கே கூடியிருந்த மக்களுக்கு அறிவித்தார்.

குறிப்பாக, ஏற்கெனவே இந்திய உதவித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களுடன், மேலதிகமாக 10,000 வீடுகளை இந்தியா நிர்மாணிக்க உதவும் என்று அறிவித்திருக்கிறார்.

மோடியின் இந்த அறிவிப்புகளையிட்டு, மலையக மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். மலையகத் தலைவர்களுக்கும், இது பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மோடிக்கு, மலையக மக்களும் மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகள், இலங்கை அரசியலிலும் மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் போக்கிலும் இந்திய - தமிழ்நாட்டு அரசியலிலும், பெருங்கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இதிலும் இந்தியா, தன்னுடைய நோக்கு நிலையைத் தெளிவாக, இலங்கைக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

“மலையக வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளில், இந்தியா கரிசனையோடிருக்கிறது. இந்தியவழி மக்கள் என்ற அடிப்படையில், அவர்களுடைய நலன்கள், பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான கடப்பாட்டையும் தார்மீகப் பொறுப்பையும்,  உரித்தையும், இந்தியா கொண்டிருக்கிறது” என்ற விதமாக, அந்த வெளிப்பாடு அமைந்திருக்கிறது.

மோடியின் இந்த இரண்டு பயணங்களும், இலங்கைக்கு அழுத்தமாகச் சொல்ல முயன்றிருப்பது, இலங்கையின் மீது தன்னுடைய செல்வாக்குக்கும் உரித்துக்குமான அடிப்படைகள் உண்டு என்பதையே. இதற்கான வாய்ப்பைக் கொடுத்தது, இலங்கையும் இலங்கையின் பலவீனமான நடவடிக்கைகளுமே. குறிப்பாக, இலங்கையின் தமிழ்மொழிச் சமூகங்களின் அரசியல் உரிமைகளில், இலங்கை நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றால், அந்த விவகாரங்களில் இந்தியா கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஏனென்றால், இலங்கையின் இனமுரணானது, இந்திய அரசியலில் தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கத்தை உண்டாக்கும் ஒரு விடயம் குறித்து, இந்தியா சிந்திக்காமல் இருக்க முடியாது என்பது ஒன்று. இரண்டாவது, இந்திய வம்சாவளியினரான மலையக மக்களின் உரிமைகளையும் நலன்களையும், இலங்கை சரியாகக் கவனிக்காதவிடத்து, அவர்களின் நலன்கள் குறித்தும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்தும், இந்தியா பேசவேண்டியிருக்கிறது என்பதாகும். இது, இந்திய வம்சாவழியினர் என்ற உரித்தின்பாற்பட்டது என, இந்தியா காட்ட முற்படுகிறது.

ஆகவே, இந்த இரண்டு தரப்பின் நலன்கள் குறித்தும் இந்தத்தரப்புகளின் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை அரசாங்கம், இனிமேல் பொறுப்பற்றோ, மாறாகவோ நடந்து கொள்ள முடியாது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. இது, உண்மையிலேயே இந்த மக்களின் நலன்சார்ந்த அக்கறையின்பாற்பட்ட, இந்திய வெளிப்பாடா என்று கேட்டால், இது குறித்து நாம் சற்று யோசிக்கவே வேண்டும்.

ஏனென்றால், இந்தியாவுக்கு இந்தத் தரப்புகளின் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், இந்தத் தரப்புகளின் பிரச்சினைகளுக்கான தீர்வினை, இந்தியா எப்போதோ கண்டிருக்க முடியும். இவ்வளவு காலதாமங்கள் தேவையில்லை.

ஆகவே, இது, இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கும் இந்தப் பிராந்தியத்தில் இந்தியச் செல்வாக்கின் உறுதிப்பாட்டுக்குமான ஒரு தொடர் நடவடிக்கையின்பாற்பட்ட வெளிப்பாடுகளே. இதற்கு, இந்திய வம்சாவளி மலையக மக்களும் ஈழத்தமிழர்களும் அவர்களுடைய அரசியல் பிணக்குகளும் பயன்படுத்தப்படுகின்றனர். 

அதாவது, இந்தக் கருவிகளை இந்தியா தனக்கு இசைவாகப் பயன்படுத்த விழைந்துள்ளது. அவ்வளவே.

அரசியல் என்பது, எப்போதும் இப்படித்தானிருக்கும். வல்லாதிக்கச் சக்திகள், தங்களின் நலனுக்காக ஏனைய சக்திகளை அல்லது தரப்புகளைப் பயன்படுத்த முற்படும். அதற்குள் பொருத்தமான பொறிமுறைகளை உருவாக்கிக் கொள்வதன் மூலமாக, ஏனைய சக்திகள், தங்கள் நலன்களையும் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ளும்.

இதுவே வெற்றிகரமான அரசியல் பொறிமுறையாகும். இதில் வடக்குத் தலைமை அல்லது ஈழத்தமிழ்த் தலைமை, பின்னடைந்திருக்கிறது. வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியாவைச் சரியான முறையில் கையாளவில்லை என்று கூறலாம். மோடியின் கைகளை அவர் முறையாகப் பற்றிக்கொள்ளவில்லை. இதனால் வடக்குக்கான வாய்ப்புகள் தவறின. 

இதேவேளை மலையகத் தலைமைகள், இதைத் தமக்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றன. குறைபாடுகள் இருந்தாலும், தங்களின் இயலுமை, சக்தி என்பவற்றுக்கு ஏற்ப அவை, மோடியையும் இந்தியாவையும் பயன்படுத்த முயன்றுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட ஒவ்வொரு தரப்பும், மோடியிடம் விடுத்துள்ள கோரிக்கையும் கொடுத்துள்ள மனுக்களும், இதற்கான சான்றுகளாகும்.

இதேவேளை, இந்தியாவின் நோக்கு நிலைக்கு மாறாக, ஈழத்தமிழர்களின் பிரச்சினையையும், மலையகத் தமிழர்களின் பிரச்சினையையும், வழமையைப்போல கையாளலாம் என இலங்கை சிந்திக்கலாம். ஏற்கெனவே இந்தியாவின் காதில் பூவைச் சொருகியதைப்போல, இன்னும் செய்யலாம் எனவும் கருதலாம். ஆனால், இன்றைய நிலையில், இந்தியாவின் அணுகுமுறைகள் வேறாக உள்ளன. அதற்கான தேவையும், முன்னெப்போதையும்விட வேறாகவே உள்ளது. 

இந்தியா, மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்த வளர்ச்சியின் வேகத்துக்கு, இந்தியா தன்னை விஸ்தரிக்கவும் போட்டியிடவும் வேண்டியுள்ளது. இதனால் அது, தன்னைப் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு தகவமைக்க விரும்புகிறது. இது, அதற்குத் தவிர்க்க முடியாத ஒரு விளைவாகும். இந்த அடிப்படையிலேயே அது, அயல் நாடுகளுடனான உறவையும் அயற்சக்திகளின் மீதான செல்வாக்கையும் மேற்கொள்ள முயல்கிறது.

இப்படிச் செய்யும்போது ஏற்படும் சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்புகளைத் தடுக்கும் வகையிலேயே, இந்தியா, இலங்கையின் பலவீனங்களைப் பயன்படுத்த விழைகிறது. ஏற்கெனவே கூறப்பட்டிருப்பதைப் போல, இலங்கையின் பலவீனங்கள், இந்தியாவின் நோக்கங்களுக்கு உதவுகின்றன.

ஆகவே, இலங்கையின் பலவீனங்கள், அதற்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளன. இந்தப் பத்தியாளர் உட்படப் பலரும் அடிக்கடி சுட்டிக்காட்டி வருவதைப்போல, தன்னுடைய சொந்த மக்களிடம் இறங்கி வரமுடியாத ஓர் அரசாங்கம், தன்னுடைய சொந்த மக்களுக்கு விசுவாசமாக நடக்க முற்படாத ஓர் அரசாங்கம், பிறரின் காலடியில் சேவகம் செய்ய நேர்கிறது.

இதுவே, இலங்கையின் சமகால நிலைமையாகும். இந்தியாவுக்கு மட்டுமல்ல, வெளிச்சக்திகள் பலவுக்கும் சேவகம் செய்தே பிழைக்கும் நிலைக்கு, இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது. இப்படியான அரசியல் சூழலைத்தான், இலங்கையர்கள் இன்று எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை மேலே சொல்லப்பட்டுள்ளவாறு, இலங்கைச் சமூகங்களின் மீதான இந்தியாவின் அக்கறையும் உதவிச் செயற்பாடுகளும், நிச்சயமாக இலங்கையில் மேலும் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தப் போகின்றன. இது, நல்விளைவுகளுக்குச் சமதையான எதிர்விளைவுகளை, நிச்சயமாக உண்டாக்கும். குறிப்பாக இந்திய ஆதரவினாலும் உதவிகளினாலும் வளர்ச்சியடையும் மலையகத் தமிழர்களை சிங்களச் சமூகம் எதிர்கொள்ளச் சிரமப்படும்.

 இந்தியத் திட்டத்தின் கீழ் மிகத் துரிதமான ஒரு மத்தியதரவர்க்க வளர்ச்சியை, மலையக தமிழ்ச்சமூகம் எட்டப்போகிறது. இது, இந்தியாவுக்குத் தேவையான ஒன்று. எப்போதும் மத்தியதர வர்க்கத்தின் வளர்ச்சியே, அரசியலில் முரணியக்கக் கூறுகளைப் பேணுவதற்கு உதவுவதுண்டு. ஆகவே, அதையே இந்தியாவும் ஊக்குவிக்கும். இந்தியாவின் நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இந்த மத்தியதரவர்க்கம் உதவியாகச் செயற்படும். எனவே இதை, இந்தியா துரிதமாகச் செயற்படுத்தப்போகிறது.

இவ்வாறான நிலையில், வளர்ச்சியடையும் மலையக மத்தியதர வர்க்கத்துக்கும் சிங்கள மத்தியதர வர்க்கத்துக்குமிடையிலான மோதல், நிச்சயமாக உருவாகும். இது இந்தப் பிராந்தியத்தில் கலவரங்களுக்கும் வன்முறைக்கும் அடிப்படையாக அமையும். வளர்ச்சிப்போக்கில் இது தவிர்க்க முடியாது என, சமூகவியலாளர்கள் எளிதாகக் கூறக்கூடும். ஆனால், இது தனியே எரிந்து தணியும் பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.

பதிலாக, இந்தியத் தலையீட்டை அதிகரிக்கும் வகையில் அமையும். இப்படி அமையும்போது மலையகத்தமிழர்கள், முன்னரை விடத்தனித்த அடையாளத்தையும் கூர்மையான விலகலையும் கொள்ளும் ஒரு சமூகமாகத்திரள்வர்.
இவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம், மலைய தமிழ்த்தேசியம் என்ற அடையாளக்கூறுகளோடு, சமூகங்கள் திரளக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏற்கெனவே இந்தத் தேசியவாதங்கள் கண்டிருக்கிற நெருக்கடிகளும் வீழ்ச்சிகளும், வரலாற்றின் படிப்பினைகளாக இருக்கும்பொழுது, புதியதொரு தேசியவாதமா என்று நீங்கள் கேட்கலாம். தேசியவாதத்தின் ஊற்றுக்கண்களே, மேல்நிலைச்சக்திகளின் துண்டலினால் ஏற்படுவதே. இங்கும் அதுவே நிகழ்வதற்கான அடிப்படைகள் காணப்படுகின்றன.
மேம்போக்காகப் பார்க்கும்போது, மோடியின் வருகை, இலங்கையின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பலவகையிலும் உதவியாக அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவில், நெருக்கத்தை உண்டாக்கியுள்ளது. நிலவி வரும் பாரம்பரிய உறவை மேலும் நெருக்கமாக்கியுள்ளது என்று தோன்றலாம். ஆனால், இதற்குப் பின்னால், வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கையும் இலங்கையின் நிலைவரத்தையும் மாற்றியமைக்கும் பொறிமுறைகளை, அது உருவாக்கிச் செயற்படுத்தி விட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

இப்பொழுது மகிழும் தரப்புகள், நாளை இந்த மகிழ்ச்சியை எவ்வாறு தக்க வைப்பது, எப்படி வளர்த்தெடுப்பது, சர்வதேச அரசியல் போட்டிகளுக்குள் சிக்குப்படாமல் எவ்வாறு தம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், மோடி டெல்லிக்கு விமானமேறிய மறுநாள், சீனாவுக்கு விமானமேறினார் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இது, சர்வதேச அரசியற் சதுரங்கத்தின் விளையாட்டின்றி வேறென்ன?

மேலும் தலைகள் உருளாமற் இருக்கக் கடவது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X