2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

1983: முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்

Administrator   / 2017 மே 15 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 92)

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

அரசியல் தலைமை எதிர் ஆயுதத் தலைமை   

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை மீறியும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலைமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் நேரெதிர் நிலைகளில் நிறுத்தியது.   

வெளிப்படையான இந்த மோதலுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டிய கடப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தார்கள். தமிழ் மக்கள் அளிக்கப் போகும் பதிலே, தமிழர் அரசியலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமையவிருந்தது.   

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் பின்வாங்கிய நிலையில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்ட நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி களம் கண்டது.   

அரசியல் ரீதியில் நிச்சயமாக இது அமிர்தலிங்கத்துக்குப் பெரும் சவாலான ஒரு நிலை. தேர்தலைப் புறக்கணிப்பது என்பது வேறு விடயம்; ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அறிவிப்புக்கு அல்லது அச்சுறுத்தலுக்குப் பின் தேர்தலிலிருந்து விலகுவதும், தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் வேறானதாகும்.   

பழுத்த அரசியல் தலைவரான அமிர்தலிங்கம், அதனை நிச்சயமாகச் செய்திருக்க வாய்ப்பில்லை. இங்கு, தமிழரின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யார் என்ற பெரும் கேள்விதான் முன்னிலை பெறுகிறது.  

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, குறிப்பாக பலம்பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தேர்தலைப் புறக்கணிப்பது, அதனூடாக இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பது மட்டும்தான் நோக்கமாக இருந்திருந்தால் நிச்சயமாக அமிர்தலிங்கத்துடனான பேச்சுவார்த்தைகளினூடாக அதனை அடைந்திருக்கலாம்.   

ஆனால், இது தமிழர்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யாரென்ற ஒருவித போட்டியாக மாறிவிட்டிருந்தது கண்கூடு. தமிழர் அரசியல் தலைமைகளால் இதுவரை எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியும் கோபமும் அவர்களைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆயுதமேந்திய சக்திகளாக தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் உருவாகக் காரணமாயின. இந்த மாற்றத்தை அங்கிகரிப்பதா, நிராகரிப்பதா என்ற கேள்வி தமிழ் மக்கள் முன் தொக்கி நின்றது.   

அமிரின் நிலைப்பாடு  

அமிர்தலிங்கம் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். “தமிழீழத் தனியரசை ஸ்தாபிப்பதற்காகப் போராடும் தமிழ் இளைஞர்களின் வீரதீரத்தை எண்ணி பெருமைப்படுகிறேன்” என்று அமிர்தலிங்கம் கூறினார்.  

ஆனால், “அதேவேளை அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தை உதாரணம்காட்டிய அமிர்தலிங்கம், “அயர்லாந்துப் புரட்சி இராணுவமானது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அதேவேளை, வட அயர்லாந்தில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டிருந்தனர்” என்பதைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, “அயர்லாந்து புரட்சி இராணுவத்துக்குச் சார்பான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர், அயர்லாந்து விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.   

போராட்டத்துக்குச் சமாந்தரமாக ஜனநாயக அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அமிர்தலிங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அவசியப்பாட்டை மறுக்கவில்லை அல்லது அதனை மறுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை.   

ஆனால், தமிழ் மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகளாக ஆயுதக் குழுக்கள் மாறிவிடக் கூடாது. அல்லது தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாக ஆயுதக் குழுக்கள் மட்டும் ஆகிவிடக் கூடாது; மாறாக, பலமான ஜனநாயக ரீதியான அரசியல் சக்தி தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது, அது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.   

தமிழ் மக்களின் முடிவு  

ஆனால், 1983 மே உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வேறானதொரு முடிவை வழங்கியிருந்தார்கள். வடக்கைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 90% ஆன மக்கள் உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.  பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு மொத்த வாக்காளரில் வெறும் 2% வாக்குகளே கிடைத்திருந்தன. யாழ்ப்பாணத்தில் 10% வாக்குகளே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்தது.   

ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் அண்ணளவாக 80% வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் அண்ணளவாக வெறும் 10% வாக்குப்பதிவே இடம்பெற்றிருந்தமை ஒரு தடாலடியான மாற்றமாகும்.  தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கு, தமிழ் மக்களின் அங்கிகாரமாக இதனைக் கருதலாம்.   

அதேவேளை, சில விமர்சகர்கள் ஆயுதங்களுக்கு அஞ்சியே தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை; ஆகவே இது தமிழ் மக்களின் சுயாதீன முடிவல்ல என்றும் கருத்துரைப்பர். ஆனால், ஏறத்தாழ ஒரு வருட காலத்துள் 80% இருந்து 10% ஆக வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்தமையானது, வெறுமனே ஆயுத அச்சுறுத்தலால் மட்டும் அடையப்பெறக்கூடியதொன்றல்ல;   ஏனெனில் அன்று அத்தனை இலட்சம் மக்களை ஆயுதங்களால் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆயுதக்குழுக்கள் அளவிலும் பலத்திலும் பெரிதாக இருக்கவில்லை.

ஆகவே, தமிழ் அரசியல் தலைமைகளின் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் நம்பிக்கையீனமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மீதான அனுதாபமும் நம்பிக்கையும் தமிழ் மக்களின் இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.   

ஆனால், இந்த முடிவு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை நிச்சயம் ஆட்டிப் போடும் ஒன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், இந்தத் தேர்தல் முடிவு தமிழ் மக்களின் ‘ஏக அரசியல் சக்தி’ என்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் விம்பத்தை நொறுக்குவதாக அமைந்தது.   

தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல தெற்கிலும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வலுவை இது சிதைப்பதாக அமைந்தது. 1983 ஜூலை ஒன்பதில், ‘லண்டன் டெய்லி ரெலிக்ராப்’ பத்திரிகைக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த பேட்டியொன்றில், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயனற்றது; அவர்கள், அவர்களது உயிர்களுக்கு அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஒன்றைச் சொல்வார்கள், வேறொருவருக்கு வேறொன்றைச் சொல்வார்கள். நான் அவர்களுக்காக வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஜே.ஆர், ‘ஆசியாவின் நரி’ என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.   

அதேவேளை தமிழ் அரசியல் தலைமைகளின் வீழ்ச்சியும், ஆயுதக் குழுக்களின் எழுச்சியும், தமிழர் ஜனநாயக அரசியலின் வலுவைச் சிதைத்தமையையும் நாம் மறுக்க முடியாது.  

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் ஜனநாயக அரசியல் இதுவரை எதைச் சாதித்தது என்ற கேள்வியெழுவதையும் தவிர்க்க முடியாது. தமிழ் மக்கள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை நோக்கித் தமது ஆதரவை நகர்த்தியதில் இந்த கேள்வியின் முக்கியத்துவம் அதிகம் என்பதும் மறுக்கப்பட முடியாதது.   

இடைத்தேர்தல் முடிவு  

உள்ளூராட்சித் தேர்தல்களுடன், நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகிய 18 ஆசனங்களுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. இந்த இடைத் தேர்தல்களில் 14 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சியும் மூன்று ஆசனங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஓர் ஆசனத்தை மஹஜன எக்ஸத் பெரமுண சார்பில் போட்டியிட்ட தினேஷ் குணவர்த்தனவும் வென்றிருந்தனர்.   

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இனவெறி  

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் ஆங்காங்கே அவர்கள் நடத்திய தாக்குதல்களும் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு சார்பாக அமையும் விதத்திலான தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பும் எல்லாம் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பையும் இனவெறியையும் பேரினவாதிகளிடையே அதிகரித்திருந்தது.  தேர்தல்கள் முடிந்த பின்னர், 1983 மே மாதத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த சிங்கள மாணவர்கள் சிலரால், தமிழ் மாணவர்களும் தமிழ் விரிவுரையாளர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.   

“உங்களைப் போன்ற தகப்பன் பெயர் தெரியாதவர்களுக்கு பல்கலைக்கழகமும் கிடையாது; ஈழமும் கிடையாது” என்று துவேசப் பேச்சுகளால் தமிழ் மாணவர்கள் மீது வசைமாரி பொழியப்பட்டது.   

மாணவர்கள் என்ற ஒன்றுபட்ட அடையாளத்தைக் கூட இனவெறியும், இனத்துவேசமும் பிளவுபடுத்தியிருந்தது. இந்தத் தாக்குதல்களின் விளைவாக பேராதனை பல்கலைக்கழகத்தில், குறிப்பாக பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்கள், பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறித் தமது வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.

தாக்குதலுக்குள்ளான தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாகவும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் தமிழ் மாணவர்கள் ஈடுபட்டார்கள். 1983 ஜூன் மாதத்தில் அவர்கள் மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய போதும், மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்றன.

தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் இருவர் பல்கலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்துச் சிங்கள மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் வகுப்புப் பகிஷ்கரிப்பு நடைபெற்றது.   

பல்கலைக்கழக மாணவர்கள் இனரீதியில் பிளவுபட்டமையை இது தெளிவாக வெளிக்காட்டியது. இது அடுத்த மாதத்தில்  நாட்டில் நடைபெறவிருந்த அவலங்களுக்கான சமிக்ஞை ஒலியாக இருந்தது.   

நாட்டில் எங்கிருந்தாலும், தமிழ் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற உணர்வை அடுத்தடுத்து அப்பாவித் தமிழ் மக்கள் மீது இராணுவம் உட்பட, பேரினவாத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் கோடிகாட்டி நின்றன.   

வவுனியாவில் வன்முறை  

இந்த நிலையில், 1983 ஜூன் முதலாம் திகதி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான புளொட் இயக்கத்தால் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) விமானப்படை வாகனம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டார்கள். 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வவுனியாவில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் ஆரம்பமாயின. மரணித்த விமானப் படையினரின் பிரேதங்கள் அவர்களது சொந்தக் கிராமங்களான மினுவாங்கொடை மற்றும் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அங்கும் தமிழ் மக்கள் மீது இனவெறித்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கிருந்து அருகருகான பிரதேசங்களுக்கும் இவை பரவின.  

திருகோணமலையில் இனவெறித் தாக்குதல்கள்  

இந்தச் சூழலில், திருகோணமலையில் சிங்கள-தமிழ் இன உறவு மிகமோசமான நிலையை எட்டியிருந்தது. திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் ஆங்காங்கு தொடர்ச்சியாக இடம்பெறத் தொடங்கின.

திருகோணமலையில் தமிழ் மக்கள் மீதான, சிங்கள மக்களின் இனவெறித் தாக்குலுக்குக் காரணம், தமிழ் மக்கள் தம்மை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு, தமிழீழ அரசை ஸ்தாபித்து விடுவார்கள் என்ற அச்சம்தான் என ‘இலங்கையின் தாங்கொணாத் துயர்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.   

ஆனால், இது பற்றித் தனது ‘தமிழர்களுக்கெதிரான அரசு’ (ஆங்கிலம்) என்ற நூலில் நான்ஸி மறே, கிழக்கில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் தமிழர்கள் அல்ல; மாறாக சிங்களவர்களே நன்மையடைய வேண்டும் என்பதாக இது அமைந்தது.

சிங்கள மேலாதிக்கம் கொண்ட சில பிரதேசங்கள் கிழக்கில் உருவாகின. இவை தம்மை விரிவாக்கிக்கொள்ள, தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தின என்று குறிப்பிடுகிறார். காரண காரியங்கள் எதுவானாலும், ஜூன் மாதத்தில் திருகோணமலையில் ஆரம்பமான தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், இரண்டு மாதங்களுக்கு அதிகமாக நீண்டதுடன், கால ஓட்டத்துடன் அதன் உக்கிரமும் அதிகரித்தது. இந்த வன்முறைகள் பொலிஸாராலும் இராணுவப் படையினரின் ஆதரவுடனும் நடந்தன எனப் பலரும் பதிவு செய்கிறார்கள்.  

வவுனியா, பேராதனை, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் தலையெடுக்கத் தொடங்கியிருந்த நிலையில், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வேட்டையை இராணுவம் மும்முரமாக முன்னெடுத்தது. நீர்வேலி வங்கிக்கொள்ளை, கந்தர்மடம் வாக்குச்சாவடித் தாக்குதல் ஆகியவற்றை முன்னின்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனியை இராணுவம் தேடிக்கொண்டிருந்தது.  

(அடுத்த வாரம் தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .