2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

'ஞானசாரரை சிறையிலடையுங்கள்'

Princiya Dixci   / 2017 மே 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாகச் செயற்படுகின்ற ஞானசார தேரரை சிறையிலடைப்போம் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் கூறியதாவது,

"பௌத்த தீவிரவாதிகள், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள், முஸ்லிம்களை பீதியடைய செய்துள்ளதுள்ளன.

அண்மையில் பொலன்னறுவ, ஒனேகம பிரதேசத்திலும், குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன. இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களின் ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வையும், புனித அல்-குர்ஆனையும் தூசித்து மிக மோசமாகப் பேசியிருந்தார். இது முஸ்லிம்களை சண்டைக்கு வலிந்திளுக்கின்ற செயலாகவே இருக்கின்றது.

அதேவேளை வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை இப்றாஹிமியா ஜும்மா பள்ளிவாயல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு, மூதூர் - செல்வநகர் அருகிலுள்ள முஸ்லிம் கிராமத்திலும் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.

இனவாதச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்று, கடந்த ஆறு மாதகாலமாக, நாடாளுமன்றத்தில் நான் பேசி வருகின்றபோதிலும், அவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதனால், இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் புனித ரமழான் நோன்பு காலத்தில், முஸ்லிம்கள் அதிகமாக இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையில், இவ்வாறான இனவாதச் ​செயற்பாடுகள்,  முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டிய தேவையும் உருவாக்கப்பட்டுள்ளது" என ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X