2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

‘சட்டத்தைத் திருத்தும் வரையிலும் காத்திருக்க தேவையில்லை’

Princiya Dixci   / 2017 மே 17 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எனும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக காத்திருக்கவேண்டிய தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டத்துக்கு, அமைச்சர் ஒருவரை நியமிப்பதோடு, அலுவலகத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கையளிக்கப்பட்ட மகஜரை பெற்றுகொண்டு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, அந்த மகஜரை நேற்று (17) பெற்றுக்கொண்ட அவர், ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“இந்த மகஜர், எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனிடமே கையளிக்கப்படவிருந்தது. அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த மகஜரை நான் பெற்றுகொண்டேன், அதன் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்கின்ற சட்டமூலம், கடந்த ஓகஸ்ட் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது, நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும் சட்டமூலம் உருவாக்கப்படுவதற்கு முன்னரும் கூட, அந்தச் சட்டமூலத்தில் இருந்த பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிகாட்டப்பட்டன. 

குறைகளை திருத்தியமைக்கப்பட்டதுடன், அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, எதிர்க்கட்சி அன்றைய தினம் முழுமையான ஆதரவை கொடுத்திருந்தது.  

“வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்தச் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றியிருந்தார். நாடாளுமன்றத்தில் பலவிதமான குழப்பங்கள் இருந்தன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நானும் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில், பிமல் ரட்ணாயக்கவும் ஆதரவாக உரையாற்றினோம்.  

அத்தோடு, அந்த சட்டமூலமானது வாக்கெடுப்பின்றி நி​றைவேற்றப்பட்டது.  

“ஆனால், இன்றுவரைக்கும், அச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து, இதனை நடைமுறைக்கு கொண்டுவருமாறு, பலமுறை வற்புறுத்தியுள்ளார்.  

“இந்தச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அது மேற்கொள்ளப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டு வருகின்றோம் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார்.  

ஆனால், எம்முடை​ய நிலைப்பாடு, செய்யப்படவேண்டிய திருத்தங்கள் பின்னரும் செய்யப்படலாம். ​திருத்தங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்பதற்காக, சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவராமல் இருக்க வேண்டிய எந்தவொரு காரணமும் கிடையாது. இதனை, ஜனாதிபதிக்கு நாம் ஏற்கெனவே திட்டவட்டாக கூறியிருக்கின்றோம்.  

“இந்தச் சட்டம், எந்த அமைச்சருக்கு கீழ் செயற்படுத்தப்படல் வேண்டும் என்று, ஒரு வர்த்தமானி அறிவித்தல், ஆரம்பத்தில், ஜனாதிபதியால் செய்யப்பட வேண்டும். அது இன்னும் செய்யப்படவில்லை. தான் அ​தனைப் பொறுப்பேற்பதாக, பிரதமர், சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அது குறித்து ஜனாதிபதிக்கும் அறிவிருத்திருந்தார்.  

“ஆனால், அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகையினால், கடந்த தடவை, எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதியை சந்தித்த போது, இந்தச் சட்டமூலத்தை, உடனடியாக அமுல்படுத்தும் செயற்பாட்டை செய்யுமாறு, வற்புறுத்தியிருந்தார்.  

அவர்கள் கூறும் அந்த சிறிய திருத்தம், தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடனேயே, நடைமுறைப்படுத்துவதாக, ஜனாதிபதி கூறியுள்ளார்.  

“ஆனால், அந்தச் சட்டம் ​திருத்தம் செய்யப்படும் வரைக்கும் பொறுத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அந்தச் சட்டத்தை நிர்வகிக்கும் ​அமைச்சர் யார் என்று, ஜனாதிபதி, உடனடியாக வர்த்தமானியின் ஊடாக பிரசுரிக்க வேண்டும். அதை, உடனடியாக செய்ய வேண்டும் என்பது, எமது தொடர்ச்சியான வற்புறுத்தலாக இருக்கின்றது.  

“எனவே, இந்தச் சட்டமூலத்தை உடனடியாக அமுலுக்கு கொண்டுவருமாறு அதற்கு பொறுப்பான அமைச்சரை நியமிக்குமாறு, நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருவதோடு, தற்போது கையளிக்கப்பட்டுள்ள மனுவுக்கு, முழு ஆதரவையும் வழங்குவோம்” என்று இதன்போது அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .