2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேருநர்கள் விவகார மனு மீது நாளையும் விசாரணை தொடரும்

Princiya Dixci   / 2017 மே 17 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்துக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நாளையும் (19) தொடரும் என, உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான சிசர டி அப்றூ, நளின் பெரேரா ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்று(17) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரான கம்மன்பில எம்.பியின் சார்பில் ஆஜரான மனோர டி சில்வா, தனது விளக்கவுரையை மன்றில் ஆற்றுப்படுத்தினார். 

1980ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க வாக்காளர் பதிவுச் சட்டத்தின் படி, குறித்ததொரு தேர்தல் மாவட்டத்திலுள்ள சாதாரண குடியிருப்பாளர், ஒரு வருடத்தின் ஜூன் 1ஆம் அந்த மாவட்டத்தில் வசித்திருக்கவேண்டும்.  

எனினும், உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்வதற்குத் தகுதியுடையவர்கள் என, வாக்காளர் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது மிகவும் பாரதூரமானது எனக் கூறினார். 

இதன்மூலம், குறித்ததொரு தேர்தல் மாவட்டத்தில் பதிவுசெய்யப்படும் வாக்காளர்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அதன்மூலம் அந்த மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார். 

விசேடமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களே உள்ளக இடம்பெயர்வாளர்கள் என்று சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அந்த மாகாணங்களின் எல்லைகளில் வாழ்ந்து, தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து தென்பகுதிக்கு வந்தோர், தங்களுடைய பிரதேசங்களில் மீண்டும் பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

உதாரணமாக, பொலன்னறுவை, அநுராதபுரம், வெலிக்கந்தை போன்ற பிரதேசங்களின் எல்லைகளில் வாழ்ந்து, தென் மாகாணத்தில் குடியேறியோர் எனக் குறிப்பிட்டார். 

இதன் காரணமாக, அப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என்றும் வடக்கு, கிழக்கின் எல்லைப் புறப்பிரதேசங்களில் வாழ்ந்து, உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானோருக்கு பழைய சட்டமே காணப்படுவதாகவும் கூறினார். 

அதுமட்டுமின்றி, இடம்பெயர்ந்து வேறு பிரதேசத்தில் வசித்து வருவோர், அப்பகுதியிலுள்ள கிராம சேவகரிடம் தனது சொந்த இடம்தொடர்பில் குறிப்பிட்டு, அத்தாட்சிப்படுத்திக் கொள்ளலாம் என இந்த சட்டமூலத்தில் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகவும் பாரதூரமான விடயம் என்றும் கூறினார். 

உதாரணமாக, கிளிநொச்சியிலிருந்து கொழும்பின் வெள்ளவத்தை பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்த ஒருவர், வெள்ளவத்தையில் தான் வசிக்கும் கிராம சேவகர் பிரிவின் கிராம சேவரூடாக, தனது சொந்த இடம் கிளிநொச்சி என அத்தாட்சிப்படுத்திக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். 

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜுன் ஒபேசேகர, இந்த சட்டமூலம் தொடர்பில் அறிவதற்கு தனக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுவதாகக் கூறியதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை, நாளை வெள்ளிக்கிழமை (19) தொடரும் என, நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .