சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014
 

நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகள் தொடர்பாக ஆராய முஸ்லிம் காங்கிரஸினால் குழு நியமனம்

(கெலும் பண்டார)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு குழுவை நியமித்துள்ளது.

முஸ்லிம்களின் அபிலாஷைகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு ஒரு வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் அதன் கூட்டு கட்சிகளிடம் ஆலோசனைகளை கோரியிருந்தது.

இந்த ஆணைக்குழு ஜனநாயக முறைமையை வலுப்படுத்தல், பொறுப்புக் கூறுதல் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்தல் மற்றும் அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குதல் என்பனபற்றி பிரதானமாக பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த சனிக்கிழமை ஒரு குழுவை நியமித்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.டி .ஹஸன் அலி டெய்லி மிரருக்கு கூறினார்.

இக்குழுவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹஸன் அலி, கல்முனை பிரதி மேயர் நிஸாம் காரியப்பர், ஏ.எம்.பையஸ், எம்.எஸ்.எம்.சல்மான் ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை ஆளும் கூட்டமைப்பின் ஒரு அங்கமான ஜாதிக ஹெல உறுமய, தன் ஆலோசனைகளை இந்த வாரம் அரசாங்கத்திடம் வழங்கும் என கூறியுள்ளது.

'இந்த அறிக்கையில் 285 பரிந்துரைகள் உள்ளன. இவற்றில் முக்கியமான சிபாரிசுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் இவற்றிலிருந்து உடன் கவனிக்க வேண்டிய சிபாரிசுகளை நாம் இனம் காணவேண்டும். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட பணியாணைக்கு அப்பால் சென்ற சந்தர்ப்பங்களையும் இனம் காணவேண்டும்' என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மின் மற்றும் வலு அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க கூறினார்.
Views: 1161

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.