'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை
26-09-2012 11:23 PM
Comments - 0       Views - 2517
பன்னிரண்டு அணிகளில் பலவீனமான அணிகள் என்று ஆரம்பத்திலேயே முத்திரை குத்தப்பட்ட நான்கு சிறிய (minnows) அணிகளும் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளன. எதிர்பார்த்த, உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகவே என் வரிசை வழங்கப்பட்ட எட்டு அணிகளும் தத்தம் நான்கு பிரிவுகளில் இருந்து அடுத்த சுற்றான Super 8 இற்குத் தெரிவாகியுள்ளன.

வெளியேறிய நான்கு அணிகளில் சிம்பாப்வே ஒன்று தான் மிக மோசமாகப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய அணி என்று சொல்லலாம். தாம் விளையாடிய இரு போட்டிகளிலும் படு மோசமாகத் தோற்றிருந்தது.

அவுஸ்திரேலியாவுடன் அயர்லாந்து தோற்றாலும், மேற்கிந்தியத் தீவுகளோடு போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றும் மழையின் குறுக்கீட்டால் நிகர ஓட்ட சராசரிப் பெறுமானத்தால் மேற்கிந்தியத் தீவுகளை அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைத்த துரதிர்ஷ்டசாலி ஆனது.


ஆப்கானிஸ்தான் அணியானது இந்தியாவுக்குக் கொஞ்ச நேரம் திண்டாட்டத்தைக் கொடுத்தாலும், இங்கிலாந்துடன் போராட்டம் ஏதும் இல்லாமல் சரணடைந்தது.

இறுதியாக நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) பங்களாதேஷ் அணி, பாகிஸ்தானுடன் பெரியளவு வெற்றி பெறவேண்டிய நிலையில், 175 என்ற சவாலான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றும், பாகிஸ்தானின் அதிரடியில் (குறிப்பாக இம்ரான் நசீரின் எழுச்சியில்) சுருண்டு வெளியேறியது. இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சுத் தான் பங்களாதேஷைப் பங்கம் பண்ணிவிட்டது.


தத்தம் பிரிவுகளில் இருந்து தலா இரண்டு அணிகளாகத் தெரிவு செய்யப்பட்ட எட்டு அணிகளும் ஏலவே இந்தப் பகுதிக் கட்டுரைகளில் நான் எழுதியிருந்ததைப் போல இரு பிரிவுகளாகப் பிரிந்து தலா மூன்று போட்டிகளில் விளையாடப் போகின்றன.

கடந்த T20 உலகக்கிண்ணத்தின் அல்லது உலக T20 யின் நிலைகளின்படியே அணிகளின் ஸ்தானங்கள் வழங்கப்பட்டதால், இம்முறை பிரிவு ரீதியிலான வெற்றிகள், தோல்விகள் தெரிவு செய்யப்பட்டுள்ள அணிகளைப் பாதிக்கவில்லை. எனினும் Super 8 சுற்றுப் போட்டிகள் மழை காரணமாகப் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு கட்டங்களிலும் இரு அணிகளை வித்தியாசப்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில், பிரிவு ரீதியிலான போட்டிகளின் முடிவுகளும் முக்கியமானதாக மாறலாம்.


ஆனால் Super 8 சுற்றுப் போட்டிகளில் ஒன்றிரண்டாவது நடந்தால் இதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே தான் 'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது' என்று குறிப்பிடுகிறேன்.

இந்த எட்டு அணிகளும் T20 வகையிலான போட்டிகளில் மட்டுமல்லாமல் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமே பலமான அணிகள் என்பது தெளிவு.

ஆனால், பிரிவு ரீதியிலான போட்டிகளில் தங்கள் இரு போட்டிகளிலுமே வென்ற அணிகள் ஒரு பிரிவிலும் (பிரிவு 2) மற்ற அணிகள் ஒரு பிரிவிலும் அடங்கி இருப்பது தற்செயலானதே.


பிரிவு 1 இல் - இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும், பிரிவு 2 இல் - இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் தமக்குள்ளே மோதிக் கொள்ளப்போகின்றன.

இவற்றுள் பாகிஸ்தான் அணியானது நான்காவது தடவையாகவும் அரையிறுதிக்குள் தொடர்ச்சியாக நுழைகின்ற ஒரே அணியாக இருக்கும். ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அடங்கி இருக்கும் பிரிவு - Group of Death எனும் அளவுக்கு மிகக் கடுமையான போட்டித் தன்மை மிகுந்ததாக இருக்கும் என்பது உறுதி.


அதிலும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் என்பது அந்தந்த நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்குமே பெரும் விறுவிறுப்பு விருந்து படைக்கும் ஒரு கிரிக்கெட் போர். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலே இடம்பெறும் இந்தப் போட்டி பற்றி இப்போதே ஏக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே பிரிவில் கொழும்பில் விளையாடப்படவுள்ள ஏனைய போட்டிகளும் கூட விறுவிறுப்பான போட்டிகள் தான்.

அதேபோல மற்றைய பிரிவின் அத்தனை போட்டிகளும் பள்ளேகலையில் இடம்பெறவிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் பெரிதாக எதிர்பார்க்கப்படும் போட்டி, இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும் போட்டி. இம்முறை உலகக் கிண்ணத்தின் Hot favorites என்று சொல்லப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணின் சூரர்களை சந்திக்கிறது. இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றியை அடுத்து பெரிதாக எதிர்பார்த்த ரசிகர்கள், மழை காரணமாக ஏழு ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்ட தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோற்றத்தை அடுத்துக் கொஞ்சம் நம்பிக்கையீனமாக இருக்கிறார்கள். அத்துடன் முதலாவது போட்டியில் உலக சாதனை நிகழ்த்திய அஜந்த மென்டிசின் காயம் பற்றிய அச்சமும் இந்தப் போட்டி பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

முதலாவது சுற்றில் இலங்கை அணியானது தென் ஆபிரிக்காவிடம் தோற்ற போட்டி தவிர, மழையினால் டக்வேர்த்- லூயிஸ் விதி பயன்படுத்தப்பட்ட இன்னொரு போட்டியும் அதே நாளில் நடந்தது. ஆனால் கொழும்பில்... அதுவும் எதிர்பார்த்ததை விட மாறுபட்ட முடிவைத் தந்த ஒரு போட்டியாக அமைந்தது.

Favorites மேற்கிந்தியத் தீவுகள் அணி சவால் விடுக்கக் கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றை முதலில் துடுப்பெடுத்தாடிப் பெற்றும் அவுஸ்திரேலியா மழை வர முதல் வேகமாகக் குவித்த ஓட்டங்களினால் டக்வேர்த்- லூயிஸ் விதி முறையில் வெற்றியீட்டியது.

ஆனால் இதே மழை மேற்கிந்தியத் தீவுகளை சூப்பர் 8 இற்கு அனுப்ப உதவியதையும் சொல்லவேண்டும். அயர்லாந்துக்கெதிரான போட்டியில் மழையின் குறுக்கீட்டால் எந்தவொரு பந்தையும் சந்திக்காமலேயே அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது மேற்கிந்தியத் தீவுகள்.

மழை காரணமாக முடிவொன்றில்லாமல் முடிந்த ஒரே முதல் சுற்றுப்போட்டி இது மட்டும் தான். 

பன்னிரண்டு முதல் சுற்றுப் போட்டிகளிலும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் நிகழ்ந்த சுவாரஷ்யங்களைப் பார்க்கலாம்...

ஒரு சதமும், ஒரு ஐந்து விக்கெட் பெறுதியும் இதுவரை பதிவாகியுள்ளன. இவை இரண்டுமே முன்னைய சாதனைகளை முறியடித்துள்ளன. இறுதியாக வெளியிடப்பட்ட T20 தரப்படுத்தலில் தென் ஆபிரிக்கா முதல் இடத்தையும் பெற்றுள்ளது.


முதலாவது போட்டியிலேயே அஜந்த மென்டிஸ் T20 சர்வதேசப் போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைத் தனதாக்கினார். அஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த பந்துவீச்சு சாதனையை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளார். கடந்த வருடம் பள்ளேகலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகத் தான் பெற்றுக்கொண்ட 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என்பதையே மென்டிஸ் சிம்பாப்வேக்கு எதிராகப் பெற்ற 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் முறியடித்தது. ICC உலக T20 போட்டிகளில் பெறப்பட்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை வைத்திருந்த உமர் குல்லையும் (6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்) மென்டிஸ் பின் தள்ளியுள்ளார். T20 போட்டிகளில் இரண்டு ஐந்து விக்கெட் பெறுதிகளை வீழ்த்தியவரும் இப்போதைக்கு அஜந்த மென்டிஸ் மட்டுமே. ஆனால் அதன் பின்னர் இப்போது உபாதை காரணமாக மென்டிஸ் அவதிப்படுகிறார்.

ஜீவன் மென்டிஸ் புதிய சகலதுறை வீரராகத் தொடர்ந்து மிளிர்ந்துவருகிறார். புதிய அறிமுகம் டில்ஷான் முனவீர பெரிதாக இன்னும் சாதிக்க ஆரம்பிக்கவில்லை. சுழல்பந்துவீச்சு அறிமுகம் அகில தனஞ்செய, மென்டிஸ் குணமடையாவிட்டால் நாளை நியூசிலாந்து அணிக்கெதிராகத் தனது அறிமுகத்தை மேற்கொள்ளலாம்.

அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ள ஷேன் வொட்சன் T20 தரப்படுத்தல்களில் மேலேறி வருகிறார். துடுப்பாட்டத்தில் மூன்றாம் இடம், பந்துவீச்சில் ஏழாம் இடம் (சுழல்பந்து ஆதிக்கம் மிகுந்த T20 பந்துவீச்சுத் தரப்படுத்தல்களில் முதலாவது வேக/மிதவேகப் பந்துவீச்சாளர் வொட்சன் தான்), சகலதுறை வீரர் பட்டியலில் முதலாம் இடம். மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளராக மாறிவருகிறார்.


இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கொஹ்லி எப்போதும் போலத் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஓட்டக் குவிப்பில் தடுமாறிவந்த ரோஹித் ஷர்மாவும் இங்கிலாந்துடனான போட்டியுடன் நம்பிக்கை தருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மீள்வருகைகளில் ஒரு சிங்கை இன்னொரு சிங் முந்திக்கொண்டார். யுவராஜ் சிங் அணியில் முதலில் இடம்பிடித்தாலும், இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தவர்கள் என்று கருதப்பட்ட சேவாக், சாகிர் கான், அஷ்வின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஓய்வின் காரணமாக அணிக்குள் ஆச்சரியமாக வந்த ஹர்பஜன் சிங் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி மாபெரும் அதிர்வலைகளைப் பரவவிட்டார். அவரது மிகச் சிறந்த T20 பந்துவீச்சுப் பெறுதியும் இதுவே.

இந்த 'மாற்று' அணி காட்டிய சிறப்பான பெறுபேறுகள் இந்தியத் தேர்வாளருக்கும், தலைவர் தோனிக்கும் அழுத்தத்தைக் கொடுக்கலாம், அணியில் மாற்றங்கள் செய்வதற்கு. ஆனால் அதுவும் ஆரோக்கியமானதே.

தென் ஆபிரிக்கா இரு வெற்றிகளையும் கஷ்டப்படாமல் பெற்றுக்கொண்டது என்று சொல்லலாம். தங்கள் சுழல் பந்துவீச்சைப் பெரிதாகப் பயன்படுத்தாமலேயே பதிவு செய்த வெற்றிகள் அவர்களின் பந்துவீச்சுப் பலத்தைப் பறைசாற்றினாலும், இனி வரும் போட்டிகள் அவர்களது சுழல் பந்துவீச்சையும் நாட வைக்கும். ஜாக்ஸ் கலிஸின் பந்துவீச்சு இரு போட்டிகளிலும் ஜொலித்தது. லீவி ஓர் அரைச் சதம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தின் பிரெண்டன் மக்கலம் தமது முதல் போட்டியிலேயே சதம் அடித்ததோடு, தனி நபர் ஒருவர் குவித்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் தன் வசப்படுத்தினார். அத்துடன் T20 போட்டிகளில் இரண்டு சதங்களைப்பெற்ற ஒரே வீரர் ஆகியும் உள்ளார். டிம் சவுதி இரு போட்டிகளிலும் சேர்த்து ஐந்து விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வழமையாகத் தங்கியுள்ள சயீத் அஜ்மல் இதுவரையும் கூட ஏமாற்றவில்லை. இதுவரை நான்கு விக்கெட்டுக்கள். அவருடன் சர்வதேச அனுபவமிக்க யசீர் அரபாத்தும் விக்கெட்டுக்களை எடுக்கிறார். மேலதிகமாக வழமையாக ஓட்டங்களுக்கு நம்பியிருக்க வேண்டிய அக்மல் சகோதரர்களை நம்பியிருக்க வேண்டியில்லாமல், முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களான தலைவர் ஹபீஸ், இம்ரான் நசீர் மற்றும் நசீர் ஜம்ஷெட் ஆகிய மூவருமே ஓட்டங்களைத் தொடர்ச்சியாகக் குவித்துவருவது பாகிஸ்தானுக்குப் பெரியதொரு சாதகத் தன்மை. அதிலும் அண்மையில் நடந்து முடிந்த BPL மூலமாக தம்மை சிறப்பாக வெளிப்படுத்தி அணிக்குள் மீண்டும் வந்துள்ள இம்ரான் நசீரும், ஜம்ஷெட்டும் ஆரம்பம் முதலே திறமையானவர்கள், ஆனாலும் தம் திறமையைத் தாமே உணராதவர்களாக இருக்கிறார்கள் என்று பலராலும் அங்கலாய்க்கப்பட்டவர்கள். இப்போது இவர்களது எழுச்சி ரசிக்கப்படுவதாக இருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் என்ற புயல் வீசிக்கொண்டே இருக்கும் வரை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகளை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கும். கெயில் - அவுஸ்திரேலியா அணிக்கெதிராக அடித்த அதிரடி ஏனைய அணிகளுக்கு சிம்மசொப்பனமாகவே இருக்கும். சாமுவேல்சும் வேறு சிறப்பாக ஆடி இருந்தார். பந்துவீச்சு இன்னும் கொஞ்சம் திடமாக அமைந்தால் சவால் விடும்.

நடப்பு வெற்றியாளர்களான இங்கிலாந்து - கெவின் பீற்றர்சன் இல்லாமல் என்ன செய்யும் என்ற கேள்விக்கு ஆப்கானிஸ்தானோடு அதிரடியாட்டம் நிகழ்த்தியிருந்தார் லூக் ரைட். சதம் பெற ஒரு ஓட்டம் குறைவாக அவர் ஆட்டமிழக்காமல் இருந்த அந்த இன்னிங்க்ஸ் அற்புதம். ஆனால் இங்கிலாந்து தனது முதலாவது T20 சதத்தைத் தவறவிட்டுவிட்டது. இந்தியாவோடு பரிதாபமாக சுருண்ட நேரம் கீஸ்வேட்டர் கொஞ்சம் நின்று ஆடியிருந்தார். ஆனால் நம்பிக்கை தருவதாக இல்லை. பந்துவீச்சிலும் இன்னும் திடம் வேண்டும்.

ஒரு தடவை உலக T20 கிண்ணம் வென்ற அணி தொடர்ச்சியாகத் தக்கவைத்ததில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படப்போகிறது போல.

வெளியேறிய அணிகளில் ஷகிப் அல் ஹசன் நேற்று இரவு பாகிஸ்தானுக்கெதிராக பங்களாதேஷின் T20 தனிநபர் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தார். ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியைத் தடுமாற வைத்துத் தனது கிரிக்கெட் எதிர்காலத்தின் நம்பிக்கையை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டியது. அவர்களது அதிரடித் துடுப்பாட்டமும், அதிவேகப் பந்துவீசும் ரசிக்கக் கூடியன. அயர்லாந்து அணியும் வாய்ப்புக் கிடைத்தால் கலக்கக் கூடிய அணி தான். நம்பியிருந்த சிம்பாப்வே தான் மிகப்பெரிய ஏமாற்றம் தந்த அணி.

எஞ்சியுள்ள எட்டில் எந்த நான்கு அரையிறுதி என்ற சடுதிச் சாவு (sudden death ஐக் கொஞ்சம் கொலைவெறியுடன் சொல்லிப் பார்த்தேன்) சுற்றுக்கு செல்ல இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

நாளை முதல் ஆரம்பிக்கும் சூப்பர் 8 போட்டிகள் பன்னிரெண்டும் தரவிருக்கும் விறுவிறுப்பை உங்களோடு சேர்ந்து காணும் ஆர்வத்தோடு, மழை வந்து திருவிளையாடல் புரிந்துவிடக் கூடாதே என்ற கவலையோடும் இப்போதைக்கு விடை பெறுகிறேன்.


முன்னைய முன்னோட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கவனிக்கவேண்டிய வீரர்கள், அணிகளின் பலம், பலவீனங்களை நடந்து முடிந்த போட்டிகளோடு ஒப்பிட்டும், நடக்க இருக்கும் போட்டிகளோடு அவதானித்தும் பார்த்து ரசியுங்கள்.

முதல் சுற்றின் முடிவில்....

கூடுதலான ஓட்டங்களைக் குவித்துள்ளவர்கள்
பிரெண்டன் மக்கலம் - நியூசிலாந்து 155
லுக் ரைட் - இங்கிலாந்து - 105
இம்ரான் நசீர் - 97
ஷகிப் அல் ஹசன் - 95
ஷேன் வொட்சன் - 92

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளவர்கள்
அஜந்த மென்டிஸ் - இலங்கை - 6 விக்கெட்டுக்கள்
டிம் சவூதி - நியூசிலாந்து - 5 விக்கெட்டுக்கள்
ஜாக்ஸ் கல்லிஸ் - தென் ஆபிரிக்கா - 5 விக்கெட்டுக்கள்
மிட்செல் ஸ்டார்க் - அவுஸ்திரேலியா - 5 விக்கெட்டுக்கள்
ஷேன் வொட்சன் - அவுஸ்திரேலியா - 5 விக்கெட்டுக்கள்

இதேவேளை இன்று முதல் மகளிர் உலக T20 கிண்ணப் போட்டிகளும் ஆரம்பித்துள்ளன. 8 அணிகள் விளையாடும் இந்தத் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் காலி சர்வதேச மைதானத்திலேயே இடம்பெறுகின்றன...

அரை இறுதி ஆட்டங்கள், ஆண்கள் போட்டிகளுடன் சேர்ந்த அதே தினங்களில் கொழும்பில் இடம்பெறும். விபரங்கள் முன்னைய கட்டுரைகளில் விபரமாக...
"'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty