இடைத் தேர்தலை புறக்கணிக்கிறாரா தி.மு.க. தலைவர் கருணாநிதி?
30-04-2012 03:48 PM
Comments - 0       Views - 932
தமிழகத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று மீண்டும் ஓர் இடைத் தேர்தல் மோதல் உருவாகப் போகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிரணியில் இருக்கும் தி.மு.க.வும் களத்தில் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எளிமை மிக்கவராக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இறந்ததையொட்டி புதுக்கோட்டை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட அதிக எண்ணிக்கையில், அதாவது 52 சிறப்பு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக்காமல் தானே களமிறங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்த அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், "அ.தி.மு.க. தலைமையிடம் அப்பொயின்மென்ட் கேட்டு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் வரவில்லை. ஆகவே இடைத் தேர்தல் சூழ்நிலைகளை மனதில் வைத்து அங்கு போட்டியிடுவதில்லை" என்று அறிவித்தார் தா.பாண்டியன். அதே நேரத்தில் அ.தி.மு.க. தன் கட்சி வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அறிவித்து இருக்கிறது. இவர் ஏற்கனவே இங்கு மூன்று முறை போட்டியிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற விஜயரகுநாத தொண்டைமானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையை அனைவரும் "தொண்டைமான்" தொகுதி என்றே கூறுவார்கள். அந்த அளவிற்கு ராஜா வம்சத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது.

தொன்று தொட்டு காங்கிரஸ் தொகுதியாக இருந்த புதுக்கோட்டையை முதன் முதலில் 1989 சட்டமன்ற தேர்தலில்தான் தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிளவுபட்டு நின்ற நேரம். காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்ட சமயம். அதைப் பயன்படுத்தி இங்கே தி.மு.க.வின் வேட்பாளராக போட்டியிட்ட பெரியண்ணன் வெற்றி பெற்றார். தி.மு.க.விற்கு இங்கு கிடைத்த முதல் வெற்றி இது. அந்த வகையில் 1967இற்குப் பிறகு நடைபெற்ற 12 தேர்தலில் மூன்றில் மட்டுமே தி.மு.க. இங்கு வெற்றி பெற்றது. அந்த மூன்று கட்டங்கள் 1989 தேர்தல், 1996 தேர்தல், மூன்றாவதாக பெரியண்ணன் இறந்த போது நடைபெற்ற இடைத் தேர்தல். அதேபோல் அ.தி.மு.க. இந்த தொகுதியில் 2001இல் தான் வெற்றி பெற்றது. அப்படி முதலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் இப்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் விஜயபாஸ்கர். அதைத் தொடர்ந்து 2006 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. இங்கே வெற்றி பெற்றது. இதுவரை இங்கே இருமுறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது அ.தி.மு.க. பொதுவாக காங்கிரஸுக்கு பலமான தொகுதி புதுக்கோட்டை என்பதால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதியை கூட்டணியில் விட்டுக்கொடுத்து வந்தன. இத்தொகுதிக்கு ஒரு மோசமான சென்டிமென்ட் உண்டு. தொகுதியில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்.எல்.ஏ. அந்த சட்டமன்ற காலம்வரை பதவியில் இருக்க மாட்டார். தி.மு.க.வில் பிரபலமாக இருந்த பெரியண்ணன் எம்.எல்.ஏ.வும் இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிரபலமாக இருந்த முத்துக்குமரன் எம்.எல்.ஏ.வும் இறந்து இடைத் தேர்தல் வந்தது இந்த சென்டிமென்டை மேலும் பலப்படுத்துகிறது. இங்கு மிக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. காங்கிரஸ் வேட்பாளராக 1980இல் போட்டியிட்ட விஜயரகுநாத தொண்டைமான். அவர் 1273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் வேட்ராளரே. 1991இல் ராஜீவ் கொலை நடைபெற்ற போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை 43319 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளரான சுவாமிநாதன். இப்படி காங்கிரஸ் தொகுதியாக இருந்த புதுக்கோட்டை காலப்போக்கில், தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் உரிய தொகுதியாக மாறி விட்டது.

நடக்கப் போகின்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்காக உழைக்க 52 சிறப்பு தேர்தல் பொறுப்பாளர்கள் ஏற்கனவே களமிறங்கி விட்டார்கள். கடந்த சனிக்கிழமை புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் ஆலயத்தில் பூஜை செய்து விட்டு தன் பிரசாரத்தை தொடக்கி விட்டார் அக்கட்சியின் வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான். அ.தி.மு.க.விற்கு இங்கு சொந்த பலம் அதிகம் உண்டு. அக்கட்சியால்தான் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பலமே தவிர, கூட்டணிக் கட்சிகளால் அ.தி.மு.க.விற்கு பலமில்லை. அதனால் இந்தமுறை அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இல்லாதது பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடப் போவதில்லை. ஏனென்றால் இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 10,000 வாக்குகள் பெற்றாலே பெரிய விஷயம். அதனடிப்படையில் பார்த்தால் சென்ற தேர்தலில் முத்துக்குமரன் வாங்கிய 65466 வாக்குகளில் ஏறக்குறைய 55000 வாக்குகள் அ.தி.மு.க.விற்கு சொந்தமானது. இது 1989இல் அ.தி.மு.க. பிளவு பட்டு நின்று இரு அணியின் வேட்பாளர்களும் (ஜா அணி, ஜெ அணி) பெற்ற 52000 வாக்குகளுக்கு அருகில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலத்துடன் "ஆளுங்கட்சி" என்ற இடைத் தேர்தல் பலம், அ.தி.மு.க.விற்கு இங்கே அதிகம் இருப்பதால், வெற்றி வாய்ப்பிற்கு கூட்டணி கட்சிகளின் தயவை நாடியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமின்றி வேட்பாளராக இருக்கும் கார்த்திக் தொண்டைமான் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த விஜயரகுநாத தொண்டைமானின் மகன். ஆகவே இங்குள்ள காங்கிரஸ் வாக்காளர்கள் சுமார் 25000 பேரில், குறைந்தது 15000 வாக்காளர்களாவது கார்த்திக் தொண்டைமானுக்கு வாக்களிக்கும் சூழ்நிலை இருக்கிறது. இது தவிர, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க. வேட்பாளர் தனது பிரசாரத்தை தொடங்கிய அன்று மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரனின் படத் திறப்பு விழாவை வைத்துள்ளார்கள். அன்றைய தினம் தா.பாண்டியன் மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களுடன் அந்த மேடையில் அமர்ந்திருந்தார். ஆகவே இந்திய கம்யூனிஸ்ட் வாக்காளர்களும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கும் சூழ்நிலை அமைந்துள்ளது. ஆகவே மொத்தத்தில் புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. முதன்மை பெற்று நிற்கிறது.

அ.தி.மு.க.வை எதிர்த்து இங்கே யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. அக்கட்சிக்கு ஆயிரம் வாக்குகள் கூட இங்கு இல்லை என்பது வேறு விஷயம். ம.தி.மு.க. விற்கு சுமார் 14000 வாக்குகள் இங்கு உண்டு. கடந்த 1996 மற்றும் 2001 தேர்தல்களில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் கூட குறைந்தது 10000 வாக்குகளாவது அக்கட்சிக்கு இங்கே இருக்கிறது. ஆனால் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய வைகோ, புதுக்கோட்டை மாவட்ட செயலாளரை விட்டே "புதுக்கோட்டையில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டாம். அதற்கு பதில் கட்சி மாநாடுகள் நடத்த அந்த பணத்தை செலவழிக்கலாம்" என்று பேச வைத்திருக்கிறார். ஆகவே அக்கட்சியும் இங்கு போட்டியிடும் மூடில் இல்லை. காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் "வேண்டா வெறுப்பாக" இருக்கிறது. அக்கட்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர். தொண்டைமான் பாரம்பரியம் உள்ள சாருபாலா தொண்டைமான் போன்ற வேட்பாளர்கள் இருந்தும், இடைத் தேர்தலில் எதிர்கால கூட்டணி கட்சியாக வரும் வாய்ப்புள்ள அ.தி.மு.க.வுடன் மோத வேண்டுமா என்ற தயக்கத்தில் இருக்கிறது. தே.மு.தி.க.வைப் பொறுத்த மட்டில் இங்கு 6000 வாக்குகள் இருக்கிறது. அதற்காக இங்கே போட்டியிட்டு கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம் என்ற அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எண்ணுவதாக தெரிகிறது.

எஞ்சியிருப்பது தி.மு.க. மட்டுமே. இந்த கட்சி கடந்த 2006இல் 1950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அ.தி.மு.க.வுடன் இழந்தார் அக்கட்சியின் முஸ்லிம் முகமாக இருந்த ஜாபர் அலி. அடுத்து 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் அரசு 3101 வாக்குகள் குறைவாக பெற்று முத்துக்குமரனிடம் தோற்றார். அப்போது தி.மு.க. வாங்கிய வாக்குகள் 62365. இதில் காங்கிரஸ் வாக்குகள் 15000 போனால் கூட 47000 வாக்குகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்த வாக்குகளை அப்படியே வருகின்ற இடைத் தேர்தலில் வாங்க முடியுமா என்ற சந்தேகம் தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. ஏனென்றால் இங்கு அக்கட்சிக்கு உள்ள வாக்குகள் என்பது தி.மு.க. மோசமாக தோல்வியடைந்த போதே (1991 தேர்தல்) 38000 வாக்குகள்தான். அதிலும் ம.தி.மு.க. கனிசமான வாக்குகளை பிரித்து விட்டது. ஆகவே 30000 வாக்குகளுக்குள் வாங்கி, அ.தி.மு.க. ஏற்கனவே வாங்கியுள்ள 65000 வாக்குகளை விட அதிகமாக வாங்கினால் சங்கரன்கோவில் போல் டெபாஸிட் போகும் சூழ்நிலை தி.மு.க.விற்கு மீண்டும் வரலாம். ஆகவேதான் தேர்தல் கமிஷன் ஒழுங்காக தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கையில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருக்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு மே 17ஆம் திகதி அதுபற்றி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் மே 18 என்பது குறிப்பிடத்தக்கது. இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமா என்று தி.மு.க. தலைவர்களுக்குள் பட்டிமன்றம் நடைபெறுகிறது. "புதுக்கோட்டையில் போட்டியிட வேண்டாம்" என்பதே அக்கட்சி தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. இதை ஆமோதிக்கும் வகையிலேயே தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கருத்துச் சொல்லி வருகிறார் என்றே தெரிகிறது.

தமிழ் ஈழம் வேண்டும் என்றும், அதற்காக 1985 வாக்கில் அமைக்கப்பட்ட டெசோ அமைப்பே மீண்டும் உயிரூட்டி கூட்டம் போட்டிருப்பதன் மூலமும் காங்கிரஸை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவர் காங்கிரஸை விலக்கி வைத்து விட்டு தே.மு.தி.க.வை சேர்த்துக் கொள்வதற்கான வியூகங்களில் இறங்கியுள்ளார். அதை வலுப்படுத்தும் வகையில் தே.மு.தி.க. சார்பிலோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலோ பொது வேட்பாளர் என்று யாரையாவது நிறுத்தினால், அவர்களை தி.மு.க. ஆதரிக்கும் மனப்பான்மையிலேயே அக்கட்சி தலைமை இருக்கிறது. அடுத்து அமையும் புதிய கூட்டணிக்கு புதுக்கோட்டை இடைத் தேர்தல் அச்சாரமாக அமைய வேண்டும் என்று தி.மு.க. தலைமை விரும்புகிறது. ஆனால் அதை இவ்வளவு சீக்கிரம் தே.மு.தி.க.வோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ ஏற்றுக்கொண்டு பொது வேட்பாளரை நிறுத்த முன் வருமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் புதிய அணி அமைந்தால் அதில் தங்களின் சீட் பேரம் எந்த விதத்திலும் குறைந்து விடக் கூடாது என்பதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கையுடனேயே இருப்பார். தி.மு.க.வின் விருப்பத்திற்கு ஏற்பட பொது வேட்பாளர் அமையாவிட்டால், தி.மு.க.வே களமிறங்கி போட்டியிடும் வாய்ப்பு ரொம்பக் குறைவு என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு. ஆகவே, இப்போதைக்கு புதுக்கோட்டை இடைத் தேர்தல் புது கூட்டணி அமைக்க உதவுமா என்பதை நோக்கியே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் யோசித்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
"இடைத் தேர்தலை புறக்கணிக்கிறாரா தி.மு.க. தலைவர் கருணாநிதி?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty