நல்லிணக்கத்திற்கு சவாலாகிவிட்ட யாழ் புலிக் கொடியும் சிங்கக் கொடியும்
06-05-2012 08:49 PM
Comments - 0       Views - 989
                                                                                           

அரசியலில் இரண்டு பகை சக்திகளை பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு கொடிகள்       கடந்த வாரம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை  கிளப்பியிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் என்னவெனில் இரண்டு கொடிகளும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி மே தின நிகழ்ச்சிகளின் போதே சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன.

ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் சென்றவர்களில் சிலர் புலிக் கொடியை ஏந்திச் சென்றார்கள் என்று அரச ஊடகங்கள் கூறியதில் ஒரு சர்ச்சை உருவாகியது.

அதே மே தினக் கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தேசிய கொடியைஉயர்த்தியதால் மற்றைய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

கூட்டு மே தின ஊர்வலத்தின் போது புலிக் கொடியை ஏந்திக் கொண்டு சிலர் சென்றதாக அரச தொலைக்காட்சியொன்று உரிய காட்சிகளுடன் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டு மேதின நிகழ்வுகள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டதாக எடுத்துக் காட்டுவதே அதன் நோக்கமாகும் என்பது   தெளிவாகிறது.

ஆனால், இதனை அந்த மே தின நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிய ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளும் மறுத்துள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள்  தமது ஊர்வலத்தின்போது  புலிக் கொடியை எடுத்துச் செல்ல தமது உறுப்பினர்களுக்கு இடமளித்திருந்தால் அந்த உறுப்பினர்கள் அவற்றை பகிரங்கமாக எடுத்துச் செல்வார்கள் என்பதையும் அறிந்திருப்பார்கள்;. அதனை ஊடகங்கள் பகிரங்கப்படுத்தும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அப்படியிருக்க, அவர்கள்  அதற்கு இடமளித்து இருந்தால் பின்னர்  அதனை மறுப்பதில் அர்த்தம் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

எனவே, இந்த சம்பவத்திற்கும் அக்கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது. மறுபுறத்தில், அரச ஊடகங்கள் மட்டும் இந்தப் புலிக் கொடி சம்பவத்தை   கண்டு கொண்டமையும் சந்தேகத்திற்குறிய விடயமே. புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று சந்தேகிப்பவர்களை கூட அரச படைகள் விட்டு வைப்பதில்லை. ஆனால், இங்கே புலிக் கொடியை ஏந்திச் சென்றவர்களைப்; பற்றி பொலிஸார் விசாரணை செய்வதாக தெரியவில்லை.

உண்மையிலேயே புலிகள் இயக்க உறுப்பினரகள்  இந்த ஊர்வலத்திற்குள் புகுந்து இருந்தால் அதனை கூடிய வரை பிரசாரம் செய்து அதன் மூலம் மக்கள் ஆதரவை பெருக்கிக் கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள். ஆனால் புலிகளுக்கு ஆதரவு  வழங்கும் எந்தவொரு ஊடகமும் இந்தச் சம்பவத்தை புலிகளின் சாதனையாக எடுத்துக் காட்டவில்லை.  விந்தை என்னவென்றால் புலிக் கொடியை அரச ஊடகங்கள் விளம்பரப்படுத்துவதே.

இது தமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த அரசாங்கம் மேடையேறடற்றிய நாடகம் என ஐ.தே.க. தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். நோக்கம் எதுவாக இருப்பினும் அவ்வாறானதோர் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்றால் அதற்கு தேவையான நடிகர்கள் அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டின் கீழ்  யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவான விடயமாகும்.

இந்த நாடகத்தின் நோக்கம் தெளிவானதாகும். முப்பது ஆண்டு கால போரின் பின்னர் தமிழர்கள் தலைமை தாங்கும்  பிரதான கட்சியொன்றும்  சிங்களவர்கள் தலைமை தாங்கும்  பிரதான கட்சியொன்றும் குறிப்பிட்டதோர் அரசியல் நடவடிக்கை நிமித்தமாவது இணைந்து செயற்படுவது பாராட்டுக்குரிய விடயமே. அது நல்லிணக்கத்திற்கு கடுகளவிலேனும் உதவியாக இருக்குமே தவிர, தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால் அரசாங்கம் இந்த நல்ல நோக்கத்தை கண்டு கொள்ளவில்லை.

மே தினத்திற்கு முன்னரே ஐ.தே.க. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மே தினத்தை நடத்துவதைப் பற்றி அமைச்சர்கள் பலவாராக குறை கூறிக் கெண்டு இருந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை சஜித் பிரேமதாச நினைவுகூரும்போது, ஜனாதிபதி பிரேமதாசவை கொலை செய்த பாபுவை நினைவுகூற யாழ்ப்பாணத்திற்கு ரணில் விக்கிரமசிங்க போவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியிருந்தார். தமிழர்கள் எல்லோரும் எதிரிகளாக சித்தரிப்பது இனவாதம் என்பது ஒரு காலத்தில் முற்போக்குவாதியாக தோற்றமளித்த அமைச்சர் டலஸ் அலகப்பெருமவுக்கு விளங்காமை விந்தையாகவிருக்கிறது.

தமது அரசாங்கம் புலிகளிடம் இருந்து வட பகுதியை மீட்டதன் காரணமாக பிற கட்சிகளுக்கு வட பகுதியில் அரசியலில் ஈடுபட உரிமை இல்லை என்றே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நினைக்கிறது. இது புலிகளின் மன நிலைமையே தவிர வேறொன்றுமல்ல. தாம் ஆயுதம் ஏந்தி  போராடுவதால் தமக்கு மட்டுமே வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என்றே புலிகளும் நினைத்து செயற்பட்டனர். எல்லோருக்கும் அரசியலில் ஈடுபடக்கூடிய நிலைமையை உருவாக்கவே தாம் செயற்பட்டதாக  அரசாங்கமும் புலிகளும் நினைக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவே  இரண்டாவது  கொடி சர்ச்சையை தூண்டியுள்ளார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது தேசிய கொடியை உயர்த்திக் காட்டிக் கொண்டு இருந்தமையையிட்டு கட்சியின் சார்பில் தாம் தமிழ் மக்கமளிடம் மன்னிப்புக் கேட்பதாக அவர் யாழ்ப்பாணத்தில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டமொன்றின் போது கூறியிருந்தார்.

அவரது கூற்று அரசியலமைப்புக்கு முரணானது என சிங்கள அரசியலவாதிகள் கூறலாம். ஆனால் அதை விட முக்கியமான விடயம் இந்தக்கூற்று இப்போது ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சையே. சம்பந்தன் தாமாக தேசிய கொடியை ஏந்தவில்லையென்றும் அது அவரது கையில் திணிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சம்பந்தன் தேசிய கொடியை விரும்பாவிட்டால் அதனை விக்கிரமசிங்கவோ மற்றொருவரோ கையில் திணித்த மட்டில் தூக்கிப் பிடிக்கும் அளவிக்கு கோழையா என்ற கேள்வி இங்கே எழுகிறது. அதுவும் அவ்வாறானதோர் நிலைமை யாழ்ப்பாணத்தில் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே இது இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் சர்ச்சையை கிளப்பிவுpடும் என்றே தோன்றுகிறது.   

தமிழ் பிரிவினைவாத போராட்டம் தோன்றியது முதல் தற்போதைய தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சிறுபான்மை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளது. ஆனால் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவ்விரண்டையும் ஏற்றுக் கொண்டே தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் சென்றுள்ளனர்.   புலிகளின் ஆதரவில் அந்தச் சபைகளுக்குச் சென்றவர்களும் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

அது தந்திரோபாய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது என சிலர் வாதிடலாம்.   எனினும் போர் முடிவடைந்ததன் பின்னர் தேசிய கீத்ததை ஏற்றுக் கொள்வதைப் பற்றிப் பிரச்சினை எதுவும் எழவில்லை. அதனை தமிழில் பாடுவதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் அரசியல்வாதிகளின் வாதமாகவிருந்தது. அது தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமமானதாகும்.

போர் முடிந்து கடந்த மூன்றாண்டுகளில் தேசிய கொடியைப் பற்றிய சர்ச்சை எழுந்த முதலாவது முறை இதுவாகும்.  சித்தாந்த ரீதியில் பார்க்கும் போது சிறுபான்மை மக்கள் தேசிய கொடியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சங்கேதங்களைப் பற்றிய இது போன்ற சர்ச்சைகள் கூடுதல் அதிகாரங்களுக்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளுக்காகவும் நடத்தப்பட்டு வரும் போராட்டத்ததை திசை திருப்பக் கூடிய அபாயமும் இருக்கிறது.

சந்தேகங்களைப் பற்றிய சர்ச்சைகளால் உனர்வுகள் தூண்டுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் ஏற்படலாம். எனவே அவற்றினால் நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம்.  
"நல்லிணக்கத்திற்கு சவாலாகிவிட்ட யாழ் புலிக் கொடியும் சிங்கக் கொடியும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty