ஒரே குரலில் தமிழர் நிலைப்பாடு முன்வைக்கப்படாததையே அரசாங்கங்கள் விரும்புகின்றன
13-05-2012 11:52 PM
Comments - 0       Views - 870

 
தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று அடிக்கடி கோருவதை அண்மையில் இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் விமர்சித்துள்ளர். தமது அண்மைய இலங்கை விஜயத்தின் போது தாம் சந்தித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பிரிவினையை கோரவில்லையென்றும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு பேற வேண்டும் என்பதே அவர்களது அவாவாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
ஸ்வராஜ், கடந்த மாதம் இலங்கைக்கு வந்த போதும் இந்த விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக அவர் பிரதான தமிழ் கட்சிக் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இவ்விடயத்தில் பாராட்டி இருந்தார். சமபந்தன் நேர்மையானவர் என்றும் அவர் பிரிவினையை கோரவில்லை என்றும் இலங்கையர் என்பதற்காக தாம் பெருமைப் படுவதாக அவர் கூறியதாகவும் ஸ்வராஜ் கூறியிருந்தார்.
 
சம்பந்தனின் இந்த நிலைப்பாட்டை வைத்து அவரை பாராட்டியதன் மூலம் இலங்கையில் பிரவினையை ஏற்கவில்லை என்ற தமது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. இதற்கு முன்னரும் பல முறை இந்தியா இந்த நிலைப்பாட்டை நேரடியாகவும் சூசகமாகவும் கூறியிருந்த போதிலும் இலங்கை தமிழ் தலைவர்கள், குறிப்பாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அதன் பாரதூரத்தை விளங்கிக் கொள்ளவில்லை. அதாவது அவர்கள் பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை. அதன் பின் விளைவுகளையும் அனுபவித்தார்கள்.
 
தாம் தொடர்ந்தும் நாட்டுப் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்பதை; ஸ்வராஜ்ஜின் விஜயத்திற்குப் பின்னரும் சம்பந்தன  எடுத்துக் காட்டீனார். கடந்த மே தினத்தன்று எதிர்க் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது தேசிய கொடியை தூக்கி அசைத்து தென் பகுதியிலும் அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி சிங்களவர்கள் மத்தியிலும் சர்ச்சசையை கிளப்பியுள்ளது. பெரும்பாலான சிங்களவர்கள் இது துணிச்சலான கெயல் என்றும் நல்லிணக்கத்திற்குச் சாதகமான செயல் என்றும் பராட்டியுள்ளனர். நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய அமைச்சர்களும் இது மகிழ்ச்சிகரமான செயல் எனக் கூறியுள்ளனர். சம்பந்தன் அதனை மனப்பூர்வமாக செய்யவில்லை என்று சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார்..
 
எவர் இதனை பாராட்டினாலும் அதனை நம்பலாம். ஆனால் அமைச்சர்களின் பாராட்டை நம்புவது கடினமாக இருக்கிறது. ஏனெனில் இதே மே தின ஊர்வலத்தின் போது புலிக் கொடியை காட்டியவர்கள் அரசாங்கத்தைச் சார்நதவர்கள் என்றே நம்பப்படுகிறது. தமிழ் மற்றும் சிங்கள அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படும் போது அதற்கு புலிச் சாயம் பூச முற்படுபவர்கள் அவ்விணைப்பின் நல்ல பெறுபேறுகளை மனப்பூர்வமாக பாராட்டுவார்களா என்பது சந்தேகமே.
 
சம்பந்தன், சிங்கக் கொடியை ஏந்தியதை அவரது கூட்டமைப்பை சேர்ந்த சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆரம்பத்தில் செய்தி வெளியாகியது. சம்பந்தன் தேசிய கொடியை உயர்த்தியதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,  தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
 
அவர் மன்னிப்புக் கேட்;ட செய்தி நிச்சயமாக அரசாங்கத்தை கவர்ந்திருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கருத்தொற்றுமை இல்லை உன்பதை இந்தச் செய்தி எடுத்துக் காட்டுவதனாலும் சம்பந்தன் தேசிய கொடியை உயர்த்தியதனால் ஐ.தே.க. அரசியல் லாபம் அடையலாம் என்பதனாலுமே அரசாங்கம் மாவை சேனாதிராஜாவின் கூற்றை விரும்பும்.
 
இதற்கு முன்னரும் முக்கியமானதோர் சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது உட்கட்சி கருத்து முரண்பாட்டை உலகுக்கு காட்டிக் கொண்டது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா இலங்கை தெடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டு வந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜெனீவா சென்று பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தது. பின்னர் நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு சம்பந்தன் உட்பட சில தலைவர்கள் இந்த முடிவை கைவிட்டனர். இதனை அக்கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன் பகிரங்கமாக விமர்சித்தார். இதுவும் அரசாங்கத்தை கவர்ந்திருக்கும்.
 
இது போன்ற கருத்து முரண்பாடுகள் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சகல சமூகங்களுக்குள்ளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் இன்று பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பிரிந்துவிட்டார்கள். இவை எதுவுமே அரசியல் சித்தாந்த ரீதியிலான பிளவுகளல்ல. சிலர் கபினட் அமைச்சர் பதவிகளுக்காகவும், சிலர் தேசிய பட்டியல் எம்.பி. பதவிகளுக்காகவும், சிலர் வெறுமனே தாமும் தலைவரொருவர் ஆக வேண்டும் என்பதற்காகவும் கட்சிகளை அமைத்து சமூகத்தை பிரித்து விட்டார்கள்.
 
இந்தப் பிளவு முஸ்லிம்களை பொறுத் மட்டில் எவ்வளவு தீங்கானது என்பது அண்மையில் இடம் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்தின்போது தெளிவாக தெரிந்தது.
 
பிளவுகள் எல்லா சமூகங்களுக்குள்ளும் இருந்த போதிலும் தமிழர்கள் மத்தியிலான பிளவுகள் தேசிய நல்லிணக்கத்தையே பாதிக்கின்றது எனலாம். ஏனெனில் முப்பதாண்டு கால போருக்கு தமிழ் - சிங்கள பிணக்கே காரணமாகியது. இப்போது தமிழர்கள் இனப் பிரச்சினைக்கு தீர்வு கேட்கும் போது ஆட்சியாளர்கள் அதனை தட்டிக் கழிக்க வழிகளை தேடுகிறார்கள். தமிழர்களிடையிலான பிளவுகளை அவர்கள இதற்காக பாவிக்கலாம்.
 
தமிழர் ஐக்கியம் இந்த விடயத்தில் முக்கியமானதாக இருந்த போதிலும் அவர்களது அரசியல் நிலைப்பாடு நியாயமாக இருந்தால் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும். தனி நாட்டுக் கோரிக்கையோ முஸ்லிம்களை புறக்கணிக்கும் தீர்வோ ஒருபோதும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்காது. தனி நாட்டுக் கோரிக்கை தலை தூக்கும் போது சிங்களவர்கள் மத்தியில் வாழும் முற்போக்கு கருத்துள்ளவர்களும் அசௌகரியத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
 
தமிழர் ஐக்கியம் என்று வரும் போது அது தமிழநாட்டு மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் கருத்துக்களையும் உள்ளடக்கும். தமிழ்நாடு உட்பட வெளிநாட்டுகளில் உள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கும் போது ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் உள்நாட்டு தமிழர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நியாயம் இல்லாவிட்டாலும் சகஜம். அது நல்லிணக்கத்திற்கு சாதகமான நிலைமை அல்ல. எனவே ஸ்வராஜ்ஜின் விமர்சனத்திலும் அர்த்தம் இல்லாமலில்லை.
"ஒரே குரலில் தமிழர் நிலைப்பாடு முன்வைக்கப்படாததையே அரசாங்கங்கள் விரும்புகின்றன" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty