செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014

என்னை புத்தனாக்கிய உன் நிராகரிப்பு


வலிகளாலான இரவொன்றின் இருட்டு பிம்பங்களில்
உனது முகம் காற்றில் ஆடுகிறது..
...
என்னை உன்னிலிருந்து மெல்ல மெல்ல அவிழ்க்கிறாய் நீ

முகமூடிகளாலான உனது ப்ரியங்கள் இன்று
விகாரமான புன்னகையை என் மீது எறிகிறது..

ஒரு குருடனின் பயணம் போல எனது வாழ்வின்
நகர்வுகளை நீ திசைமாற்றியது எதற்கென்றே எனக்குப்புரியவில்லை..

இந்தப்பின்னிரவு ஒரு மரங்கொத்தியாக மாறி
என் உணர்வுகளை கண்டபடி கொத்துகிறது..

மீள முடியாத ஒரு துயரக்கடலில் தத்தளிக்கும்
என் காதல் பற்றி ஒவ்வொருவரிடமும் ஒரு கற்பனை இருக்கக்கூடும்..

அது ஒரு பொம்மை என்றோ
நிச்சயமான மாயை என்றோ
கைவிடப்பட்ட குழந்தை என்றோ
கானல் நீரின் அலைகள் என்றோ
சாத்தானின் நாடகம் என்றோ
தீயில் எரியும் தாமரை என்றோ
இறகுகள் பிய்ந்த பட்டாம்பூச்சி என்றோ
இறந்த கால கனவுகள் என்றோ
அல்லது
அது ஒரு காதலே அல்ல என்றோ
ஒவ்வொருவரிடமும் ஒரு கற்பனை இருக்கக்கூடும்..

காதல் என்னும் குருட்டு மிருகம் என்னை தின்னத்துவங்கிய
இந்த இரவில் முன்னுக்குப்பின் முரணான ஒரு கவிதையை
வேண்டா வெறுப்பாய் கிறுக்குகிறேன் நான்..

வலிகள் பூத்துக்குலுங்கிய இந்த இரவு
எங்கெல்லாமோ என்னை கொண்டு சென்று
என்னவெல்லாமாகவோ மாறி
ஆர்ப்பரித்து அறைகூவி சுற்றிச்சுழன்று
கடைசியில்
ஒரு போதிமரமாகிறது
நான் புத்தனாகிறேன்..

கவிதை ஆக்கம்:- நிந்தவூர் ஷிப்லி


Views: 2106

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.