2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கருணாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2017 மே 25 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிரான வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார, செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவேண்டியுள்ளதாகவும் அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், கோரப்பட்டதற்கு அமையவே, வழக்கு மேற்குறித்த திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சராக இருந்த காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்கு, கடந்த வருடம் நவம்பர் 29ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டு, அன்றைய தினமே கைதுசெய்யப்பட்டார். 

கைதுசெய்யப்பட்டு, அன்றையதினமே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசெம்பர் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை, தமது பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னரும் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்றும் மட்டக்களப்பில் வைத்து, அந்த வாகனம் மீட்கப்பட்டது என்றும் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வாகனத்தைப் பொறுப்பேற்றுமாறு, ஏற்கெனவே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக, கருணா தரப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .