2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

யாழ். மாணவர்கள் விவகாரம்: எதிர் ஆட்சேபனைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மேன்முறையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவுக்கு எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு, ஓகஸ்ட் 3ஆம் திகதியன்று குறித்தது.  

அந்த ஐந்து பொலிஸாரும், தங்களுக்கு எதிராக மேற்படி வழக்கை, வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களை தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.  

இதேவேளை, தங்களுடைய மேன்முறையீட்டு மனுக்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரையிலும், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  

இந்த ஐவரின் மேன்முறையீட்டு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவினால் (தலைவர்) பரிசீலனைக்கு நேற்று முன்தினம் எடுத்துகொள்ளப்பட்டபோதே, விண்ணப்பதாரர்களான பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, தங்களுடைய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கவும் எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கும் மற்றுமொரு திகதியை குறிக்குமாறும் கோரிநின்றனர்.  

துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும், டீ.சரத் பண்டார திசாநாயக்க, ஈ.எம். ஜயவர்தன, பி.நவரத்ன பண்டார, எஸ்.ஏ. சந்தன குமார பத்திரண மற்றும் தங்கராசா லக்ஷ்மனன் ஆகிய ஐந்து பொலிஸாரே, மேற்கண்ட மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.  

அந்த மனுவில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

மனுதாரர் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி திரயந்த வலலியத்தவின் வலிநடத்தலில் ஷசிக்கா மித்துனவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷானக்க விஜேசிங்கவும், படுகொலைச் செய்யப்பட்ட மாணவர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் ஆஜராகியிருந்தனர்.  

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக்கத்தில் பயின்ற, கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய இருவருமே, யாழ்ப்பாணம், கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து, 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியன்று, சுட்டுப் படுகொலைச்செய்யப்பட்டனர்.  

அவ்விருவரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், அரசியல் விஞ்ஞானம் மற்றும் ஊடகத்துறையை பயின்றுவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தாங்கள் ஐவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்று மற்றும் அழைத்துவரப்படுவதாகவும், அதனால், தங்களுடைய உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகையால், மேற்படி வழக்கை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களை தவிர்த்து ஏனைய நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .