2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘இந்திய ஆசிரியர்கள் தேவையில்லை’

George   / 2017 மே 24 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவரும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்றைய தினம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.  

இந்தத் திட்டத்தை கல்வி அமைச்சு கைவிடவேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கோரிக்கை விடுத்தார்.  

எனினும், இலங்கைக்கு கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறான வளமாகவே இந்த ஆசிரியர் திட்டமும் அமைந்துள்ளது என, கல்லவியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போதே, மேற்கண்டவாறு வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.  

“தோட்டப்பகுதிப் பாடசாலைகளுக்கு இந்தியாவிலிருந்து 100 ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவர் என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இது தோட்டப் பகுதியிலுள்ள கல்விகற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மலையகத்தில் கல்வி கற்றவர்கள் நிறையபேர் உள்ளனர்.  

“தோட்டப் பகுதியிலுள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால், உயர்தரம் கற்றவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கலாம். இதனை விடுத்து, இந்திய ஆசிரியர்களை வரவழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என, கனக ஹேரத் எம்.பி சுட்டிக்காட்டினார்.  

அத்துடன், இந்திய ஆசிரியர்களை அழைத்துவந்தால் அவர்களுக்கு தங்குமிட வசதி வழங்கவேண்டும். இதனால் செலவுகள் அதிகரிக்கும். சிலவேளை, கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கையின் ஓர் அம்சமாக இந்த திட்டம் உள்ளதா என்நு சந்தேகமாகவுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர், “தோட்டப்பகுதியிலுள்ளவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்தோம். ஆனாலும், ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் தீரவில்லை. இது பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். நாடளாவிய ரீதியில் 16 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மேலும், விஞ்ஞான பாடத்துக்கு இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, தோட்டப்புறத்தில் உள்ளவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்க யோசனை செய்யப்பட்டுள்ளது.  

“அத்துடன், ஏனைய பிரசேதங்களில் உள்ளவர்கள் தோட்டப்புறங்களில் சென்று சேவையாற்ற விரும்புவது குறைவாக உள்ளது. இதனால்தான் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைப்பது பற்றி யோசனை செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டால் அது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவியாகவே காணப்படும் அவர்களுக்கான செலவீனங்களை இந்திய அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். இதனால் எமக்கு செலவுகள் ஏற்படப்போவதில்லை. சேவைக் காலம் முடிந்ததும் அவர்கள் திரும்பிச்சென்றுவிடுவர்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .