2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு சவாலளிக்குமா பாகிஸ்தான்?

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்டானது, பிறிஸ்பேணில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் உள்ளடங்குகையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

தமது சொந்த மண்ணில் ஏனைய அணிகளைப் போன்று பலமானதாகவே அவுஸ்திரேலியா காணப்படுகின்றபோதும், அதிகம் பந்துகள் எழும்பி வரக்கூடிய பிறிஸ்பேர்ண் ஆடுகளத்தில் இம்ரான் கான், மொஹமட் அப்பாஸ் ஆகிய சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர்களையும், ஷகீன் ஷார் அஃப்ரிடி, நசீம் ஷா, முஹமட் மூஸா ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்ட பாகிஸ்தானின் பந்துவீச்சு வரிசையானது நிச்சயமாக அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர்களுக்கு சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் இம்ரான் கான், மொஹமட் அப்பாஸ், யசீர் ஷாவுடன் இளம் பந்துவீச்சாளர்களில் நசீம் ஷா இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் அசாட் ஷஃபிக், பாபர் அஸாம் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரவீரர்களாக காணப்படுகின்ற நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அணித்தலைவர் அஸார் அலியும் பிரகாசித்தாலே சவால் மிக்க ஓட்ட எண்ணிக்கைகளை பாகிஸ்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

மறுப்பக்கமாக அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில், அவ்வணியின் பந்துவீச்சு வரிசையானது பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன் என உறுதியாகவிருக்கின்ற நிலையில் துடுப்பாட்டப் பக்கத்திலேயே மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

டேவிட் வோணருடன் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக ஜோ பேர்ண்ஸ் களமிறங்கவுள்ளவேளை, மத்தியவரிசையில் ட்ரெவிஸ் ஹெட் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், குழாமுக்குள் கமரொன் பான்குரொப்ட், வெளியே குட்டிஸ் பட்டர்சன் ஆகியோர் காணப்படுகின்ற வேளையில், ஜோ பேர்ண்ஸும், ட்ரெவிஸ் ஹெட்டும் ஓட்டங்களைப் பெறவேண்டிய அழுத்தத்தில் காணப்படுகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் அவுஸ்திரேலியாவும், ஏழாமிடத்தில் பாகிஸ்தான் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் எந்த முடிவும் பாகிஸ்தானின் தரநிலையைப் பாதிக்காது.

மறுபக்கமாக, பாகிஸ்தானை 2-0 என வென்றால், நான்காமிடத்திலுள்ள தென்னாபிரிக்காவை ஐந்தாமிடத்துக்கு பின்தள்ளி நான்காமிடத்துக்கு அவுஸ்திரேலியா முன்னேறும். தவிர, 0-2 என பாகிஸ்தானிடம் தோற்றால், ஆறாமிடத்துக்கு அவுஸ்திரேலியா கீழிறங்க, ஆறாமிடத்திலுள்ள இலங்கை, ஐந்தாமிடத்துக்கு முன்னேறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .